
ஏழுமலையானை தரிசித்துத் திரும்பிய தர்மா ரெட்டிக்கு ஏழுமலையான் படத்தை வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.
ஏழுமலையானிடம் நான் வைத்த வேண்டுதல்தான் என்னை மீண்டும் திருப்பதி தேவஸ்தானப் பணியில் இணைத்துள்ளது என்று தேவஸ்தான சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்ற தர்மா ரெட்டி தெரிவித்தார்.
ஆந்திர அரசால் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட அவர் ஏழுமலையான் சந்நிதியில் வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தேவஸ்தானத்தின் திருப்பதி பிரிவு செயல் இணை அதிகாரி பசந்த்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதற்கு முன் தன் குடும்பத்தினருடன் ஏழுமலையானைத் தரிசித்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கினர்.
பதவியேற்ற பின் தர்மா ரெட்டி , செய்தியாளர்களிடம் கூறியது:
ஏழுமலையானுக்கு சேவை செய்ய எனக்கு மூன்றாவது முறையாக வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டில் நான் தேவஸ்தான சிறப்பு அதிகாரி பணியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது மிகவும் வேதனையடைந்தேன். அப்போது, மீண்டும் எனக்கு சிறப்பு அதிகாரியாக சேவை செய்ய வாய்ப்பளிக்குமாறு என்று வேண்டிக் கொண்டேன்.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் அண்மைக்காலம் வரை திருமலையில் பணிபுரிய மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வது என் தினசரி வழக்கமானது. அதன் பலனாக எனக்கு இந்த வாய்ப்பு மீண்டும் கிடைத்துள்ளது. தேவஸ்தான அறங்காவலர் குழு, அதன் தலைவர், செயல் அதிகாரி, கோயில் இணை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்து பக்தர்களின் தேவையை நிறைவேற்றுவேன் என்றார் அவர்.