அத்திவரதர் பெருவிழா: இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்

அத்திவரதர் பெருவிழாவையொட்டி கடந்த 10 நாள்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதர் பெருவிழா: இதுவரை 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம்

 அத்திவரதர் பெருவிழாவையொட்டி கடந்த 10 நாள்களில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர்.
அத்திவரதர் பெருவிழா தொடங்கிய நாளிலிருந்து மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேருந்துகள், ரயில்கள், கார், வேன், விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் மூலம் நாள்தோறும் அத்திவரதரை காண பக்தர்களின் கூட்டம் வந்தவாறு உள்ளது. 
இதனால், நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துவருகின்றனர். அதன்படி, கடந்த 10 நாள்களில் மட்டும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். 
இளஞ்சிவப்பு நிறப்பட்டாடையில் அத்திவரதர்: 10 -ஆம் நாளான புதன்கிழமை இரண்டாவது முறையாக அத்திவரதருக்கு இளஞ்சிவப்பு நிறப் பட்டாடை அணிவித்து, மலர்கள், துளசி ஆகியவற்றில் அலங்கரித்தனர். தொடர்ந்து, நைவேத்தியம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, வஸந்த மண்டபத்தையொட்டி உள்ள வரிசைகளில் அத்திவரதரை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, ஆழ்வார் சந்நிதி, தேசிகர் சந்நிதிகள் வழியாக வந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
தரிசனத்துக்கு 5 மணிநேரம்: அத்திவரதரை காண வடக்கு, தெற்கு மாடவீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வந்த பக்தர்கள் அதிகபட்சமாக 5 மணிநேரத்திலும், குறைந்த பட்சம் 2 மணி நேரத்துக்குள்ளும் தரிசனம் செய்தனர்.
பொது தரிசனத்துக்கு 3-ஆவது வரிசை: அத்தி வரதரை தரிசனம் செய்ய வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாக காணப்பட்டு வருவதால் அடுத்தடுத்து சில ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அதன்படி, புதன்கிழமை முதல் தரிசன நேரம் அதிகாலை 5 மணிமுதல் இரவு 10 வரை நீட்டிக்கப்பட்டது. இதனை உள்ளூர், வெளியூர் வாசிகள் வரவேற்றனர். ஏற்கெனவே கிழக்கு கோபுரத்திலிருந்து 2 பொது தரிசன வரிசையோடு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், தாய்மார்களுக்கென பேட்டரி கார் செல்லும் வழியில் ஒரு வரிசை ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, அதிக கூட்டம் வருவதையொட்டி ஆழ்வார் சந்நிதி அருகே மேலும் ஒரு தரிசன வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வஸந்தமண்டபம் அருகே வரும் போது பொது தரிசன வரிசைக்குள்ளும் ஒற்றை வரிசை அமைக்கப்பட்டு பக்தர்களை காவலர்கள் அனுப்பி வைத்தனர். 
கொட்டும் மழையில் தரிசனம்: அத்திவரதர் பெருவிழா தொடங்கிய ஒரு சில நாள்களில் லேசான மழை இருந்தது. புதன்கிழமை மாலை சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் காஞ்சிபுரத்தில் கனமழை பெய்தது. அப்போது, வரிசையில் காத்திருந்த பக்தர்கள் மழையில் நனைந்தவாறும், மழையை வரவேற்றும் அத்திவரதரை தரிசனம் செய்தனர். 
வடக்கு, கிழக்கு கோபுரம், உள்பிரகாரங்களில் பந்தல்கள் அமைத்துள்ளதால் மழையால் பாதிப்பின்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர். 
1.50 லட்சம் பேர் தரிசனம்: அத்திவரதர் பெருவிழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை மட்டும் மொத்தம் 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோடை உற்சவத்தில் வரதர் 
வரதர் கோயிலில் கோடை உற்சவத்தின் 7-ஆம் நாளான புதன்கிழமை மாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், திருக்குடையின் கீழ் பட்டாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க, உற்சவர் மேற்கு கோபுர சந்நிதி தெரு, உள்பிரகாரங்களில் பவனி வந்தார். 
அத்துடன் நான்கு கால் மண்டபம் அருகே இளைப்பாறுதல் சேவையும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, வியாழக்கிழமை ஆனி கருட சேவை விமரிசையாக நடைபெறவுள்ளது. 

கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
அத்திவரதர் பெருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியது: அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதால், பாதுகாப்பைப் பலப்படுத்தும் வகையில், மாநிலத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் 6 பேர், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் 35 பேர், காவல் ஆய்வாளர்கள் 75 பேர், உதவி ஆய்வாளர்கள் 150 பேர் மற்றும் சிறப்புக் காவல் படை, ஊர்க்காவல் படையைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான காவலர்கள் ஆகியோர் வியாழக்கிழமை (ஜூலை 11) முதல் அத்திவரதர் பெருவிழா நிறைவு பெறும் வரையில் கூடுதல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.  

நாளை அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் வருகை
 அத்திவரதரை தரிசிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) வருகை தரவுள்ளார்.
குடியரசுத் தலைவர் வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பச்சையப்பன் ஆடவர் கல்லூரி வளாகத்தில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் புதன்கிழமை நடைபெற்றது. குடியரசுத் தலைவர் வெள்ளிக்கிழமை நண்பகலில் வருகை தரவுள்ளதால், அந்த சமயம் பக்தர்கள் தரிசனம் செய்யும் நேரத்தில் சிறிது மாற்றம் இருக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்திவரதரை தரிசனம் செய்த ஸ்ரீவிஜயேந்திரர்
காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை  அத்திவரதரை தரிசனம் செய்தார். 
விஜயேந்திர சரஸ்வதி சுவாமியுடன் காஞ்சி சங்கர மட ஆஸ்தான நிர்வாகிகள், சேவகர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரும் வந்தனர். இதனால், முக்கியஸ்தர்கள் வரிசையில் அதிக கூட்டம் காணப்பட்டது. அத்திவரதரை தரிசனம் செய்த பக்தர்கள் பீடாதிபதி விஜயேந்திரரிடமும் ஆசி பெற்றனர். 
அத்திவரதரை தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் பீடாதிபதி கூறியதாவது: புகழ்பெற்ற காஞ்சி நகரத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவன் பெருமாளை பூஜித்த திவ்ய úக்ஷத்ரமாக வரதராஜப்பெருமாள் கோயில் விளங்குகிறது.
பிரம்மா செய்த யாக குண்டத்திலிருந்து தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிப்பவர் வரதராஜ சுவாமி. இயற்கையாகவே புன்முறுவலுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அத்திவரதர். 1979-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வெகுவிமரிசையாக அத்திவரதர் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 
இந்த சமயத்தில் 48 நாள்கள் என்பது ஒரு மண்டல காலம் என்பர். இதில், பக்தியோடு விரதங்கள் கடைப்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி, அத்திவரதர் 48 நாள்களுக்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வை பேறாகக் கருதவேண்டும்.
புராதன பிரசித்தி பெற்ற பெருமாளை உணர்ந்து பக்தி பரசவத்துடன் தரிசனம் செய்து பக்தர்கள் பெரும் பேறு பெறவேண்டும். அத்திவரதர் அருளால் நன்கு மழை பெய்யவேண்டும். அனந்தசரஸை போன்று அனந்த விகாஸ் எனும் அளவற்ற வளர்ச்சியை விவசாயிகள், பொதுமக்கள் பெற்று மகிழ்வுடன் வாழவேண்டும். அத்துடன், சேவை மனப்பான்மையும் மேன்மேலும் வளரவேண்டும் என்றார் விஜயேந்திரர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com