அத்திவரதர் பற்றி அறியப்படாத சில தகவல்கள்! (விடியோ)

இன்று உலக மக்களால் பேசப்படுகின்ற குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைய ஹாட் டாப்பிக் என்றால்..
அத்திவரதர் பற்றி அறியப்படாத சில தகவல்கள்! (விடியோ)

இன்று உலக மக்களால் பேசப்படுகின்ற குறிப்பாகத் தமிழ்நாட்டில் இன்றைய ஹாட் டாப்பிக் என்றால் அது அத்திவரதர் தாங்க. காஞ்சிபுரத்தில் மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றுமே சிறப்புடையதாகும். இந்திய நாட்டின் நூற்றெட்டுத் திருப்பதிகளில் முக்கியப் பதிகளாக உள்ள நான்கினில் ஒன்றாக விளங்குவது தான் வரதராஜப் பெருமாள் கோயில். முக்தி தரும் ஏழு புண்ணிய திருத்தலங்களில் காஞ்சியும் ஒன்று. காஞ்சிபுரம் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது காமாட்சி அம்மன் தான். இந்த காமாட்சி அம்மனை வணங்கினால் முப்பெரும் தேவியரை ஒருசேர வணங்கிய பலன் நமக்குக் கிடைக்கும். 

அத்தி மரத்தினாலேயே ஆனவர் என்பதால், பெருமாளுக்கு அத்தி வரதர் என்று பெயர் வந்தது. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்குப் பல பெருமைகள் உண்டு. தமிழ்நாட்டிலேயே ஏன் இந்தியாவிலேயே எந்த ஒரு கோயிலிலும் இல்லாத பல சிறப்பு அம்சங்கள் இந்த கோயிலில் உள்ளன. அப்படிப்பட்ட பழங்கால புராதன பெருமை வாய்ந்த இந்தக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அத்திவரதரை தரிசனம் செய்ய நாம் நிச்சயம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். 

பிரம்மா செய்த யாகத்திலிருந்து வந்ததாகவும், மூலவராக இருந்து மறைக்கப்பட்டவர் என்றும் அத்தி வரதர் குளத்தில் எழுந்தருளியதைப் பற்றி பலவாறு கூறப்பட்டு வந்தாலும், அவர் பெருமாள் பெருமாள் தான். அவரின் திருவுருவம் முழுவதும் அத்தி மரத்தால் ஆனது. பொதுவாக அத்திமரக் கட்டைக்குப் பல விஷேசங்கள் உண்டு. புவி ஈர்ப்பு விசையை தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. எளிதில் பூமியில் ஈர்க்கப்படாது. மற்ற மரங்களை விட அத்திமரத்துக்கு தண்ணீரில் ஊற ஊற அதன் பளபளப்பு அதிகமாகும் என்பதால் தான் அத்திவரதர் கருங்கல்லில் செய்தது போன்று இன்றும் பொலிவுடன் காணப்படுகிறார். 

நம் எல்லோருக்கும் ஒரு சந்தேகம் இருக்கும்.. ஏன் அத்திவரதரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுக்கிறார்கள், ஏதாவது கணக்கு இருக்குமோ? இதற்கு முன்னதாக 48 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 54 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஸ்வாமியை வெளியே எடுத்துள்ளனர். ஆனால், மனித வாழ்நாளில் ஒருமுறையேனும் இந்த பெருமாளைத் தரிசிக்கவேண்டும் என்று பக்தர்களின் கோரிக்கைக்கிணங்க, பெருமாளே தன்னை 40 வருடத்திற்கு ஒருமுறை வெளியே எடுத்து 48 நாட்கள் வழிபடப் பணித்துள்ளார். 

கோயிலின் மற்றொரு சிறப்பு என்றால் அது 24. ஏன் 24? குளத்திற்கு அடியில் உள்ள அத்தி வரதரைப் பார்க்க வேண்டுமென்றால் 24 படிகள் கீழிறங்கி தான் செல்ல வேண்டும். கோயில் மூலவர் வரதராஜரைப் பார்க்க வேண்டும் என்றால் 24 படிகள் மேலே ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த கோயில் 24 ஏக்கர் பரப்பளவில் 24 நிலைகளைக் கொண்டுள்ளது. இவை காயத்ரி மந்திரத்தின் 24 தத்துவங்களை உணர்த்துகின்றன. 

இசை மும்மூர்த்திகளில் ஒருவரான ஸத்குரு தியாகராஜ சுவாமி, வேங்க ரங்கய்ய தாஸர், சென்னையை சேர்ந்த ஸ்ரீ நிவாஸ ராமாநுஜதாஸர் என பலர் அத்திகிரி பேரருளாளனை நாமசங்கீர்த்தனத்தால் சேவித்து அருள்பெற்ற மகான்கள். 

கடந்த 1979-ல் மட்டும் நாடு எங்கிலும் இருந்து ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தர்கள் என சுமார் 50 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்துள்ளனர். காஞ்சிபுரம் யாத்திரை ஸ்தலமாக விளங்குவதன் முக்கியத்துவத்தை மக்கள் அறிய காஞ்சிபுரம் தபால் நிலையத்தில் விசேஷ தபால் முத்திரை பொறிக்கப்பட்டது. சுமார் 6480 தபால் உரைகளில் இந்த விசேஷ முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. 

அத்திவரதர் எழுந்தருளியிருக்கும் இந்த 48 நாட்களில் அஸ்தம், திருவோணம், ரோகிணி நட்சத்திரக்காரர்கள், உங்கள் நட்சத்திரம் எப்பொழுது வருகிறதோ அதற்கு ஏற்ப வழிபாடு செய்வது மிகவும் நல்லது. அத்திகிரி வரதர் அஸ்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் அஸ்த நட்சத்திரக்காரர்கள் ஜென்ம நட்சத்திரம் எப்போது வருகிறதோ அன்றைய தினம் அத்திவரதரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து வெற்றியையும் அடைவர். மகாவிஷ்ணுவுக்கு மிகவும் உகந்த திருவோணம் மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அவர்களுடைய நட்சத்திர தினத்தில் அத்திவரதரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் அடையலாம்.

பரத்வாஜ முனிவரின் அறிவுரைப்படி பிரகஸ்பதி இங்கு வந்த பெருமாளை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற திருத்தலமாக இது உள்ளது. எனவே, இங்கு வந்து வழிபட்டால் குரு பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் அகலும் என்பது ஐதீகம். 

சரி, வேறு எங்கெல்லாம் அத்தி மரத்தால் ஆன சிலைகள் உள்ளது..

திருவொற்றியூர், திருக்கானாட்டு முள்ளூர் ஆகிய திருக்கோயில்களில் இரண்டாவது தலவிருட்சமாக அத்திமரம் வணங்கப்படுகிறது. காஞ்சிபுரம் அத்தி வரதரைப் போல உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது. திருமலையில் தல தீர்த்தமாகிய குளத்திலும் அத்தி வரதர் எழுந்தருளியுள்ளார். வானமுட்டிப் பெருமாள் ஆலயம் மயிலாடுதுறை அருகே சுமார் 5 கி.மீ. தூரத்தில் கோழி குத்தி என்ற சிறு கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் மூலவர் அத்தி மரத்தைக் கொண்டு சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. பெருமாள் விஸ்வரூபமாக இருந்ததால் வானமுட்டிப் பெருமாள் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாம்.

அத்திவரதர் இதற்கு முன்னதாக 1854, 1892, 1937, 1979 ஆகிய ஆண்டுகளில் வெளியே வந்து எழுந்தருளினார்.  தற்போது 2019ம் ஆண்டில் நமக்குக் காட்சி கொடுக்கும் அத்திவரதர், அடுத்து, 2059-ல் தான் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார்.

ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, தவறினால் இருமுறைதான் இந்த பெருமாளைத் தரிசிக்க முடியும். ஆனால் மூன்று முறை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் 3 முறை தரிசிக்கும் பேறு பெற்ற சென்னையைச் சேர்ந்த ஏ.எம் ராஜகோபாலன் கூறுகையில், இதற்கு முன்பு 1937, 1979-ம் ஆண்டுகளில் தரிசனம் செய்தேன். தற்போது மூன்றாவது முறையாக அத்திகிரி அருளாளனை தரிசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அவரைத் தரிசித்த போதுதான் விஸ்வகர்மாவைத் தவிர இதுபோல பகவானின் திருமேனியை வடிக்க யாராலும் இயலாது என்று பிரமித்துப் போனேன்.. என்றார். 

மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதர் உற்சவத்தில், திருவிழா வழிபாட்டுடன் சேர்த்து மொத்தம் 48 நாள்களுக்கு அத்தி வரதரை கண்குளிரத் தரிசனம் செய்யலாம்.
 
ஒன்றல்ல இரண்டல்ல 48 நாட்கள்... எனவே, பக்தர்கள் இந்த நல்வாய்ப்பைத் தவறவிடவேண்டாம். தவறவிட்டால் இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க நேரிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com