பிறவிப்பெருங்கடலை எளிதில் கடக்கனுமா? தைப்பூசம் தெப்பத்திருவிழாவில் ஸ்வாமி தரிசனம் செய்யுங்க!

இன்று பழனி மற்றும் அனைத்து முருகன் கோயில்களிலும் தை பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது.
பிறவிப்பெருங்கடலை எளிதில் கடக்கனுமா? தைப்பூசம் தெப்பத்திருவிழாவில் ஸ்வாமி தரிசனம் செய்யுங்க!

இன்று பழனி மற்றும் அனைத்து முருகன் கோயில்களிலும் தை பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தை பூசத்தின் சிறப்புகளில் முக்கியமானது பல கோயில்களில் இன்று இறைவனும் இறைவியும் தெப்பத்தில் திருவுலா வருவதாகும். அதனைத் தொடர்ந்து சென்னையிலுள்ள திருமயிலை எனும் மயிலாப்பூர் அருள்மிகு  கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில் தெப்ப குளத்தில் தெப்ப உற்சவம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறுகிறது.  

தெப்பத்திருவிழா

தெப்பத்திருவிழா என்பது கோயில்களில் மிதவையில் இறைவனையும் இறைவியும் மிதக்கவிடும் திருவிழா ஆகும் பிறவியெனும் கடலில் விழுந்தவர்களை இறைவனின்  கருணையே தெப்பமாக இருந்து கரை சேர்ப்பதை அறியத்தருவதற்காக இவ்விழா நடைபெறுகிறது.

பெரிய ஆலயங்களில் ஆண்டுக்கு ஒரு முறை தெப்பத் திருவிழா நடைபெறும். இதற்கெனவே பெரிய தெப்பக்குளம் அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய தெப்பக்குளங்களின்  நடுவில் நீராழி மண்டபம் உண்டு. பிறவி என்னும் கடலில் விழுந்தவர்களைத் தன் கருணை என்னும் தெப்பத்தில் ஏற்றி முக்தி என்னும் கரையில் சேர்ப்பவன் இறைவன்  என்பதைத் தெப்பத் திருவிழா காட்டுவதாக ஐதிகம். “யாது நிலையற்றலையும் ஏழு பிறவிக்கடலை ஏறவிடும் நற்கருணை ஓடக்காரனும்’ என்று அருணகிரிநாதர் பாடுகிறார்.

தெப்பத்தின் அமைப்பு

தெப்பத்தை மிதக்க விடுவதற்கு முன்னே அதை அமைப்பதே ஒரு கலை. மிதப்பதற்கு வேண்டிய அடிப்பகுதியைத் தயார் செய்த பிறகு, மேலே மண்டபம் போல அமைத்து  அதை அலங்காரம் செய்கிறார்கள். கீழே தகரத்திலான பீப்பாய்களை வரிசையாக இணைத்து அவற்றின் மேலே மூங்கில்களையும் மரங்களையும் கட்டிப் பரப்பினால் தெப்பத்தின் அடிப்பரப்புத் தயாராகி விடுகிறது. அதற்கு மேல் கம்பங்களைக் கட்டி அணி செய்கிறார்கள். சித்திரத் தட்டிகளைச் சுற்றிலும் கட்டி, அலங்காரச் சிறிய மண்டபம்  ஒன்று மிதப்பது போன்ற தோற்றம் அளிக்கும்படி செய்து விடுகிறார்கள். மின்விளக்கு வரிசைகளையும் இணைக்கிறார்கள். கனம் குறைவான ஓட்டுப்பலகைகள் கொண்டு  தெப்பத்தின் தூண்கள், மேல்தளம் போன்றவை அமைக்கப்படுகின்றன. காரணம், பாரம் குறைவான பொருட்களால் தெப்பம் கட்டப்பட்டால்தான். அது நீரில் மிதக்கவும்,  எளிதாகச் செலுத்தப்படவும் முடியும்.

தெப்போற்சவம் எதற்காக?

தெப்போற்சவம் பெரும்பாலும் சித்திரை மாதத்தில் கோயில்களில் நடைபெறும் திருவிழாவாகும் என்றாலும் சில கோயில்களின் மரபுப்படி உத்திரயணத்தில் தை பூசத்தில்  தெப்ப விழா நடைபெறுகிறது. கோடை வெயிலின் தாக்கத்தை மறந்து குளக்கரையில் வசந்த ருதுவில் சில்லென இயற்கையின் குளுமையை தர சூரியனின் பரம  விரோதியான சுக்கிரனால்தான் முடியும். திருவிழா கொண்டாட்டம் மகிழ்ச்சி இதற்கெல்லாம் காரகர் சுக்கிரன்தாங்க!

மேலும் தெப்ப உற்சவம் நடக்கவேண்டுமென்றால் குளத்தில் நீர் நிறைந்திருக்கவேண்டும். ஊருக்கு நடுவே குளத்தில் நீர் நிறைந்திருந்தால் ஊரில் தண்ணீர் பஞ்சமே வராது.  வீட்டில் பணத்தை சிக்கனமாகச் செலவழித்தால் பணத்தட்டுபாடே வராது எனத் தண்ணீர் பணம் இரண்டிற்கும் காரகனான சுக்கிரன் விளக்கும்படியாக அமைந்ததுதான் தெப்பம்.

நாம் படும் பிரச்னை அனைத்திலிருந்தும் விடுதலை தருபவர் சுக்கிரன் தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். எந்தொரு பிரச்னையின் தீர்வை உற்று நோக்கினாலும்  அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தத்தில்  இருப்பவருக்கு மகிழ்ச்சியைத் தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன். என்னங்க! தெப்பத்தைப் பற்றி பேசிகொண்டிருந்தீங்க. திடீரென்று  சம்மந்தமே இல்லாம சுக்கிரனை பற்றி பேச ஆரம்பித்துவிட்டீர்கள்? அப்படின்னு யோசிக்கிறீர்களா? 

சுக்கிரனுக்கும் தெப்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்குங்க. வாகனத்திற்கு காரகன் சுக்கிரன்தாங்க. அதிலும் நீரில் மிதக்கும் சுகமான வாகனம் என்றால் சுக்கிரனை  தவிர யார் இருக்க முடியும்?

சொகுசு வாகன யோகம்

கால புருஷனுக்கு நான்காம் இடமாகிய கடகம் மாத்ரு ஸ்தானம் மற்றும் சுகம், வீடு வாகனம் ஆகியவற்றை பற்றி கூறும் பாவமாக அமைந்துள்ளது. கடக ராசி மாத்ரு  காரகனான சந்திரனின் ஆட்சி வீடு ஆகும். நாம் கருவில் இருக்கும்போதே நம்மை நமது அன்னை சுமந்துகொண்டே எல்லா இடங்களுக்கும் சென்றதால் நமது அன்னையே  நமது முதல் வாகனம் ஆகும். வாகனங்களின் காரகர் சுக்கிரன். பயணத்தின் காரகர் சந்திரன் அனைத்து நீர் நிலைகளுக்கும் காரகர் சந்திர பகவானே ஆகும். பயண  காரகராகிய சந்திரன் உச்சமாவது வாகன காரகனாகிய சுக்கிரனின் வீட்டில் என்பது குறிப்பிடத்தக்கது. இதிலிருந்து சந்திரன் மற்றும் சுக்கிரனின் தொடர்புகள் வாகனத்திற்கும்  பயணத்திற்கும் எவ்வளவு இன்றியமையாதது என தெரிந்துகொள்ளலாம். அதிலும் தெப்பம், கப்பல் போன்ற நீர் சம்மந்தமான சொகுசு வாகனம் என்றால் சந்திரன் மற்றும்  சுக்கிரனின் பலம் இருந்தால் மட்டுமே கைகூடும்.

ஆர்கிமிடிஸ் தத்துவமும் புணர்ப்பு தோஷமும்

மிதக்கும் ஒரு பொருளின் எடை அப்பொருளால் வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடைக்குச் சமமாக  இருக்கும். மிதக்கும் ஒரு பொருளின் ஈர்ப்பு மையம்  அப்பொருளால்  வெளியேற்றப்பட்ட திரவத்தின் ஈர்ப்பு மையம் இவ்விரண்டும் ஒரே செங்குத்துக் கோட்டில் அமையும். பொதுவாக, நீரை விடக் குறைவான அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மிதக்கின்றன. நீரை விட அதிக அடர்த்தியுள்ள பொருட்கள் நீரில் மூழ்குகின்றன. இறந்த மனிதனது உடல் நீரில் மிதப்பது, ஆர்கிமிடிஸ் தத்துவத்தின் அடிப்படையில் ஆகும்.  ஒரு பொருள் நீரில் மூழ்கும்போது அதனால் வெளியேற்றப்படும் நீரின் அளவு, அப்பொருளின் கன அளவிற்குச் சமமாக இருக்கும். இதுவே ஆர்கிமிடிஸ் தத்துவம் ஆகும்.

இந்த ஆர்கிமிடிஸ் தத்துவத்தை உற்று நோக்கினால் அதில் சனி-சந்திர சேர்க்கை நமக்கு புலனாகும். கனமான பொருட்களின் காரகர் கர்ம காரகர் எனப்படும் சனைச்சர  பகவான் ஆவார். ஒருவரின் கர்ம வினைகள் அதிகமாகும்போது இந்த வாழ்க்கை எனும் கடலில் முழுகி விடுவதையும், கர்ம வினை குறைய குறைய இந்த பிறவிக்கடலில்  நீந்திக் கரையேறிவிடுவதையும் குறிப்பதாகவே தோன்றுகிறது.  

அதேபோல ஒருவருக்கு ஜாதகத்தில் சனி-சந்திர சேர்க்கை ஏற்பட்டிருந்தால் வாழ்க்கை எனும் பயணத்தில் பல இன்னல்களை அடைவதைக் காணமுடிகிறது. இன்று சந்திரனின்  நாளான திங்கள் கிழமையில் சனியின் நட்சத்திரமான பூசத்தில் சந்திரபகவான் பயணம் செய்யும் நேரத்தில் புணர்ப்பு தோஷம் மற்றும் பிறவி கடலை கடக்க நமக்கு  உதவும்வண்ணம் தெப்பத்தில் உலா வருகின்றனர். பிறவிப்பெருங்கடலில் கரையேற முடியாமல் தத்தளிப்பவர்கள் ஆசைகளைத் துறந்து திருமயிலையின் சப்தஸ்தலங்களில் சனிஸ்தலமாக விளங்கும் திரு கபாலீஸ்வரர் ஆலயத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மற்றும் சுக்கிரனின் அம்சமான கற்பகாம்பாளை வணங்கி ஆசியோடு  கரையேறுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com