அத்திவரதர் பெருவிழா: கொட்டும் மழையிலும் தரிசனம் செய்த பக்தர்கள்

அத்திவரதர் பெருவிழாவின் 22-ஆவது நாளான திங்கள்கிழமை கொட்டும் மழையிலும் அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.காஞ்சிபுரத்திலும், அதனை சுற்றியுள்ள செவிலிமேடு, வாலாஜாபாத்,
22 -ஆவது நாளான திங்கள்கிழமை பாசிப்பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.
22 -ஆவது நாளான திங்கள்கிழமை பாசிப்பச்சை நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.

அத்திவரதர் பெருவிழாவின் 22-ஆவது நாளான திங்கள்கிழமை கொட்டும் மழையிலும் அத்திவரதரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரத்திலும், அதனை சுற்றியுள்ள செவிலிமேடு, வாலாஜாபாத், ஒலிமுகம்மது பேட்டை, அய்யம்பேட்டை, திம்மராஜம்பேட்டை, ஓரிக்கை, சிறுகாவிரிப்பாக்கம், பொன்னேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில்  அதிகாலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தது. 
பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அத்திவரதரை தரிசனம் செய்ய குவிந்தனர். காஞ்சிபுரம் நகர் பகுதியில் மத்திய பேருந்து நிலையம்,காமராஜர் சாலை, மூங்கில் மண்டபம், காந்திசாலை, ரங்கசாமிகுளம், திருக்கச்சிநம்பி தெரு வழியாகவும்,பெரியார்நகர், சுங்கச்சாவடி, சின்னக்காஞ்சிபுரம் வழியாக மாடவீதிகளுக்கு மழையில் நனைந்து கொண்டே வந்தனர். பின்பு வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய மாடவீதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து கிழக்கு கோபுர நுழைவு வாயில் பகுதிக்கு அதிகாலை 4.45 மணிக்கு பக்தர்கள் வந்தனர். அதன்பிறகு போலீஸார் பகுதி, பகுதியாக மூன்று பொது வரிசை தரிசன பாதையில் பக்தர்களை அனுமதித்தனர். பின்பு ஆழ்வார், தேசிகர் சந்நிதிகள் வழியாக வஸந்த மண்டபத்தை பக்தர்கள் அடைந்தனர்.
பாசிப்பச்சை நிறப் பட்டாடையில் அத்திவரதர்: விழாவின் 22-ஆவது நாளான திங்கள்கிழமை பாசிப்பச்சை நிறப் பட்டாடையும், ஊதா நிற அங்கவஸ்திரமும் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்பு துளசி, மல்லிகை, ரோஜா, தாமரை மற்றும் செண்பகப்பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.பிரத்யேகமாக பாதாம் பருப்பினால் தொடுக்கப்பட்ட மாலையும் அணிந்திருந்தார். நைவேத்தியத்துடன் தீபாராதனைகளும் நடந்தன. இதைத் தொடர்ந்து பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
காவலர்கள் அதிகரிப்பால் சீரான வரிசை: நாள்தோறும் அத்திவரதரை தரிசிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை புரிகின்றனர். இவர்களை ஒருங்கிணைத்து தரிசனம் செய்ய அனுப்பும் பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். கடந்த நாள்களில் கூட்ட நெரிசல் இருந்த இடங்களில் போதுமான போலீஸார் இல்லாமல் இருந்து வந்தனர். தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் காவல்துறை இயக்குநர் திரிபாதி ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து காவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டாலும் காவல்துறையினர் அவர்களை முறைப்படுத்தி சீரான வரிசையில் அனுப்பி வைத்தனர். இதனால் எவ்வித நெரிசலும் இல்லாமல் பொது மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தரிசனப் பாதையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
முதியோர்கள் வரிசையை ஒழுங்கு படுத்தாத காவல்துறை: முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமாக புதியதாக சாய்வு தளத்தினை மாவட்ட நிர்வாகம் கடந்த இரு தினங்களுக்கு முன்பே ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி கிழக்குகோபுர நுழைவுப் பகுதியில் வரும் முதியோர்கள் சக்கரத்தாழ்வார் சந்நிதி வழியாக, வஸந்த மண்டபம் வரை சாய்வு தளப்பாதை வழியாக கடந்த ஒரிரு நாள்கள் மட்டுமே வந்து அத்திவரதரை விரைவில் தரிசனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் காவலர்கள் அந்த வரிசையில் பொதுமக்களையும் அனுமதித்தனர். இதன் காரணமாக முதியோர்களும், மாற்றுத்திறனாளிகள், பெண்கள் உடனுக்குடன் தரிசிக்க முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்தும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இனிவரும் நாள்களிலாவது காவல்துறை முதியோர்களுக்கான வரிசையில் அவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரிசனத்துக்கு 5 மணி நேரம்: திங்கள்கிழமை அத்திவரதரை அதிகபட்சம் 5 மணி நேரத்திலும், குறைந்த பட்சமாக 2.30 மணி நேரத்திலும் சுவாமி தரிசனம் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1.70 லட்சம் பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 22-ஆவது நாளான திங்கள்கிழமை மாலைநேர நிலவரப்படி 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக கோயில்வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கியஸ்தர்கள் சுவாமி தரிசனம்: தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்துக்கு பின்னர் அவர் கூறுகையில், கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தினமும் அதிக எண்ணிக்கையில் வருவதால் கடந்த 20-ஆம் தேதி தமிழக முதல்வர் அமைச்சர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்தி மேலும் சில வசதிகளை பக்தர்களுக்கு செய்ய உத்தரவிட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீண்டும் திருக்குளத்தில் அத்திவரதரை வைக்கக்கூடாது என்று கூறியது பற்றி கேட்டதற்கு, கடந்தகால ஆகம விதிகளின்படியே அனைத்தும் நடத்தப்படும் என தெரிவித்தார். 
இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பிரபாகர் சாஸ்திரி உள்ளிட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

 உடைந்து கிடந்த சக்கர நாற்காலிகள்

கோயில் வளாகத்தில் கிழக்குகோபுர நுழைவுப்பகுதி, ஆழ்வார் சந்நிதிகளுக்கு பிரியும் இடங்களில்  பல இடங்களில் உடைந்த நிலையில் சக்கர நாற்காலிகள் குவியல், குவியலாக கிடந்தன. இதனால் அந்த இடங்களுக்கு வந்த முதியோர்கள் பலருக்கும் சக்கர நாற்காலிகள் கிடைக்காமல் நீண்ட நேரம் காத்திருந்து அவதிக்குள்ளாகி அதன் பின்னரே சுவாமி தரிசனம் செய்தனர். சக்கர நாற்காலிகளை பயன்படுத்தியவர்கள் அதை அவர்களது சொந்த உபயோகத்திற்காக வெளியில் எடுத்துச் செல்வதையும் காண முடிந்தது. இதனை தடுக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும் எனவும் முதியோர்கள் பலரும் தெரிவித்தனர்.

அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில் வைக்கக் கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்
 அத்திவரதரை மீண்டும் நீருக்கடியில்  வைக்கக் கூடாது. இது குறித்து அனைத்து மடாதிபதிகளும் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்தார். 
ஸ்ரீவில்லிபுத்தூர் மனவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீசடகோப ராமாநுஜ ஜீயர் சுவாமிகள் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது: 
கடந்த காலங்களில் திருட்டுக்குப் பயந்து அத்திவரதர் உற்சவரை நீருக்கடியில் வைத்தனர். 45 ஆண்டுகள் கழிந்த நிலையில், தற்போது அத்திவரதரை   நீருக்கடியில் வைக்கத் தேவையில்லை. மேலும், இது தொடர்பாக முதலமைச்சரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை வைக்க உள்ளோம். அதற்கான முயற்சியை நான் எடுத்து வருகிறேன். அதேபோல், அத்திரவரதர் மேலே வந்தால் தான் மழை பொழியும். அதை மீண்டும்  நீருக்கடியில் வைக்கக் கூடாது என்றார்.

பாதுகாப்புப் பணிகள்: 16 இடங்களில் பல்வேறு துறை அதிகாரிகள் நியமனம்
அத்திவரதர் பெருவிழாவை முன்னிட்டு 16 இடங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறியது:
அத்திவரதர் பெருவிழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடர்ந்து விழா முடியும் வரை கண்காணிக்க தோட்டக்கலைத்துறை இயக்குநர் என்.சுப்பையா, ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டு அவர்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவர்: விழாவில் கோயில் வளாகத்திற்குள்ளும், மாடவீதிகளின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கண்காணிக்க 16 இடங்களில் 9 பல்வேறு துறைகளைக் கொண்ட அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் கோயில் பகுதிகளில் சுத்தம் செய்யும் பணி, மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதி ஆகியனவற்றை உடனுக்குடன் கண்காணித்து தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்பட்டு அவர்களது மேற்பார்வையில் பணிகள் அனைத்தும் நடந்து வருகின்றன.
அன்னதானம்: அதிகாரிகள் கொண்ட ஒவ்வொரு குழுவும் சுழற்சி முறையில் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் கூடுதலாக அமைக்கப்பட்டிருப்பதுடன் அதில் போதுமான மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 23 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் உணவு தரமானதா என்று சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டு: நன்கொடையாளர்களுக்கு அத்திவரதரை பார்க்க அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அவை விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். போலி அனுமதிச் சீட்டு 9 பேரிடம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதில் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
கூடுதலாக 1,500 சக்கர நாற்காலிகள்: முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்கெனவே 500 க்கும் மேற்பட்டவை  உள்ளன. மேலும் 1,500 சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்படவுள்ளன. இதில் முதல் கட்டமாக திங்கள்கிழமை 500 சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. பக்தர்கள் வரும் வழியில் கூடுதலாக இருக்கை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com