மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம்

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. 

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆனித் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஒவ்வொரு நாளும் ராஜகோபால சுவாமி, கல்யாண அவசரத் திருக்கோலம், கண்ணன், பரமபதநாதன், வைரமுடி, ராமாவதாரம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அலங்காரங்களில், தங்க, வெள்ளி, கருட, யானை, குதிரை வாகனங்களில் எழுந்தருளும் உற்சவம் நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்வான ஹரித்ராநதி தெப்ப உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

சேதுபாவாசத்திரம் அறக்கட்டளைக்குச் சொந்தமான ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் உற்சவம் நடைபெறும். கடந்த ஆண்டைப் போல் நிகழாண்டும் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாதது, பருவமழை பொய்த்து போனது போன்ற காரணங்களால் பெரிய தெப்பத்துக்கு பதிலாக ஓலைத் தெப்பம் என்னும் சிறிய தெப்பம் செய்யப்பட்டிருந்தது.

தெப்ப உற்சவத்தையொட்டி ருக்மணி, சத்யபாமா சமேதராக ராஜகோபால சுவாமி கோயிலிலிருந்து புறப்பட்டு திருமஞ்சன வீதி வழியாக வந்து ஹரித்ராநதி குளத்தில் அமைக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளினார். பின்னர், குளத்தின் வெளிபிராகாரத்தை ஒருமுறையும், மைய மண்டபத்தில் உள்ள வேணுகோபாலரை ஒருமுறையும், தொடர்ந்து குளத்தின் வெளி பிராகாரத்தை ஒரு முறையும் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள் மன்னார்குடி வர்த்தக சங்கத் தலைவர் கே.ஜெ.ஆர். பாரதிஜீவா, செயலர் ஆர்.வி.ஆனந்த், சங்க நிர்வாகிகள் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com