வெண்பட்டு, இளஞ்சிவப்பு பட்டாடையில் அத்திவரதர்: 45,000 பக்தர்கள் தரிசனம்

அத்திவரதர் பெருவிழாவின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை வெண்பட்டு, இளஞ்சிவப்பு பட்டாடைகளில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
4-ஆவது நாளில் வெண்பட்டு, இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.  
4-ஆவது நாளில் வெண்பட்டு, இளஞ்சிவப்பு நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.  


அத்திவரதர் பெருவிழாவின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை வெண்பட்டு, இளஞ்சிவப்பு பட்டாடைகளில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் 17 -ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு வெகுவிமரிசையாக நடைபெறவுள்ளது.
காலையில் வெண்பட்டு, மாலையில் இளஞ்சிவப்பு: 
வழக்கம்போல் அத்திவரதர் சுப்ரபாதம் பாடி துயில் எழுப்பப்பட்டார். வெண்பட்டு அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பிரத்யேக கோயில் இட்லி, லட்டு, வெண்பொங்கல் செய்து நைவேத்தியம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 
அதிகாலையில் வடக்கு, கிழக்கு மாடவீதிகளில் திரளான பக்தர்கள் குவிந்து, நீண்டவரிசையில்  காத்திருந்தனர். காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் 45 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்  செய்தனர். இரவு 8 மணிவரை அனுமதிக்கப்பட்ட தரிசன நேரத்தில் வழக்கமான உற்சவம் நடைபெற்றதால்  பக்தர்களின் வருகை சற்று குறைந்தது. 
சுமார் 3 லட்சம் பேர் தரிசனம்:  ஜூலை 1-ஆம் தேதி ஒரு லட்சம் பக்தர்களும், 2-ஆவது நாளில் 70 ஆயிரம், 3-ஆவது நாளில் 75 ஆயிரம்  பேருக்கு மேல் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, 4 -ஆம் நாளான வியாழக்கிழமை காலை 5 மணிக்கு  கிழக்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, 4 -ஆவது நாளில் 45 ஆயிரம் பேர் உள்பட இதுவரை சுமார் 3 லட்சம் பேர் அத்திவரதரை தரிசனம் செய்து ள்ளனர். 
பக்தர்களுக்கு உதவிக்கரமாய் காவலர்கள்: கோயிலின் கிழக்கு கோபுரம் முதல் மேற்கு கோபுரம் வழியாக பக்தர்கள் வெளியே செல்லும் வரை காவல் அதிகாரிகளுடன் திரளான காவலர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 
வரிசை தொடங்குவதிலிருந்து முடியும் வரை இடையிடையே காவலர்கள் நின்று பக்தர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் கண்காணிக்கின்றனர். சிரமப்படும் பக்தர்களுக்கு நீர் அளித்தல், சக்கர நாற்காலியில் அமரச்செய்து அனுப்புதல், விசிறி கொண்டு இளைப்பாறச்செய்தல், தேவையென்றால் மருத்துவக்குழுவினரை அழைத்து உதவுதல் என பல்வேறு உதவிகளை பக்தர்களுக்கு செய்துவருகின்றனர். இதனால், பக்தர்கள் நெகிழ்வுடன் காவலர்களுக்கு நன்றி தெரிவித்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். 
கடந்த 3 நாள்களை விட வியாழக்கிழமை காலை முதலே பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.  இதனால், பக்தர்களை 300-400 பேர் வரை செல்வதற்கு அனுமதித்து 4 இடங்களில் மட்டும் அவர்களைத் தடுத்து நிறுத்தி, தள்ளு முள்ளு இல்லாமல் தரிசனம் செய்ய அதிகாரிகள் உதவினர்.

ரூ.500-க்கான சிறப்பு தரிசனம் தொடக்கம்

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கென ஆன்லைனில் கடந்த 2 நாள்களாக ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆன்லைனில் முன்பதிவு செய்தோருக்கான தரிசனம் வியாழக்கிழமை தொடங்கியது. அதன்படி, நாளொன்றுக்கு இரண்டு வேளைகளில் 500 பேருக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், முன்பதிவு காரணமாக காலை 11 மணியிலிருந்து 12 மணி வரை 500 பேர், மாலை 5 மணி முதல் 6 மணிவரை 500 பேர் என மொத்தம் ஆயிரம் பக்தர்கள் ஆன்லைனில் ரூ.500 செலுத்தி தரிசனம் செய்தனர். சிறப்பு தரிசனம் மேற்கொண்டவர்கள் முக்கியஸ்தர்கள் செல்லும் வரிசையில் அனுமதிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு அத்திவரதர் பெருவிழா என அச்சிடப்பட்ட கைப்பையுடன் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. 
மாற்றுத்திறனாளிகள், முதியோர், தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு பேட்டரி கார், சக்கர நாற்காலி வழங்கப்பட்டு சிரமமின்றி தரிசனம் செய்தனர். அத்திவரதரை தரிசனம் செய்ததோடு மூலவரையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 உள்ளூர் மக்கள் ஜூலை 11-ஆம் தேதி வரை கூடுதல் நேரத்தில் தரிசனம் செய்ய இயலாது. இதனால், அவர்கள் 5 மணிக்குள் பொது தரிசன வழியில் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். 

கோடை உற்சவம் தொடங்கியது

அத்திவரதர் பெருவிழா 48 நாள்களுக்கு தொடர்ந்து நடைபெற உள்ள நிலையில் சுமார் 22 நாள்களுக்கு வழக்கமான உற்சவங்கள் நடைபெறவுள்ளன. இந்த உற்சவங்களைத் தங்குதடையின்றி மாலை வேளையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.


அதன்படி, மாலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை 8 நாள்களுக்கு கோடை உற்சவம் நடைபெறவுள்ளது. இந்த நாள்களில் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு நேரத்தில் அத்திவரதரை தரிசிக்க இயலாது. கோடை உற்வசத்தில் வரும் ஜூலை 11-ஆம் தேதி ஆனி கருடசேவை விமரிசையாக நடைபெறவுள்ளது. 
இந்த உற்சவத்தில் முதல் நாளான வியாழக்கிழமை வரதருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  திரளானோர் அத்திவரதர், மூலவர், உற்சவர் என மூவரையும் தரிசனம் செய்தனர்.  

இல.கணேசன் தரிசனம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்திவரதர் பெருவிழாவின் 4-ஆம் நாளான வியாழக்கிழமை பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் அத்திவரதரை தரிசனம் செய்தார். 
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நமது நாட்டில் பாரம்பரியமான சில பண்புகள், வழக்கங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. 
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகம், 60 மற்றும் 108 ஆண்டுகளுக்கு ஒருமுறை புஷ்கரம், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் பெருவிழா ஆகியவை சமூக ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில், பல்வேறு சமூகத்தினர் ஒன்றிணையும் விழாக்களாக உள்ளன. 
இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுதரிசனம் உள்ளது. இறைவனை தரிசனம் செய்ய கட்டணம் கூடாது என்றார் அவர்.

பக்தர்கள் வருகையைக் கணக்கிடும் கருவி நிறுவப்பட்டது 
கடந்த 3 நாள்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 
ஆனால், சரியாக எவ்வளவு பேர் தரிசனம் செய்தார்கள் எனத் தெரியவில்லை. இதனால், பக்தர்களைக்  கணக்கிடும் கருவி வரவழைக்கப்பட்டது. இந்தக்  கருவி, அத்திவரதர் வீற்றிருக்கும் வஸந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டுச் செல்லும் இடத்தில் மேற்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.  அதன்படி, எத்தனை பக்தர்கள் சென்றனர் என்பது அக்கருவியில் பதிவாகிவிடும். அதன்மூலம் பக்தர்கள் கணக்கிடப்பட்டனர்.  

சீருடையில் உள்ள காவலர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்ய அனுமதியில்லை
சீருடையில் உள்ள காவலர்கள் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியில்லை என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 4 நாள்களாக காஞ்சிபுரத்தில் அத்திவரதர் பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பொதுதரிசனம், ரூ.500-க்கான சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் திரளானோர் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். 
இதில், முக்கிஸ்தர்கள் வரும் வரிசையில் சீருடையில் உள்ள காவலர்கள், தங்களது குடும்பத்தினருடன் அனுமதிச் சீட்டு இல்லாமல் தரிசனம் செய்வதாக புகார் எழுந்தது.
இதனால், பொதுதரிசன பாதையில் வருவோர் அதிருப்திக்கு உள்ளானதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், அத்திவரதர் பெருவிழா நிறைவு பெறும் வரையில், சீருடையில் உள்ள காவலர்கள், தமது குடும்பத்தினருடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்யக்கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com