உங்களுக்கு வரப்போகும் கணவன் / மனைவி நல்லவரா! கெட்டவரா!!

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது பல நாடுகளில் அதிகரித்துள்ளது..
உங்களுக்கு வரப்போகும் கணவன் / மனைவி நல்லவரா! கெட்டவரா!!

இன்றைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது பல நாடுகளில் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் மேலை நாடுகளைப்போலவே தற்போது இந்தியாவிலும்  நடைபெறுவது மிகவும் கொடுமையாகவே உள்ளது. இதற்கான காரணங்கள் பலவாக இருப்பினும் அதனை ஜோதிடம் மூலம் தவிர்க்க இயலும் என்பதே எங்களைப் போன்ற  ஜோதிடம் பயின்றவர்கள் கருத்தாகவே உள்ளது. 

எப்போது முதல் திருமணம் முறிவு பெறுகிறதோ அல்லது முறியும் நிலையில் உள்ளதோ, அப்போதே அடுத்த திருமணம் வாய்ப்பு / யோகம் உள்ளதா என அறிய  முற்படுவது சகஜமே. அதில் தவறென்று கூறுவதற்கில்லை, ஆனால் ஒரு பெண்ணை மனைவியாக அடைவதற்கு முன்னரே தனது நிலையைப் பற்றியும் (மனம், உடல்  சார்ந்த) மற்றும் தமக்கு வரப்போகும், மனைவியாகப் போகும் பெண்ணைப் பற்றியும் (மனம், உடல் சார்ந்த) அறியாமல் இருப்பது சற்று நெருடலாகவே உள்ளது. அதிலும்  பெண்ணை பெற்றவர்கள் படும் பாடு, ஏன் சில இடங்களில் பெண்ணால் (திருமணம் செய்து கொண்ட ஆண்) படும் துயர் சொல்ல முடியாது. இரண்டாவது  திருமணத்திற்காக ஜோதிடரை நாடும் பலர் முதல் திருமணத்தின் போது மிகவும் அவசரகதியில் எடுத்த முடிவாக இருந்தது என்பதனை அவர்களாகவே (திருமணம் செய்து  கொண்ட மணமக்கள் / திருமணம்  செய்து வைத்த பெற்றோர்கள்)  ஒத்துக்கொள்வதாய் உள்ளது. 

ஜோதிடம் என்பதனை கூறுவது ஒரு ஜோதிடராக இருப்பினும் இவற்றைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இவற்றை செவ்வனே எழுதி வைத்து , எதிர்கால சமுதாயத்துக்கு  நல்வழிப் படுத்த நினைத்த முனிவர்களையும், ஜோதிட ஆசான்களையுமே சாரும். ஜோதிடத்தைத் தெளிவாகப் படிக்கும் எவரும் இதனைப் பயன் படுத்தி வருங்கால  சமுதாயத்திற்குக் கவலையற்ற / களங்கமற்ற இல்லறவாழ்வு வாழ வைக்க முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஏதாவது ஒரு காரணத்தால், விவாக ரத்தினால்  மட்டுமே இரண்டாவது திருமணம் நிகழ்வது இல்லை. முதல் மனைவி இருக்கும் போதே , அவர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே , இரண்டாவது திருமணம் செய்து  கொள்பவர்களையும் காணவே முடிகிறது. இதற்கு மூலகாரணம் என்னவென்று எடுத்துரைப்பதே ஜோதிடம். அதுவே இந்த கட்டுரையின் நோக்கம்.

இரண்டாவது திருமணம் பற்றி ஒருவரின் ஜாதகத்தை வைத்தே கணிப்பது எப்படி? இதற்குள் செல்வதற்கு முன், முதலில் சில விவரங்களைப் பார்ப்போம்.

ஜாதகத்தில் முதல் வீடு / லக்கினம் 

ஜாதகரைப் பற்றி அவரின் தோற்றம், சுபாவம் போன்றவற்றைத் தெளிவாக்கும். இங்கு சரியான சுபாவம் பெற்றோரும் வேறு சில அமைப்புகளில் சரியில்லாததால், சரியில்லாத  நேரத்தில் தவறிழைக்கக் காரணம் ஆகிறார்கள். அவற்றை விரிவாகக் காண்போம். 

ஜாதகத்தில் லக்கினத்திற்கு அடுத்த வீடு / இரண்டாம் வீடு

வரப்போகும் மனைவி / கணவன் குடும்ப வாழ்க்கை மற்றும் ஜாதகரின் குடும்ப வாழ்வில் வாழும்  கால நேரம் போன்றவற்றைத் தெளிவாக்கும். 

ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7 ஆம் வீடு

திருமண வாழ்வு, கணவன் மனைவிக்குள்ளான அன்னியோன்னியம் 

ஜாதகத்தில் லக்கினத்திற்கு 8 ஆம் வீடு  (இரண்டாம் வீட்டிற்கு 7 ஆம் வீடு)

கெட்ட வீடு, இரண்டாம் திருமணத்தைக் குறி காட்டும் துணை நிற்கும், வீடு. 

ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9 ஆம் வீடு 
இரண்டாம் திருமணத்தைப் பற்றிக் கூறும் / குறி காட்டும் பிரதானமான இடம்.

  • சுக்கிரன் நிலை- ஆணின் ஜாதகத்தில், வரப்போகும் மனைவியைப் பற்றிக் கூறும் கிரகம்.
  • குருவின் நிலை-  பெண்ணின் ஜாதகத்தில், வரப்போகும் கணவரைப் பற்றிக் கூறும் கிரகம்.

இரண்டாவது திருமணத்திற்கான யோக நிலைகள் :-

* உபய  ராசியில் 7 ஆம் அதிபதி இருந்தாலோ, அல்லது 7 ஆம் வீடு உபய  ராசி ஆனாலோ, (அதாவது, மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம்)

* ஏழாம் வீட்டில் சனி, புதன் இணைந்து இருந்து, மேலும் வேறு ஏதேனும் இரு கிரகங்கள் 11 ஆம் வீட்டில் இருந்தால், அப்படிப்பட்ட ஜாதகர் இருமுறை திருமணம் செய்ய  நேரிடும். இந்த அமைப்பில் கேது ஏதாவது ஒரு வழியில் / வகையில் தொடர்பு பெறுமாயின் ; அந்த இரண்டாவது திருமணம் ரகசியமாகவே நிகழ்ந்தேறும். 

* ஒருவரின் ஜாதகத்தில், 7 ஆம் அதிபதி, 6, 8, 12 ஆம் இடங்களைத் தொடர்பு பெறும் போது, மேலும் அவ்வாறு தொடர்பு பெறும் இடங்கள் உபய ராசியாகும் போது அது நிச்சயம் இரண்டாம் திருமண யோகத்தை அளிக்கும். 

* 7ஆம் அதிபதி ராசி சக்கரத்திலும் (D -1), நவாம்ச சக்கரத்திலும் ( D -9) மிகவும் பாதிப்பு அடைந்திருந்தால், இரண்டாம் திருமண யோகத்தை அளிக்கும். 

இவை ஒரு சிலவே, இவ்வாறு ஒருவரின் ஜாதகத்தில் இரண்டாம் திருமணம் செய்யும் யோகம் இருக்கும் போது எப்படி  இதனை கவனியாமல் ஒரு ஜாதகருக்கு திருமணம் செய்விப்பது ? இப்போது சில பெற்றோர்கள் தமது பெண்ணுக்குத் திருமணம் ஆனால் போதும்  என்கிற நிலையில், திருமணப் பொருத்தம் பார்ப்பதையே நிறுத்தி விட்டு பையன் வீட்டார் பார்த்துச் சொல்வதையே ஏற்று திருமணம் நடத்தி வைக்கின்றனர். இதில் இருவகையான குற்றங்கள் உள்ளது. அதாவது பெண்ணின் மீது ஏதாவது குற்றம் இருக்கும் அல்லது ஏதாவது காரணத்தால், வெகு நாட்களாகியும் திருமணம் நடவாமல் இருந்திருக்கும். அடுத்ததாக ஆண் வீட்டில் பொருத்தம் சரியாகத்தான் பார்த்திருப்பார்கள், அவர்கள் சரி என்று சொன்னால் நாமும் சரியென்று சொல்லிவிடுவோம் என்பதாகும். 

இதே சமயம் ஆண் வீட்டில் பொருத்தம் பார்க்கும் போது அதில் பெண்ணுக்கு ஏதாவது தோஷம் இருக்கிறதா, அதனால் நமது பையனுக்கு ஏதாவது தீங்கு நேருமோ என்று மட்டும் பார்க்கிறார்களே தவிர தமது பையனின் ஜாதகத்தால் பெண்ணிற்கு ஏதாவது தீங்கு நேருமோ என்று பார்ப்பதில்லை. சிலர் பையனின் தவறுகளை மறைத்து விடுகின்றனர். கூடிய விரைவில் இந்த திருமண தம்பதியரிடம் உண்மை சொரூபம் தெரியவந்து அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு திருமணப் பந்தத்திலிருந்து விளங்குகின்றனர். அல்லது சிறிது காலத்தில் அந்த பெண் காலமாகி விடுகிறார். அவ்வளவுதான், அதனை அனைவரும் மறந்து அந்த பையனுக்கு இரண்டாவது பெண் பார்க்கும் படலம் துவங்கி விடுகிறது. பெண் வீட்டில், அவளுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவே என்று சொல்லி அவரவர் வேலையைத் தொடர்கிறார்கள். சிலர் பெண்ணுக்கு அளித்த சீர், நகை நட்டு கிடைத்ததென சும்மா இருக்கிறார்கள்.

2ஆம் திருமணம் எப்போது நிகழும்?  / அந்த இரண்டாம் திருமணம் நடக்கும் காலம்

ஆண் / பெண் இருவருக்குமே,  இரண்டாம் திருமணம் பொதுவாக , 3 வது அல்லது 9 வது அதிபதியின் தசை அல்லது புத்தி காலத்தில் நடந்தேறுகிறது. எனது பார்வையில் 8 ஆம் வீட்டு (அஷ்டமாதிபதி ) அதிபதியின் தசை / புத்தி காலத்தில், சில கிரகங்களின் இணைவாலும் , இரண்டாம் திருமணம் நடந்தேறுகிறது. 

திருமணத்துக்கு ஜாதக பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாகக் கவனிப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம், மற்றொன்று ராகுகேது தோஷம். செவ்வாய் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம், 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல் சுகத்தையும், குடும்ப தாம்பதிய சுகத்தையும், இல்லற வாழ்க்கையையும் குறிக்கும் இடங்களாகும். செவ்வாய் 7, 8ல் இருந்தால் காதல் உணர்வு அதிகம் காணப்படும். அதற்கு இணையாக, அந்த ஜாதகக்காரருக்கு ஈடுகொடுக்கும் வகையில் இல்லத்துணை அமைய வேண்டும் என்ற நோக்கில்தான், அதேபோல் காதல் உணர்வு அதிகம் உள்ள 7, 8ல் செவ்வாய் உள்ள ஜாதகமாக பார்த்துச் சேர்த்தார்கள்.

ஏழாம் இடம் இடம் காதலை, காமத்தை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துத்தான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும்.

குருவினால் நன்மை தீமை 

குரு போக காரகன், சுக்கிரன் காம காரகன். இந்த இருவரும் இணைவது, பார்ப்பதில் நல்லதும் கெட்டதும் இருக்கிறது. இந்த இரண்டு கிரகங்களுக்கும் பாவ கிரக பார்வை, நீச்ச சேர்க்கை ஏற்பட்டால் ரகசிய உறவுகள் ஏற்படலாம். 8ம் இடத்தில் குரு அல்லது சுக்கிரன் இருப்பதால் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுடன் காதல் கொள்வதற்கான, கள்ளக்காதல் ஏற்படுவதற்கான சூழல் உள்ளது.

கற்பு ஸ்தானம் ஜாதகத்தில் 4வது இடம், சுக ஸ்தானம். எல்லா விதமான சுகங்களுக்கும் இந்த இடம்தான் முக்கியம். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெற்று இருந்தால் காதல் சிறப்பாக நடக்கும். பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு ஸ்தானம். ஒழுக்க நெறியை பற்றி சொல்லும் இடம். நான்காம் இடம், நான்காம் அதிபதி பலமாக இருந்தால் ஒழுக்கம் தவறாத காதல், நெறி தவறாத வாழ்வு அமையும். நான்காம் வீட்டில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள் இருந்தாலும், 
பார்த்தாலும் கூடா நட்புகள் தேடி வரும்.

சஞ்சல மனம் சனி, சந்திரன் சேர்க்கை, பார்வை பரிவர்த்தனை, நட்சத்திர சாரம், சனி வீட்டில் சந்திரன், சந்திரன் வீட்டில் சனி, சனி, சந்திரன் நீசம் போன்ற அமைப்புகள் ஜாதகத்தில் இருந்தால் அப்படிப்பட்டவர்கள் சுலபமாக மனதை மாற்றிக்கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். புகழ்ச்சிக்கு மயங்குவார்கள், சபல புத்தி, சஞ்சல மனம் இருக்கும்.

சபல புத்தி ஆண்கள் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்து பத்தாம் இடத்தில் புதன் இருந்தால் வயதில் மூத்த காதலி அமைவார். ஏழாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தால் சபல புத்தி உண்டாகும். ஏழாம் வீட்டில் சனிசுக்கிரன் இருந்தால், ஏற்கனவே திருமணமாகி கணவரைப் பிரிந்த பெண்ணின் தொடர்பு உண்டாகும்.தோஷம் உள்ள ஜாதகங்கள் லக்னத்துக்கு 7, 8ல் ராகுகேது உள்ள ஜாதகத்துடன் அதே சமதோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் அவர்களின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப்போகின்றன. இருவருக்கும் சரிபாதி இன்பம் கிடைக்கிறது. தோஷம் உள்ள ஜாதகங்கள் சேராமல், ஒருவருக்கு மட்டும் தோஷம் இருந்து மற்றவருக்கு தோஷம் இல்லாதிருந்தால் காதல் சுகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் போய், கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது.

செவ்வாயுடன் சுக்கிரன் சேர்ந்தால் என்ன? ஆண், பெண் எந்த ஜாதகமாக இருந்தாலும், விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் காதல் வேட்கை அதிகம் இருக்கும். விருச்சிக ராசியில் சுக்கிரன் இருந்தால், காதலுக்காக எதையும் செய்யத் துணிவார்கள். சுக்கிரனும், செவ்வாயும் கூட்டணி சேர்ந்து அமர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். காதல் வேட்கையைத் தீர்த்துக்கொள்ள எந்த எல்லை வரை போகவும் தயங்கமாட்டார்கள்.

திருமணத்திற்குக் காத்திருக்கும் ஒவ்வொருவரும், தமக்கு வரும் கணவன் / மனைவி மிகவும் நல்லவராக இருக்க வேண்டும் என்பதில் விருப்பம் இருந்தால், திருமணம்  செய்வதற்கு முன்னரே சிறந்த முறையில் ஜோதிட ஆய்வு செய்து முடிவெடுத்தால், திருமணப் பந்தம் நீண்ட நாளைக்குத் தொடர்வதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் கொள்ளத் தேவை இல்லை. திருமணம் ஆன பிறகு, எனக்கு வாய்த்தவரன் நல்லவரா இல்லை கெட்டவரா என நினைத்து ஏங்க வேண்டியதில்லை.

சாயியை பணிவோம் , நல்லன எல்லாம் பெறுவோம்.

- ஜோதிட ரத்னா  -  தையூர். சி. வே. லோகநாதன் 

தொடர்புக்கு :  98407 17857
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com