நீல வண்ண அரக்கு ஆடையில்  காட்சியளித்த அத்திவரதர்: 70,000 பக்தர்கள் தரிசனம்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி 2- ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.  
2-ஆவது நாளில் நீல வண்ண அரக்கு  பட்டு ஆடையில் காட்சியளித்த அத்திவரதர்.
2-ஆவது நாளில் நீல வண்ண அரக்கு பட்டு ஆடையில் காட்சியளித்த அத்திவரதர்.

அத்திவரதர் பெருவிழாவையொட்டி 2- ஆவது நாளான செவ்வாய்க்கிழமை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.  
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ள இவ்விழாவில் அத்திவரதரைத் தரிசனம் செய்ய நாடு  முழுவதிலுமிருந்து திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் வருகை தந்தவாறு உள்ளனர். 
40 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 6.10 மணியளவில் கதவு திறக்கப்பட்டு, அத்திவரதர் பக்தர்களுக்கு சர்வ தரிசனம் அளித்தார். தொடர்ந்து, இரவு 8 மணிவரை நடைபெற்ற அத்திவரதர் தரிசனத்தின் போது மட்டும் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் அத்திவரதரைத் தரிசித்தனர்.
சிறப்பு அலங்காரம்: 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை சுப்ரபாதம் பாடி அத்திவரதர் துயில் எழுப்பப்பட்டார். அத்திவரதர் 2-ஆவது நாளில் நீல வண்ண அரக்கு  பட்டு ஆடையில் பக்தர்களுக்கு தெய்வாம்சக் காட்சியுடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். தொடர்ந்து,  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு நைவேத்தியத்துக்குப் பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 
சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து  2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே வரதர் கோயிலின் வடக்கு மாடவீதியில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பின்பு, சரியாக 5 மணியளவில் கிழக்கு கோபுர வாசல் வழியாக இரண்டு வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுப்பப்பட்டனர்.
எந்தவித இடையூறுமின்றி சுமார் 40 நிமிடத்துக்குள் அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு மேற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியேறினர். 


தரிசித்த முக்கிய பிரமுகர்கள்...

2-ஆவது நாளன்று திருமலை பெரிய கேள்வியப்பன் ஜீயர், திரிதண்டி ராமாநுஜதாச ஜீயர்,  இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன்,  இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்டோர் முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று அத்திவரதரைத் தரிசனம் செய்தனர். 


அப்போது, சிறப்புத் தரிசன வரிசை அறிவித்ததற்கு இந்து முன்னணி எதிர்ப்புத் தெரிவித்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் அதை ரத்து செய்தது வரவேற்கத்தக்கது என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
உள்ளூர் மக்கள் தரிசனம்  
மாலை 5 மணியிலிருந்து 8 மணிவரை உள்ளூர் மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். முதல் நாளில் பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை அளித்ததால் கூட்டம் அதிகம் காணப்பட்டது. 2-ஆவது நாளில் பள்ளிகள் வழக்கம் போல் நண்பகல் 1.30 வரை செயல்பட்டன.
 இதனால், மாலையில் உள்ளூர் மக்கள் அதிகம் வரத்தொடங்கினர். அதன்படி, 2-ஆவது நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 
 முதல் நாளில் இருந்த சில அசௌகரியங்கள் 2-ஆவது நாளில் சரி செய்யப்பட்டு பக்தர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டதால் அத்திவரதரை பல்வேறு இடங்களிலிருந்து வந்தவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக தரிசனம் செய்தனர்.
மூலவரை தரிசனம் செய்ய ஏற்பாடு
அத்திவரதர் பெருவிழாவின் முதல் நாளில் கோயில் வளாகத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகளில் மேற்கு கோபுரம் வழியாக மூலவரை தரிசனம் செய்ய கெடுபிடிகள் இருந்தன.


 இதனால், பக்தர்கள் அத்திவரதரை மட்டும் தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர். மூலவரைத் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து, 2-ஆவது நாளில் வடக்கு மண்டல ஐஜி நாகராஜன்,  ஆட்சியர் பா.பொன்னையா, எஸ்.பி.சந்தோஷ் ஹதிமானி ஆகியோர் மூலவர் தரிசனம் செய்வதற்கு மேற்கு கோபுரத்திலிருந்து செல்லும் வகையில் பாதை ஏற்படுத்தினர். அதோடு, தகவல் பலகையும் வைக்க அறிவுறுத்தினர்.
இதையடுத்து அத்திவரதரை கிழக்கு கோபுரம், ஆழ்வார், தேசிகர் சந்நிதிகள் வழியாக வந்து அத்திவரதரை தரிசனம் செய்துவிட்டு மேற்கு கோபுர வாசலுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரத்யேக வரிசையின் மூலம் வரதராஜப் பெருமாளைத் தரிசனம் செய்தனர்.
 ஆழ்வார்,  தேசிகர் சந்நிதியையொட்டி பேட்டரி கார் இயக்கப்பட்டது. அதேபோல், முதியோர், மாற்றுத்திறனாளிகள் வஸந்த மண்டபம் அருகே அமைக்கப்பட்ட சாய்வு தளம் வழியாகச் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது
அத்திவரதர் பெருவிழாவையொட்டி சகஸ்ரநாம அர்ச்சனைக்கான ஆன்லைன் முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் இவ்விழாவில் பக்தர்கள் அத்திவரதருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்துகொள்ள மாவட்ட நிர்வாகமும், அறநிலையத் துறையும் ஏற்பாடு செய்துள்ளன. அதன்படி, வரும் 4-ஆம் தேதி முதல் சிறப்பு தரிசனம் வழங்கப்படுவதோடு, சகஸ்ரநாம அர்ச்சனையும் செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் தொடங்கியது. 
நாளொன்றுக்கு காலையில் 250 பேர், மாலையில் 250 பேர் வீதம் 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 11 முதல் 12 மணி வரையும், மாலை 5 முதல் 6 மணி வரையும் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். முன்பதிவு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே ரூ.500 மதிப்பிலான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
சகஸ்ரநாம தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் மேற்கு கோபுரம் வழியாக முக்கியஸ்தர்கள் செல்லும் தனிவரிசையில் அனுமதிக்கப்படுவர். மேலும், இதற்கான விதிமுறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட நகலில் தெரிவிக்கப்பட்டுள்ளன. www.tnhrce.gov.in  என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com