
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா இன்று காலை முதல் தொடங்கியுள்ளது.
இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்ய நாடுமுழுவதும் இருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்துள்ளனர்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1-ம் தேதியான இன்று முதல் 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதையொட்டி, 28 நாட்கள் சயன கோலத்திலும், 20 நாட்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் பக்தர்களுக்குக் காட்சியளிக்க உள்ளார்.
அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அனைத்தும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு கோபுர வாசல் வழியாக பொது, சிறப்பு தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கென பிரத்யேகமாக பேட்டரி கார்கள், சக்கர நாற்காலிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உள்ளூர் மக்கள் மேற்கு கோபுரம் வழியாக வந்து அத்திவரதரை தரிசனம் செய்யலாம். கோயில் வளாகத்தில் முதலுதவி அறை, ஆம்புலன்ஸ், குடிநீர்த் தொட்டி, காத்திருப்பு அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே தீயணைப்பு வாகனம், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவை தயார் நிலையில் உள்ளன.
அத்திவரதர் பெருவிழாவையொட்டி தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து மொத்தம் 20 சிற்றுந்துகள் இயக்கப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்துகளில் பயணித்து வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு வருவோர் பயணச்சீட்டு கட்டணமாக ரூ.10 செலுத்தி பயணிக்கலாம். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை இந்த சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளன.
வரதர் கோயில் மட்டுமில்லாமல் காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் வழியாக சிற்றுந்துகள் இயக்கப்படவுள்ளதால் பக்தர்கள் அனைத்து கோயில்களுக்கும் செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்காலிக பேருந்து நிலையத்தை வந்தடையும் பக்தர்கள் அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டி தகவல் பலகைகள், அத்திவரதர் கோயிலுக்குச் செல்லும் தூரம் உள்ளிட்டவை குறித்து தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
அத்திவரதரைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அரக்கோணம், சென்னை மற்றும் செங்கல்பட்டிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அத்திவரதர் கோயிலுக்குச் செல்ல மிக அருகில் நத்தப்பேட்டை ரயில் நிலையம் உள்ளது.