Enable Javscript for better performance
மனக்குழப்பம் உள்ளவர்கள் செல்லவேண்டிய காவனூர் சிவன்கோயில்- Dinamani

சுடச்சுட

  

  மனக்குழப்பம் உள்ளவர்கள் செல்லவேண்டிய காவனூர் சிவன்கோயில்

  By DIN  |   Published on : 22nd July 2019 03:39 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Kavanur__1_

   

  திருவாரூர் - கொரடாச்சேரி சாலையில் உள்ளது அம்மையப்பன், இங்கிருந்து திருமதிகுன்னம் செல்லும் சாலையில் 1 கி.மீ சென்றால் காவனூர் அடையலாம். பிரதான  சாலையை ஒட்டியவாறு உள்ளது சிவன் கோயில். கிழக்கு நோக்கிய சிவன்கோயில் எதிரில் ஒரு குளம் உள்ளது.

  பாண்டிய மன்னன் சைவத்தைத் துறந்து சமணத்தைத் தழுவி வெப்பு நோயினால் துன்புற்று பின்னர், பாண்டியனின் மனைவியால் சம்மந்தர் அழைக்கப்படுகிறார். சம்பந்தர் அனல் வாதம், புனல் வாதம் செய்து சமணரை வென்று மன்னனின் வெப்புநோயைக் குணமாக்கி மீண்டும் சைவத்திற்குத் திருப்பியபின் பாண்டிய மன்னரால்   கட்டப்பட்ட ஆலயம் இதுவாகும்.

  கோயில் பழுதடைந்து காணப்படுகிறது, மதில் சுவர் இடிந்து கிடக்கிறது. விமானங்களில் கலசங்கள் இல்லை, பிரகாரம் முட்செடிகள் உடையதாகக் காணப்படுகிறது. இங்குள்ள நந்தி மிகவும் அழகுடையது, அம்பிகை மீனாட்சி மெல்லிய புன்னகை உதட்டில் பொருத்தி, அருளும் கருணையும் பெருகக் கரத்தில் கிளியை அமர்த்தி அருள்மழை  பொழிகிறாள்.

  கிழக்குப் பார்த்த கருவறையில் மூலவர் சொக்கநாதர் கருவறையை ஒட்டிய வட புறத்தில் விநாயகர் இடப்புறத்தில் வள்ளி-தெய்வானை சகிதமாக முருகன்  அமர்ந்திருக்கிறார்.

  இறைவனின் கருவறை பழமையானது அதில் தென்முகனும், துர்க்கையும் மட்டும் உள்ளனர். பிரகாரங்களில் சிற்றாலயங்கள் ஏதும் இல்லை. தென்மேற்கில் இரு  லிங்கங்களும் அதன் அம்பிகையும், நந்தியும் வெயில் மழை என நிற்பது வருந்தத்தக்கவொன்றாக உள்ளது. வடகிழக்கில் நவக்கிரகங்களும், சனியும், பைரவரும் உள்ளனர்.   கோவிலுக்கு எதிரே உள்ள தீர்த்தம் சொக்கநாதர் குளம் என்று அழைக்கப்படுகிறது. ஆலயத்தில் வட புறம் அமைந்துள்ள கிணறு அக்கினித் தீர்த்தம் எனவும்  சொல்லப்படுகிறது. இதனையடுத்து துர்க்கை வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். இதனையடுத்துத் தனி ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் உள்ளார். 

  பாண்டிய மன்னன் மனக்குழப்பம் அடைந்து புத்தி பேதலித்துச் சமணர்கள் காட்டிய வழியில் சென்று துன்பம் அடைந்தான். இதனை அறிந்த திருஞான சம்பந்த பெருமான்  பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்டிருந்த வெப்புநோய்க்கு உரிய முறையில் சிகிச்சையளித்தார். அதன் பிறகு தெளிவடைந்த பாண்டிய மன்னன், திருஞான சம்பந்தரின் அறிவுரையை ஏற்று என்னைப் போல் மனக்குழப்பம், புத்தி தடுமாற்றம், முக்கிய பிரச்னைகளில் முடிவெடுக்க முடியாத சஞ்சலம். மற்றவர்களின் சூழ்ச்சியில் சிக்கித்  தவிக்கும் அவல நிலை கொடிய நோய்களின் தாக்கம் போன்றவற்றால் துன்புறுவோர் இத்தலத்து ஈசனை வணங்கினால் அவர்களது துயர் களைந்து வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாக அருள் புரிய வேண்டும் என்று வேண்ட வேதியர் அதையே மந்திரமாக முழங்க இங்கு மூலவரைப் பிரதிஷ்டை செய்தானாம் பாண்டிய மன்னன்.

  அதன் காரணமாகவே மேற்கூறிய குறைபாடுகளால் கஷ்டபடுவர்களும் இவ்வாலயத்து இறைவனை அர்ச்சித்து வணங்கி வழிபட்டால் அவர்கள் துன்பம் தானாகவே விலகும்.  நலம் வளமும் பெருகும். 

  "நாடும் நகரமும் நற்றிருக் கோயிலுந்

  தேடித் திரிந்து சிவபெரு மான் என்று

  பாடு மின் பாடிப் பணிமின் பணிந்தபின்

  கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே"

  என திருமந்திரம் சொல்வதை ஏற்று நடப்போம்.

  கட்டண கோயில்கள் தவிர்ப்போம். வாருங்கள் கிராம சிவாலயங்கள் செல்வோம். 

  - கடம்பூர் விஜயன் 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai