ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.53 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.53 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.


ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.3.53 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி வியாழக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.53 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.15 லட்சம் நன்கொடை 
ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

முடி காணிக்கை வருவாய் ரூ.6.01 கோடி
 ஏழுமலையான் முடி காணிக்கை வருமானம் ரூ.6.01 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை தேவஸ்தானம் ரகம் வாரியாக தரம் பிரித்து இணையதள ஏலம் மூலம் விற்று வருகிறது. இந்த ஏலம் மாதந்தோறும் முதல் வியாழக்கிழமை மாலையில் தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜு முன்னிலையில் நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஏலத்தில் 76,500 கிலோ தலைமுடி விற்பனையானதில் தேவஸ்தானத்திற்கு ரூ.6.01 கோடி வருமானம் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

64,363 பேர் தரிசனம்
 ஏழுமலையானை வியாழக்கிழமை முழுவதும் 64,363 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,031 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 
வெள்ளிக்கிழமை காலை 5 மணி நிலவரப்படி காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்கள் 20 மணிநேரத்திற்குப் பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானைத் தரிசித்துத் திரும்பினர். 
திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் 11,980 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 5,908 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 17,890 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 980 பக்தர்களும், கபில தீர்த்தத்தில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 3,908 பக்தர்களும் வியாழக்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.

ஏழுமலையானுக்கு  அபிஷேகம்
 ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி சிறப்பாக நடைபெற ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஆட்சி எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டி, தேவஸ்தான் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமை காலை அபிஷேகம் செய்வித்தார். அவர் தன் மனைவி சுவர்ணலதாவுடன் இணைந்து இந்த வழிபாட்டில் பங்கேற்றார்.
பின்னர் சுப்பா ரெட்டி செய்தியாளர்களிடரம் கூறுகையில், பருவ மழை தவறாமல் பெய்து விவசாயம் தழைத்தோங்க வேண்டும்; சாதாரண பக்தர்களுக்கு குறைந்த நேரத்தில் ஏழுமலையான் தரிசனம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com