சனி கிரகத்தின் ஆட்சிப் பிடியில் ஏற்படுத்தும் மாறுதல்கள்!

நவக்கிரகங்களில் பிரதான மற்றும் கால புருஷ தத்துவத்திற்கு 9, 10ஆம் இடமான தர்ம..
சனி கிரகத்தின் ஆட்சிப் பிடியில் ஏற்படுத்தும் மாறுதல்கள்!

நவக்கிரகங்களில் பிரதான மற்றும் கால புருஷ தத்துவத்திற்கு 9, 10ஆம் இடமான தர்ம, கர்ம ஸ்தானத்துக்கு  அதிபதியான, சனி கிரகம் 30 வருடம் எனும் ஒரு முழு கால  சூழலில் ஒவ்வொரு ராசியிலும், 2 1/2 வருடங்கள் இருந்து கடப்பது யாவரும் அறிந்த ஒன்று தான். எப்பொழுதெல்லாம் சனி கிரகம் ஜென்ம ராசிக்கு 12 , 1 (ராசி), 2ஆம்  இடங்களில் வந்து, ஒவ்வொரு ராசியிலும் 2 1/2 வருடங்கள் இருந்து, பின் கடக்கிறாரோ அந்த 7 1/2 வருட காலம் தான் ஏழரை நாட்டுச்சனி என்றும்  7 1/2 சனி என்றும்  கூறுவர்.

7 1/2 சனியின் காலத்தில் ஒரு ஜாதகரின் நிலை 

யாருக்கெல்லாம் 71/2 சனி நடக்கிறதோ, அப்போதெல்லாம் அந்த ஜாதகர், மிகவும் சோம்பேறியாக இருப்பார்கள். 71/2 சனி நடக்கும் காலத்தில், ஒருவர், ஒருமுகப்படுத்தும்  தன்மை பற்றாக்குறையாகவும் (lack of Concentration), குறைந்த ஞாபக சக்தி கொண்டவராகவும், சிறிய பணியாகினாலும்  அதனை செய்து முடிப்பதில் காலம்  தாழ்வு ஏற்படவும், இரத்த சோகை உடையவராயும்,சுத்தம் குறைந்தவராயும், அசுத்தமான சூழலில் வசிப்பவராயும், தம்மைச் சீர்படுத்திக்கொள்ளும் தன்மை குறைந்தவராயும்,  செயல் திறன் குறைந்தவராயும், நம்பிக்கை அற்ற எண்ண அலைகளை (pessimistic thoughts) கொண்டவராயும், நண்பர்கள் மற்றும் உறவினரிடம் வேறுபட்ட  கருத்து கொண்டவராயும், பொருளாதார சிக்கல் உடையவராயும், மகிழ்ச்சி அற்ற சூழலைக் கொண்டவராயும் இருக்க நேரிடும். 

ஒவ்வொருவரும், அவரின் வாழ்நாளில் மூன்று சுற்றுகள் 7 1/2 சனி காலத்தை அனுபவித்தே தீர வேண்டும். முதல் சுற்று ஒருவர்  தமது முதல் 30 வயதுக்குள் நடந்தே  தீரும், அதற்கு மங்கு சனி எனக் கூறுவார். இரண்டாவது சுற்று 30 வயதுக்கு மேல் வரும், அதனை, பொங்கு சனி என அழைப்பர். அடுத்து மூன்றாவது சுற்று சனியின் 7 1/2  சனி காலத்தை, மரண சனி என்றே கூறுவர். 

மங்கு சனி (7 1/2 சனியின், முதல் சுற்று - 30 வயதுக்குள் வருவது) இந்த சுற்றின் போது ஜாதகரின், குழந்தையின் ஆரோக்கியம் பாதிக்கப் படும். குடும்ப அங்கத்தினர்கள்  பேச்சை ஜாதகர் கேட்க மாட்டார், மேலும் ஒழுக்கக் கேடான நடவடிக்கைகளில் ஈடுபாடு கொள்ளுவார். கல்வி பயிலுபவராய் இருப்பின் அது ஏதோ ஒரு காரணத்தால்,  தடைப்படும். இந்த முதல் சுற்றில் ஜாதகரின் குழந்தைக்கு தான் பாதிப்பை ஏற்படுத்துமே தவிர, தந்தைக்கு (ஜாதகருக்கு ) அதிர்ஷ்டத்தையே தரும். பொங்கு சனி (7 1/2  சனியின், இரண்டாவது சுற்று) இந்த இரண்டாவது சுற்றில் , ஜாதகர் நன்றாக இருப்பார், ஆயினும் அவரின் (ஜாதகரின்) தந்தை, சனியால் பாதிப்படைவார். இந்த சுற்றில்,  ஜாதகர், அவருக்குரிய சொத்தை அடைவார் மற்றும் நல்ல நிகழ்வுகள் நடந்தேறும். 

மரண சனி ( 7 1/2 சனியின், மூன்றாவது சுற்று) இந்த சுற்றில் ஒரு ஜாதகர் நிச்சயம் அவரின் உடல் நலிவு ஏற்படும் மற்றும் மரணத்திற்கு இணையான துயரங்களை ஜாதகர்  அனுபவிக்க வேண்டி வரும். தசை , புத்தி இவைகள் ஜாதகருக்கு, சாதகமற்று இருக்கும் சூழலில் நிச்சயம் மரணம் கூட சம்பவிக்க நேரிடும். இந்த 7 1/2 சரியானது, மேலும் 3  கட்டங்களாகப் பிரியும். அதாவது சந்திரனின் நிலையிலிருந்து சனியின் இருப்பிடத்தை வைத்து. 12-ம் வீட்டில் அது விரைய சனியாக, முதல் வீட்டில் அது ஜென்ம சனியாக,   இரண்டாம் வீட்டில் அது குடும்ப சனியாக / பாதக சனியாக விவரிக்கப்படும். இவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம். 

முதல் கட்டம் (விரைய சனி)

எப்போது சந்திரன் நின்ற ராசிக்கு, 12ஆம் வீட்டில் சனி கிரகம் நுழைய ஆரம்பிக்கிறதோ அப்போதே சனியின் 7 1/2 சனியின் பாதிப்பு  துவங்க ஆரம்பித்து விடுகிறது. அதன்  இந்த முதல் கால கட்டமான 2 1/2 ஆண்டுகளே, விரைய சனியின் காலமாகும். இந்த கால கட்டத்தில் ஒரு ஜாதகர், பொருளாதார ரீதியாக மிகவும் துயர் அடைவார். பலன்  அற்ற பிரயாணங்கள், குறிக்கோள் அற்று சுற்றி திரிதல், கௌரவ இழப்பு மற்றும் கெட்ட பெயர் அடைதல் போன்றவை நடந்தேறும். குழந்தைகளுக்கு, ஒருமுகப்படுத்தும் தன்மை குறையவும், ஞாபக இழப்பு ஏற்படும். படிக்கும் பருவத்தினருக்கு, படிப்பில் நாட்டம் குறையும் மேலும் பெற்றோரை அவமரியாதை செய்யத் துவங்குவர். கடன், சொத்து  பறிபோதல், உறக்கமின்மை போன்றவை, எழும். பொருளாதார நலிவு மற்றும் பாதிப்பு ஏற்படினும் இவர்களுக்கு  பணம் ஏதேனும் ஒரு வழியில் வந்து வாழவே வைக்கும்.  இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளது, அதாவது, முதுகிலோ அல்லது தலையிலோ ஒரு காகம் தட்டி சென்றால் அப்போது இவர்கள் சனியின் பிடியில் சிக்குண்டதாகக்  கருதுவர்.  

இரண்டாவது கட்டம் (ஜென்ம சனி)

இரண்டாவதாக வரும், ஒருவரின் ஜாதகத்தில், ராசியில் நிற்கும் / வரும் காலமே ஜென்ம சனியின் காலமாகும். ஒருவரின் உடல்நிலை பாதிப்படையும், மனக்கவலை,  தம்பதியருள் அலட்சிய மனப்போக்கு, வேலை / வர்த்தகம் போன்றவற்றுக்கு, பிரச்னை, பதவி இறக்கம் அல்லது மேல் அதிகாரிகளுடன் பிரச்னை, பணியிட மாற்றம்  போன்றவை நிகழும். வீட்டை விட்டு, குடும்ப அங்கத்தினரை விட்டு விலகி இருக்கும் நிலை ஏற்படும். 

மூன்றாவது கட்டம் (பாத சனி / குடும்ப சனி சனி)

இது தான் 71/2 கடைசி கால சனியின் கட்டமாகும். குடும்ப அங்கத்தினரிடையே பிரச்னைகள், பொருளாதார பிரச்னைகள், கடுமையான சட்ட பிரச்னைகள், எதிர்பாராத  விபத்து, காலில் எலும்பு முறிவு / காயம் ஏற்படல் போன்றவை இந்த பாத சனி காலத்தில் ஏற்படும். அதுவே, ஒரு வீட்டில் இரு நபர்களுக்கு ஒரே சமயம் 7 1/2 சனியின்  பிடியில் இருப்பின் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரலாம். இதே விதி அட்டமத்து சனி எனப்படும் ராசிக்கு 8 ல் சனி வரும் காலத்திலும் ஏற்படும். இப்படி  உள்ளபோது இருவரில் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி, விடுதி அல்லது உறவினர் வீட்டில் தங்குவது இந்த மிகக் கெடுதலான பாதிப்புகளிலிருந்து காத்துக்கொள்ளலாம்.  இது ஏதோ விசித்திரமான ஒன்றாக நினைத்தாலும் அனுபவத்தில் இது வேலை செய்வதைக் காண முடிகிறது. 

வேறு சில சனியின் கால கட்டங்கள் (கண்டக சனி / அட்டமத்து சனி / அர்த்தாஷ்டம சனி )

சனியின் நிலைகளான, ராசிக்கு 12, 1, 2ஆம் நிலைகளைப்போல், ராசிக்கு 8ல் வரும் இரண்டரை காலம் அட்டமத்து சனி என்றும், ராசிக்கு 4ல் வரும் போது அர்த்தாஷ்டம சனி  என்றும் கூறப்படும். இந்த அட்டமத்து சனியின் காலமானது 7 1/2 சனியின் கால பாதிப்பை விட அதிகமாக ஏற்படுத்தும். சனியின் பிரவேசமான ராசிக்கு 4ல் வரும் காலம் அர்த்தாஷ்டம சனியின் காலம் (அர்தா = பாதி  மற்றும் அஷ்டம = 8) அஷ்டம சனியின் பாதிப்பில் பாதி தொல்லைகளைக் கண்டிப்பாக ஏற்படுத்தும். இதனைக் கீழுள்ள ஒரு  ராசிக்கட்டம் மூலம் அறியலாம். ஒருவரின், ராசிக்கு 7-ம் இடத்தில் வரும் சனியின் 2 1/2 கால இருப்பை கண்டக  சனி என்பர். இதுவும் ஓரளவு பாதிப்பினை ஏற்படுத்தும். 

இந்த அனைத்துவித சனி இருப்பின் கால கட்டத்திலும், கூறப்படும் சனியின் பெயரைப்பற்றி, ஒருவரின் ராசிக்கட்டத்தில் அமையும் விதத்தைக் காண்போம்.

சனியால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சில விதி விலக்குகள்
                                         
இந்த 7 1/2 சனி மற்றும் அட்டமத்து சனி எல்லாம் ரிஷப மற்றும் துலா ராசிக்காரர்களுக்கு பொதுவாக ஏதும் துன்பம் செய்வதில்லை, ஏனெனில், அவர்களுக்கு சனி, யோக  காரகன் ஆவார். அதே போல் மகர, கும்ப ராசிக்காரர்களுக்கும் பெரியளவு துன்பம் செய்வதில்லை ஏனெனில், சனி அவர்களுக்கு ஆட்சி வீடாக வருவதே. மேலும் துலா ராசி  சனியின் உச்ச வீடு என்பதாலும், கும்பம், சனியின் மூல திரிகோண வீடாவதாலும் இந்த ராசியில் பிறந்தவர்களும் அதிக அளவில் பாதிப்பை அடையமாட்டார்கள். ஆனால், மேலே சொன்ன இவர்களுக்கு, சனி பாதகாதிபதியாகவோ அல்லது வேதகனாகவோ வரும் பட்சத்தில் சிறிது பாதிப்பை அளிக்கவே செய்கிறார்.  
 
எப்போதெல்லாம், குருவின் தொடர்பு சனிக்கு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சனியின் பாதிப்பு குறைந்தே காணப்படுகிறது. அப்படி இருவருக்குள் உண்டான ஒரு வேதியியல்  பந்தம் (கெமிஸ்ட்ரி) என்றே சொல்லலாம். அதனால் தான் சனியின் பாதிப்புக்குள் ஆனவர்கள் ஏதேனும் ஒரு குரு / மகான் / சித்தர் வழிபாடு செய்வதினால், பாதிப்புகள்  நன்றாகவே குறைந்து காணப்படும். காரணம், அவர்களின் உண்மை நிலை (எந்த பெரிய அந்தஸ்து / பெயர் / புகழ் ) ஏதுவாகினாலும் அவர்களை நெறிப்படுத்துவதோடு  நல்லவர்களாக இருக்கச் செய்வதில் குருவின் பங்கு அதிகமாகிறது. 

சுக்கிரனின் நட்சத்திர சாரங்களான பரணி, பூரம், பூராடம் இவற்றிலும் மற்றும் சனியின் நட்சத்திரங்களான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காலில் கடக்கும் போதும்  அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. 7 1/2 சனியும், அஷ்டம சனியும் பெரிய அளவில் பாதிப்பை, சந்திரனின் 12, 1 மற்றும் 2ஆம் இடங்களிலும்; மேலும் சந்திரனுக்கு 8ஆம்  இடத்தில் வரும் சமயத்திலும், ஒரு ஜாதகருக்கு மேற்சொன்ன அந்த இடங்களில் சர்வாஷ்டக பரல்கள் அவரின் ஜாதகத்தில் 28க்கு மேல் பெற்றிருப்பின் அவர்களுக்கு  பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. தசை / புத்தி நல்ல நிலையில் உள்ளபோது பெரிய தீங்கு செய்வதில்லை என்றாலும் அவர்கள் பெற இருக்கும் நல்லவைகள் சற்று காலம்  தாழ்ந்து மற்றும் சிறிது போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கப் பெறுவர்.

மேஷம், கடகம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, நிறையப் பாதிப்பை ஏற்படுத்துவார். அதே சமயம் அவர்கள் சுக்கிரன் மற்றும் சனியின் நட்சத்திர சாரத்தில்  பிறந்திருப்பின் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தமாட்டார். நம் வாழ்வில் புடம் போட்ட தங்கமாக நம்மை மிளிரவைப்பதில் சனிக்கு நிகர் சனியே என்றால் அது மிகை  ஆகாது.                   
 

தோத்திர பிரியராம் சனி பகவானை பின் வரும் அகர வரிசை வகையில் (ம்+அ=ம ; ம்+ஆ=மா போன்று) தோத்திரம் செய்து எல்லா நலமும் பெறுவோம். 

சனி கிரக தோத்திரம்

மந்தன், கரியவன், கதிர்மகன், சௌரி 
நீலனெனும் சனி கிரக சகாயா போற்றி ! 1

மானிடரின் ஆணவத்தை மாற்றி அருள் 
மயமாக்கும் சனி கிரக சகாயா போற்றி ! 2

மிகு உச்ச, ஆட்சி பலமிருந்திடில் நலம் 
சேர்க்கும் சனிகிரக  சகாயா போற்றி ! 3

மீளாத வறுமைக்கு ஆளாகாமல் காக்கும்  குருவுக்கு   
நிகரானவனே சனிகிரக  சகாயா போற்றி ! 4

முக ரோகி, கால் முடவன், முது மகன் 
காரியன் எனும் சனிகிரக  சகாயா போற்றி ! 5

மூர்க்க குணம், கல் நெஞ்சம் முழுதும்  அழித்து   
அருள் புரியும் சனிகிரக  சகாயா போற்றி ! 6

மெதுவாக நடந்து ஒன்பது கோளில் 
ஆயுள் தரும் சனிகிரக  சகாயா போற்றி ! 7

மேல் நாட்டு மொழி கற்று மேதையாக 
மிளிர வைக்கும் சனிகிரக  சகாயா போற்றி ! 8

மை போன்ற கரிய நிறமாம் காக வாகன 
சனிகிரக  சகாயா போற்றி ! 9

மொழியாலே தோத்தரிக்கும் - வழியாலே 
வாழ்த்த வரும் சனிகிரக  சகாயா போற்றி ! 10

மோட்சம் தரும் வேதாந்த முறை பயில 
முன் வினை தீர் சனி கிரக சகாயா போற்றி ! 11

மௌனமாகி நினை தொழுதால் நலம் 
யாவும் தரும் சனி கிரக சகாயா போற்றி ! 12

மேலே சொன்னது அல்லாமல், ஏதேனும் ஒரு மகான் / சித்தர் வழிபாடு மற்றும் நமது கர்வம் ஒழிய மற்றவர்க்கு (எளியவர்க்கும் / வறியவர்க்கும்) செய்யும் சேவையினால் சனியின் பாதிப்பைக் குறையச்செய்யலாம். சாயியின் பாதம் பணிவோம், எல்லா நலமும் அடைவோம். 

- ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்

தொடர்புக்கு:  98407 17857

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com