சுடச்சுட

  
  MAYILGREEN

  அத்திவரதர் பெருவிழாவின் 13-ஆம் நாளான சனிக்கிழமை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
   சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்பதாலும், மாதத்தின் 2-ஆவது சனிக்கிழமை என்பதாலும் அத்திவரதரை தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் வரதர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை இரவு முதலே வரத்தொடங்கினர்.
   தெற்கு, வடக்கு, கிழக்கு மாடவீதிகளில் வரிசையில் வந்த பக்தர்கள் கிழக்கு கோபுரம் வழியாக அதிகாலை 4.30 மணி முதல் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
   மயில் பச்சை நிறத்தில் அத்திவரதர்: அத்திவரதருக்கு சனிக்கிழமை மயில் பச்சை நிறத்தில் பட்டாடை அணிவித்து, மலர்கள், துளசி ஆகியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டது. நைவேத்தியம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
   தரிசன வரிசை மாற்றியமைப்பு: பக்தர்களின் வருகை சனிக்கிழமை அதிகம் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிழக்கு கோபுர நுழைவு வாயிலின் இடது புறம் தூய்மைப்படுத்தப்பட்டு, அங்கு விரைவாக மேற்கூரை அமைக்கப்பட்டது.
   பின்பு, குறுக்கு நெடுக்காக சுமார் 10 பொது தரிசன வரிசை ஏற்படுத்தி, பக்தர்கள் செல்லுமாறு மாற்றியமைக்கப்பட்டது.
   இதனால், கிழக்கு கோபுரத்திலிருந்து ஆழ்வார் சந்நிதிக்குச் செல்லவே சுமார் 4 மணி நேரம் ஆனது.
   அங்கிருந்த மருத்துவ முகாம் கிழக்கு கோபுரத்தின் வடக்கு பகுதியில் மாற்றிமைக்கப்பட்டது.
   புதியதாக அமைக்கப்பட்ட வரிசையில் பக்தர்களின் தாகம் தீர்ப்பதற்கு தன்னார்வலர்கள் வரவழைக்கப்பட்டு ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது.
   ஆனால், மின்விசிறிகள் இயங்காததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
   வழக்கத்துக்கு மாறாக சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் வரை மாடவீதிகளில் கடுமையான நெரிசல் காணப்பட்டது.
   இதனால், வடக்கு மண்டல ஐஜி நாகராஜன், டிஐஜி தேன்மொழி, சார்-ஆட்சியர் சரவணன் உள்ளிட்டோர் நேரடியாகச் சென்று பக்தர்களை ஒருங்கிணைத்தனர்.

  நேரம் நீட்டிப்பு...
   அத்திவரதரைக் காண வடக்கு, தெற்கு மாடவீதிகளில் சனிக்கிழமை நீண்ட வரிசையில் காத்திருந்து வந்த பக்தர்கள் அதிக பட்சமாக 7 மணிநேரத்திலும், குறைந்த பட்சமாக 3 மணிநேரத்திலும் தரிசனம் செய்தனர். தரிசனம் முடியும் நேரமான இரவு 10 மணிக்கு பக்தர்கள் அதிகளவில் காத்திருந்ததால் நள்ளிரவு 1 மணி வரை அத்திவரதரை தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டது.
   உச்சநீதிமன்ற நீதிபதி, அமைச்சர்கள் தரிசனம்
   13-ஆம் நாளான சனிக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் நடராஜன், மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தலீலா, கூடுதல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றங்களின் நீதிபதி கபீர், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சமூக நலத்துறை அமைச்சர் வி.சரோஜா, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, நடிகர் விவேக் ஆகியோர் வரிசையில் வந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
   
   
   
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai