ஆஷாட நவராத்திரி: நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்க ஸ்ரீ வராகி தேவியை வணங்குவோம்!

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமும் வராஹி ஸ்வரூபமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல்  அகிலாண்டேஸ்வரி,
ஆஷாட நவராத்திரி: நீர் வளம் பெருகி விவசாயம் செழிக்க ஸ்ரீ வராகி தேவியை வணங்குவோம்!

நாளை (3/7/2019) புதன் கிழமை ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு திருமயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் ஆலயம் மற்றும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும்  சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன. முக்கியமாகப் பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமும் வராஹி ஸ்வரூபமாகவும் விளங்கும் திருச்சி திருவானைக்காவல்  அகிலாண்டேஸ்வரி, சென்னை சோழிங்கநல்லூர் அருள்மிகு பிரத்தியங்கிரா தேவி ஆலயம் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற வராகி அம்மன் குடியிருக்கும்  ஸ்தலங்களில் இன்றே ஆஷாட நவராத்திரி பூஜைகள் மற்றும் வராஹி நவராத்திரிக்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்தமும் நவராத்திரியும்..

நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்திலிருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக்கொண்ட சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளைச் சீர்படுத்தி  வைத்தார் ஆதி சங்கரர். அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது. 

இந்து மதத்தின் சிறப்புமிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களைப் போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்பு மிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது  நாட்களை நவராத்திரிகளாகக் கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு. ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.

வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி (பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி (ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

ஆஷாட நவராத்திரி (3.07.2019- 11.07.2019)

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சாந்திரமான காலக் கணித முறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை முதல் நவமி வரையிலான காலம்  ஆகும். ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது  விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.

பூமித் தாயே சூல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருதிக்கொள்கின்ற காலம். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும். விவசாயம் செழிக்க வளம்  பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருகப் பிரார்த்தனை  செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது. ஆஷாட நவராத்திரியில் அன்னையரை வணங்குவது சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்து விவசாயம் பெருகும்  என்பது நிதர்சனம்.

மேலும், பொதுவாகவே பெண் தெய்வங்களைக் குறிக்கும் கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ வராஹி அன்னை லலிதா பரமேஸ்வரியின் போர்ப்படைத் தளபதியாக விளங்குவதால் செவ்வாயின் அம்சமும் ஸ்ரீ வராஹி தேவியிடம் நிறைந்திருக்கிறது. 

ஸ்ரீ வராகி அம்மன்

பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில்  ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும். அம்பிகையின் அம்சமாகப் பிறந்ததால், இவள் சிவன், ஹரி, சக்தி என்ற மூன்று அம்சங்களைக்  கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள்.

சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருக பலமும், தேவகணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களைத் தாங்கிக் காப்பவள். பிரளயத்திலிருந்து உலகை  மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள். கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பன்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள்.

லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள்,  தீராத பகைகள் தீரும். வராக மூர்த்தியின் சக்தி. கறுப்பு நிறமானவர். பன்றியின் பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார்.

இவருக்கு ஆறு கரங்கள் காணப்படும். வலது கரங்களில் ஒன்று வரத முத்திரையிலிருக்கும். மற்றையனவற்றில் தண்டம், வாள் என்பன இடம் பெற்றிருக்கும். இடது  கரங்களில் ஒன்று அபய முத்திரையினைக் காட்ட மற்றைய கேடயம், பாத்திரம் என்பனவற்றினை ஏந்தியவாறு காணப்படும். இவர் எருமையை வாகனமாகக்  கொண்டிருப்பார். 

பன்றியின் முகத்தினை ஒத்த முகத்தைக் கொண்டிருப்பார். இவரது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு  கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும். சொப்பன வராகி மேக நிறமானவர். மூன்று கண்களைக் கொண்டிருப்பார். பிறைச் சந்திரனைச் சூடியிருப்பார். வாள், கேடயம்,  பாசம், அரிவாள் என்பன கரங்களில் இடம்பெற்றிருக்கும்

உழைப்பையும் உழவுத்தொழிலையும் குறிக்கும் கிரகம் சனைஸ்வர பகவானாவார். வராக (பன்றி) ரூபமான வராஹி பூமியை ஆழ உழுவதற்கு ஏற்ற சக்தியை அளித்து  விவசாயத்தைப் பெருக்குவதால் ஆஷாட நவராத்திரி வராஹி தேவிக்கு உரியதாக சாக்த சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம்,  அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க்கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது.

மேலும் அரூபமான தெய்வங்கள் அதாவது மனித உடலோடு வேறு உயிரினங்களின் தலைகளைக் கொண்ட தெய்வங்கள் ராகு மற்றும் கேதுவின் அம்சங்கள் நிறைந்தது  என்றும் ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. உதாரணமாக மனித உடலும் யானை முகமும் கொண்ட கஜமுகனை கேதுவின் அம்சமாக வணங்குகிறோம். எனவே விநாயகர்,  நரசிம்மர், பிரத்தியங்கிரா, ஸ்ரீ வராஹி அன்னை ஆகியவர்களை வணங்கினால் சர்ப்ப கிரஹ்ங்களின் தோஷங்கள் நீங்குவதோடு வாழ்வில் வெற்றி மேல் வெற்றி கிட்டும்  என்பது நிதர்சனம்.

சுற்றுச்சூழலும் ஜோதிடமும்

ஜோதிட ரீதியாக சுற்றுச்சூழலுக்குக் காரக பாவம் கால புருஷனுக்கு நான்காம் பாவமான கடகமும் அதன் அதிபதி சந்திரனுமே என்கிறது பாரம்பரிய ஜோதிட நூல்கள்.  என்றாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குக் காரகமான மரங்களுக்குக் காரக கிரகம் சுக்கிர பகவானே ஆகும். நமக்குத் தேவையான நீருக்குக் காரக கிரகங்கள் சுக்கிரனும்  சந்திரனும்தான். அதே போல மரங்களுக்கும் விவசாயத்திற்கும் காரக கிரகம் சுக்கிரன் தாங்க! 

கோள்களும் விவசாயமும்

கம்ப்யூடரில் (IT) வேலை செய்வதற்கும் கழனி காட்டில் வேலை செய்வதற்கும் காரக கிரகம் சுக்கிரன் தான் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. விவசாயத்திற்கு  சுக்கிரனே பிரதான கிரகம் என்றாலும் பன்னிரெண்டு ராசிகளை வீடுகளாகக் கொண்ட நவக்கிரகங்களுக்குமே விவசாயத்தின் வாழ்க்கை சுழற்சிக்குக் காரணமாகின்றது.

நில ராசிகளான ரிஷபம், கன்னி மற்றும் மகர ராசிகளும் அதன் அதிபதிகளான சுக்கிரன், புதன் மற்றும் சனி ஆகிய கிரகங்களே பயிர் விளைய ஆதாரமான நிலத்தைத் தந்து  பயிர் முளைத்தல் மற்றும் விளைதலைச் செய்கின்றது. ஜல ராசிகளான கடகம், விருச்சிகம் மற்றும் மீன ராசிகளும் அதன் அதிபதிகளான சந்திரன், செவ்வாய், மற்றும் குரு  ஆகிய மூவரும் பயிருக்குத் தேவையான நீராதாரத்தை அளிக்கின்றனர். 

நெருப்பு ராசிகளான மேஷம், சிம்மம் மற்றும் தனுசு ராசிகளும் அதனதிபதிகளான செவ்வாய், சூரியன் மற்றும் குரு விதைகள் மற்றும் பழங்கள் பழுக்கத் தேவையான  வெப்பத்தை அளிக்கின்றனர். காற்று ராசிகளான மிதுனம், துலாம் மற்றும் கும்ப வீடுகளும் அதன் அதிபதிகளான புதன், சுக்கிரன் மற்றும் சனி ஆகிய மூன்று கிரகங்களும்  பயிர் செழிப்பாக வளரவும் அதற்குத் தேவையான காற்று மற்றும் வெளிச்சத்தை அளிக்கின்றனர்.

தஞ்சையில் ஆஷாட நவராத்திரி

பொதுவாக ஆஷாட நவராத்திரி தானிய அபிவிருத்திக்காகச் செய்யப்படுவது. வட மாநிலங்களில் சில இடங்களில் பிரபலமாகக் கொண்டாடப்படுகின்றது. தமிழகத்தில், தானியக்  களஞ்சியமாக விளங்குகின்ற தஞ்சை மாநகரத்தில் அமைந்திருக்கக் கூடிய பிரகதீஸ்வர் கோயிலிலும் இன்று முதல் ஆஷாட நவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காகக் கொண்டாடப்படுகின்றது. வராஹி தேவி, தேவி புராணங்களின்படி ஸப்த  மாதர்களில் ஒருவராகவும், வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப்படுகின்ற தெய்வம். வார்த்தாளி  என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக்கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு  வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள்.

வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில்  வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக்கூடியவள். ஆஷாட நவராத்திரியின்  ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும்  வளமான வாழ்க்கையை நல்கும்.

சக்தி வழிபாடு என்பது நம் நாட்டிற்குரிய சிறப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா சுதந்திரம் பெற்றதும் ஆஷாட மாதத்தில் என்பதும், சுதந்திர தின ஜாதகத்தில்  விவசாயத்தைக் குறிக்கும் சுக்கிரனின் ரிஷப லக்னமாகி, நீர் ராசியான கடகத்தில் விவசாயத்தோடு தொடர்புடைய சந்திரன், சுக்கிரன், சனி இவர்களோடு பசுமைகாரகன்  புதனும் இணைந்து ஆத்மகாரகன் சூரியனோடு சேர்ந்து நின்றதால் இந்தியர்களின் ஜீவனம் விவசாயத்தை ஒட்டியே இருக்கிறது. எனவே இந்த வராஹி நவராத்திரியில்  வார்த்தாளியை வணங்கி கார்பரேட் வொயிட் காலர் ஜாபை விட்டுவிட்டு பொன்னேரு பூட்டி விவசாயத்தை வளர்க்க உறுதி பூணுவோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com