நீல நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்!

அத்திவரதர் பெருவிழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை ராமர் நீல நிறத்திலான பட்டாடை உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நீல நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்!

அத்திவரதர் பெருவிழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை ராமர் நீல நிறத்திலான பட்டாடை உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 5 நாள்களில் மட்டும் சுமார் 4 லட்சம் பேருக்கு மேல் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.

அத்திவரதர் பெருவிழா தொடங்கி முதல் சனிக்கிழமை, வார விடுமுறை நாள் என்பதாலும் அதிகாலை வேளையிலிருந்து திரளானோர் காஞ்சிபுரம் வருகை புரிந்தனர்.

வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகமாக இருந்ததால் கோயில் சந்நிதி தெருவிலிருந்து கூட்டம் இரண்டு வழியாக பிரிக்கப்பட்டது. அதன்படி, கோயிலின் வடக்கு மாடவீதியில் அண்ணா நினைவு இல்லம் வழியாகவும், தெற்கு மாடவீதியில் ஆஞ்சநேயர் கோயில் வழியாகவும் பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதன்படி, கோயிலையொட்டி வந்த இவ்விரு வரிசைகளும் கிழக்கு கோபுர வாசல் வந்து சேர்ந்தன. அதுபோல், கிழக்கு மாட சந்நிதி தெருவிலிருந்து வரும் கூட்டமும் கிழக்கு கோபுரம் வந்தடைந்தது. இதனால், கோயிலுக்கு வெளியிலேயே 3 வரிசைகள் அமைக்கப்பட்டன. பின்பு, கிழக்கு கோபுர வாசல் வழியாக காலை 5 மணிக்கு அத்திவரதர் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராமர் நீல நிறப்பட்டாடையில் அத்திவரதர்: அத்திவரதர் பெருவிழா நடைபெறும் 48 நாள்களும் பல்வேறு நிறங்களில் பட்டாடைகள் உடத்திக்கொண்டு பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளார். அதன்படி, கடந்த 5 நாள்களில் மஞ்சள்,அடர் நீலம் அரக்கு, வெண்பட்டு, இளஞ்சிவப்பு,காவி ஆகிய வண்ணங்களில் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சியளித்தார்.

இதையடுத்து, 6-ஆம் நாளான சனிக்கிழமை காலை அத்திவரதரை துயில் எழுப்புவதற்கு சுப்ரபாதம் பாடப்பட்டது. பின்பு, ராமர்நீல நிற பட்டாடை அணிவிக்கப்பட்டு, முல்லை, செம்மலர், தாமரை, துளசி மாலைகளால் அலங்கரிக்கப்பட்டார். தொடர்ந்து, சுத்த அன்னம், பிரத்யேக கோயில் இட்லி, வெண்பொங்கல், தட்டு வடை நைவேத்தியம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தரிசனத்துக்கு 6 மணி நேரம் வரை: காலை முதல் கூட்டம் அலைமோதியதை அடுத்து காவலர்கள் அதிகம் பேர் குவிக்கப்பட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தி கிழக்கு கோபுரம் வழியாகச் சென்றனர்.

காலை 9 மணிக்கு கோயிலையொட்டி வடக்கு மாடவீதியில் நுழைந்த பக்தர்கள் சுமார் 11 மணிக்கு கிழக்கு கோபுரம் வந்தடைந்தனர். பின்பு, ஆழ்வார், தேசிகர் சந்நிதி வழியாக வஸந்த மண்டபத்தை அடைந்து அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு 3 மணி நேரம் ஆனது.

அதன்படி, அதிகபட்சமாக 6 மணி நேரமும், குறைந்த பட்சமாக 2 மணி நேரத்திலும் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். அதிக கூட்டம் காரணமாக காலையில் குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு மூலவர், உற்சவர் தரிசனம் நிறுத்தப்பட்டது.

குறிப்பாக, 200-300 பேர் வரை பகுதி பகுதியாக பக்தர்கள் நெரிசலின்றி அனுப்பப்பட்டனர். இதனால், கூடுதல் நேரம் ஆனாலும் சிரமமின்றி பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

1.16 லட்சம் பக்தர்கள் தரிசனம்

விடுமுறை நாள் என்பதால் சனிக்கிழமை 1.16 லட்சம் பக்தர்கள் வருகை தந்து அத்தி வரதரை தரிசனம் செய்தனர். இது கடந்த 6 நாள்களில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் வாகன நெரிசல்: அதிகாலை முதலே அதிக கூட்டம் வரதர் கோயிலைச் சூழ்ந்தது. காந்தி சாலையிலிருந்து வரும் வாகனங்களில் இருசக்கர வாகனம், சிற்றுந்து ஆகியவை ரங்கசாமி குளம் வழியாக அனுப்பப்பட்டு திருக்கச்சி நம்பி தெரு, அண்ணா நினைவு இல்லம் வழியாக பெரியார் நகர் பகுதிக்கு அதிகநேரம் காத்திருந்து ஊர்ந்து சென்றது.

நெரிசல் காரணமாக மேற்கு கோயில் சந்நிதி தெரு, அண்ணா நினைவு இல்லத்தையொட்டி பக்தர்களும், வாகனங்களும் ஒரு சேரச் சென்றதை காணமுடிந்தது. குறிப்பாக, ஆட்டோக்களை வாகன நெரிசல் உள்ள நேரத்தில் நகர்ப்பகுதிக்குள் அனுமதித்ததால் ஆங்காங்கே நின்று பயணிகளை ஏற்றினர்.

இதனால், மேலும் போக்குவரத்து நெரிசல் ஆனது. இதற்காக, ரங்கசாமி குளத்திலிருந்து சின்னகாஞ்சிபுரம் டோல்கேட் வரை காவலர்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் செயலில் ஈடுபட்டனர்.

எனவே, சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாள்களில் கூடுதல் காவலர்களை பணியில் ஈடுபடுத்தவேண்டும். நெரிசலுக்கு காரணமாக வாகனங்களை கோயிலையொட்டி செல்லும் சாலைகளில் அனுமதிக்கக்கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனுமதிச் சீட்டு இன்றி செல்லும் முக்கியஸ்தர்கள் அல்லாதோர்: பொதுதரிசன வரிசைக்கு அடுத்து முக்கியஸ்தர்கள் தரிசன வரிசை மேற்கு கோபுரம் வழியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முக்கியஸ்தர்களான அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், நீதிபதிகள் என நாள்தோறும் வருகை புரிந்து தரிசனம் செய்கின்றனர். அதோடு, கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள், அறநிலையத் துறையினர், காவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் என திரளானோர் வருகை புரிந்து முக்கியஸ்தர்கள் வரிசையில் சென்று வருகின்றனர்.

இதனால், பொதுதரிசனம் செய்வோர் முக்கியஸ்தர்கள் வரிசையில் அனுமதிச் சீட்டு இன்றி செல்வோரை பார்த்து, அனுமதிச் சீட்டு இல்லாமல் இவர்களை அனுமதிப்பது தவறு என்று போலீஸாரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

சிறிது நேரம் தரிசனம் நிறுத்தி வைப்பு: வழக்கமாக நடைபெறும் உற்சவங்களில் தற்போது கோடை உற்சவம் நடைபெறும் நாள்களில் ஜூலை 11, 15 ஆகிய நாள்களைத் தவிர, இதர நாள்களில் அத்திவரதரை காலை 5 முதல் இரவு 8 மணி வரை தரிசனம் செய்யலாம் என ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, 3 -ஆம் நாளான கோடை உற்சவத்தில் வரதருக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டு திருக்குடையின் கீழ் பட்டாச்சாரியர்கள் வேதம் முழங்க மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கோடை உற்சவத்தையொட்டி மாலை 5 மணியளவில் உள்பிரகாரத்திலிருந்து மேற்குகோபுரம் வழியாக ஆஞ்சநேயர் கோயில் வரை உற்சவர் வரதர் சென்றபோது சிறிது நேரத்துக்கு மட்டும் அத்திவரதர் நடைக்கதவுகள் அடைக்கப்பட்டன.

உற்சவர் வரதர் மீண்டும் கோயில் உள்பிரகாரத்துக்குச் சென்ற பிறகு, மீண்டும் அத்திவரதர் தரிசனம் தொடங்கியது. இதனால், சிறிது நேரம் அத்திவரதர் தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கூடுதல் நேரம் அறிவிப்புக்குப் பிறகு மாலையில் உள்ளூர் மக்களும் பொது தரிசன வரிசையில் வந்து அத்திவரதர், மூலவர், உற்சவரை தரிசனம் செய்தனர்.

காணாமல் போனவர்களுக்கு உதவிய கட்டுப்பாட்டு அறை: அத்திவரதரை காண சனிக்கிழமை அதிக கூட்டம் வந்தது. அதன்படி, தமிழகம், ஆந்திரம், வடமாநில பகுதிகள் என திரளானோர் வருகை புரிந்தனர். தரிசனம் செய்ய வரும்போதும், தரிசனம் முடிந்து திரும்பும் போதும் கூட்ட நெரிசலில் குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் வழிமாறிச் செல்ல நேர்ந்தது.

இதற்காக, ஏற்கெனவே மேற்கு கோபுரத்தையொட்டி ஒலிபெருக்கி அறிவிப்புடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. அங்கு, காணாமல் போனவர்கள் குறித்து காவலர்கள் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்ததால், குறைந்த பட்சம் 30 நிமிடங்களில், அதிகபட்சம் ஒரு மணி நேரத்தில் காணாமல் போனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து சேர்ந்தனர். அதுபோல், வேற்று மாநிலத்தவர்களை அழைக்க ஒலிபெருக்கி மூலம் அவர்களது தாய்மொழியில் அறிவித்தனர். அதன்படி, சனிக்கிழமை மட்டும் வழி தவறிச் சென்றோர் சுமார் 200-க்கும் மேற்பட்டோரை காவலர்கள் மீட்டு உதவியது குறிப்பிடத்தக்கது.

முக்கியஸ்தர்கள் தரிசனம்!

அத்திவரதர் பெருவிழாவில் 6-ஆம் நாளான சனிக்கிழமை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுதாகர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், பாரதிதாசன், ஸ்ரீதரன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், தமிழக முதல்வரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com