Enable Javscript for better performance
அத்திவரதர் பெருவிழா: அன்னதானம் வழங்க நன்கொடை அளிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அத்திவரதர் பெருவிழா: அன்னதானம் வழங்க நன்கொடை அளிக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    varathar

    24-ஆம் நாளான புதன்கிழமை மாம்பழ நிறப் பட்டாடையில் காட்சியளித்த அத்திவரதர்.


    காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க நன்கொடை அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனிடையே, அன்னதானத்துக்கு நன்கொடையாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.1 லட்சத்தை புதன்கிழமை அளித்தார். 
     இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மாவிடம் தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ.1 லட்சத்தை வழங்கினார். 
    காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் நிகழ்வு இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. தினமும் வெளி மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசித்துச் செல்கின்றனர். இந்த நிலையில், பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தார். 
    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் க.சண்முகம், டிஜிபி திரிபாதி, அரசுத் துறை உயரதிகாரிகள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
    இந்த ஆய்வுக்குப் பின்னர், தொலை தூரத்தில் இருந்து வரும் பக்தர்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அன்னதானம் வழங்குவதற்காக தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கி, அன்னதானத்துக்கு நிதி அளிக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
    மக்களும் அளிக்கலாம்: அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நன்கொடை அளிக்க விரும்புவோர் அதனை காசோலையாகவோ அல்லது வரைவோலையாகவோ அனுப்பலாம். அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் (ARULMIGU DEVARAJA SWAMY TEMPLE, KANCHEEPURAM) என்ற பெயரில் காசோலை அல்லது வரைவோலை எடுத்து செயல் அலுவலர், அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக
    தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் நன்கொடைக்கான காசோலையை அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலர் அபூர்வ வர்மாவிடம் புதன்கிழமை வழங்கினார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

    குளத்தை சுத்தம் செய்த பிறகு மீண்டும் அத்திவரதரை குளத்தில் வைக்கலாம்: மன்னார்குடி ஜீயர் கருத்து
     அத்திவரதர் வைக்கப்பட்ட குளத்தைச் சுத்தம் செய்த பிறகு, அந்த குளத்தில் அத்திரவரதரை வைக்கலாம் என்று மன்னார்குடி ஸ்ரீ செண்ட அலங்கார செண்பகராம ஜீயர் சுவாமிகள் கூறினார்.
    மதுரையில் நடைபெறும் வைகைப் பெருவிழா துறவியர் மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: 
    அத்திவரதர் வைக்கப்பட்ட குளம் மாசடைந்து உள்ளது. இதனால் இந்த முறை குளத்தில் இருந்து எடுக்க சிரமம் ஏற்பட்டது. குளத்தை சுத்தம் செய்ய பிறகு அத்திவரதரை குளத்தில் வைக்கலாம்.  மொகலாயர்கள் படையெடுப்பு காரணமாக அத்திவரதர் குளத்தின் உள்ளே வைக்கப்பட்டார். 
    தற்போது இந்து மக்களிடம் ஒருமித்த கருத்து உருவானால் அத்திவரதரை குளத்திற்கு வெளியே வைக்கலாம் என்றார்.

    முதல்வர் அளித்த பட்டாடை 
    அத்திவரதரை தரிசனம் செய்யவும், கோயில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்யவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை மாலை காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது அவர் அத்திவரதருக்கு மாம்பழ நிறத்தால் ஆன பட்டாடையையும், நீலநிற அங்கவஸ்திரத்தையும் வழங்கினார். 
    அந்தப் பட்டாடையும், அங்கவஸ்திரமும் அத்திவரதர் பெருவிழாவின் 24-ஆம் நாளான புதன்கிழமை பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. அத்தி வரதருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பஞ்சவர்ண நிறத்தினாலான மாலை, ரோஜா, தாமரை மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. துளசி அஷ்டோத்திரசதநாம அர்ச்சனையும் நடந்தது. இதனைத் தொடர்ந்து நைவேத்தியங்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டு தீபாராதனைகளும் நடந்தன.


    ஒரு மணி நேரத்தில் தரிசனம்
    அத்திவரதர் பெருவிழாவின் 24-ஆம் நாளான புதன்கிழமை பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.  இதனால் பக்தர்கள் அத்திவரதரை ஒரு மணி நேரத்துக்குள் பொதுவரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது. முக்கியப் பிரமுகர்கள் வரிசையில் 20 நிமிடங்களில் சுவாமியை தரிசனம் செய்தனர்.
    அத்திவரதரை புதன்கிழமை மாலை வரை சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசித்தனர்.

    துணை ராணுவம் கோரி முறையீடு

    காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணுவப் படை பாதுகாப்பு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
    சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமையன்று வழக்கம் போல் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினர். அப்போது ஆஜரான வழக்குரைஞர் ரமேஷ், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்குப் பின் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ள அத்திவரதரை தரிசனம் செய்ய நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை. அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் கூட செய்யப்படவில்லை. 
    இதனால் கூட்டத்தில் சிக்கி 6  பேர் பலியாகி உள்ளனர். உண்மையில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை பல  பேர் பலியாகி உள்ளதாகவும், அரசுத் தரப்பில் குறைவானவர்களே இறந்துள்ளதாக கணக்கு காட்டுவதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தி, அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு துணை ராணுவம் மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். இதுகுறித்து தாக்கல் செய்யப்படும் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என முறையீடு செய்தார். 
    இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதே கோரிக்கையுடன் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 25) ஒத்திவைத்தனர்.

    செகந்திராபாத் - காஞ்சிபுரம் சிறப்பு ரயில்கள் இயக்கம்
    செகந்திராபாத்திலிருந்து காஞ்சிபுரம் வந்து செல்ல வாரத்துக்கு இருமுறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
    காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள் கோயிலில் நடந்து வரும் அத்திவரதர் பெருவிழாவினை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிக்க நியமிக்கப்பட்டிருந்த கண்காணிப்பு அதிகாரிகளான தோட்டக்கலைத்துறை இயக்குநர் என்.சுப்பையன், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் கோயில்  வளாகத்தில் பாதுகாப்புப்  பணிகளைக்  கண்காணித்தனர்.
    வாரம்  இரு  முறை சிறப்பு ரயில் :  செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரத்திற்கு இருமுறை காஞ்சிபுரத்துக்கு மறுமார்க்கமாக வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் காஞ்சிபுரத்திலிருந்தும் இந்திய ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க இருக்கிறது.
    ஜூலை 24, 26, 31 ஆகிய தேதிகளிலும் ஆகஸ்ட் 2, 7, 9, 14, 16 ஆகிய தேதிகளில் செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு காஞ்சிபுரம் ரயில் நிலையத்துக்கு மறுநாள் காலை 11.30 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் ஜூலை 25, 27 தேதிகளிலும் ஆகஸ்ட் 1, 3, 8, 10, 15, 17 தேதிகளில் காஞ்சிபுரத்திலிருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.45 மணிக்கு செகந்திராபாத் ரயில் நிலையம் சென்றடையும். 
    இச்சிறப்பு ரயில்கள் செகந்திராபாத், காஜிபேட், வாரங்கல், விஜயவாடா, தெனாலி, நெல்லூர், ரேணிகுண்டா, திருத்தணி மற்றும் காஞ்சிபுரம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில் இயக்கத்துக்கு காஞ்சிபுரம்-சென்னை ரயில் பயணிகள் சங்கத்தின் செயலர் ஜெ.ரங்கநாதன் நன்றி தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai