சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 3. சனி

சென்னையை சுற்றியுள்ள நவக்கிரக பரிகார தலங்களில் - 3. சனி

பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து , குன்றத்தூர் செல்லும் வழியில் பிரதான சாலைக்கு வடக்கே


சனி பரிகார ஸ்தலம்: ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் (பொழிச்சலூர்) 

பல்லாவரம் ரயில் நிலையத்திலிருந்து , குன்றத்தூர் செல்லும் வழியில் பிரதான சாலைக்கு வடக்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பொழிச்சலூர் எனும் சிவன் உறையும் ஸ்தலம் ஆகும். இது சோழர் காலத்துக் கோயில் ஆகும். இங்குள்ள சிவன் பெயர் ஸ்ரீ அகத்தீஸ்வரர் மற்றும் தாயார் பெயர் ஸ்ரீ ஆனந்தவல்லி . இது ஒரு சென்னையை (தொண்டை மண்டலம்) சுற்றியுள்ள நவகிரக பரிகார தலத்தில் சனீஸ்வர பகவானின் பரிகார ஸ்தலமாகும். 

புராண காலத்தில், வடக்கே கைலையில் நடைபெற்ற சிவனார் - பார்வதி தேவி கல்யாண வைபவத்திற்கு அனைவரும் திரண்டதால், தெற்கு பகுதி உயர்ந்தும் வடக்கு பகுதி தாழ்ந்தும் போனது. அதனை, சமன் படுத்த எண்ணிய, சிவனார், அகத்தியரை, தென்பகுதி செல்லுமாறு கட்டளை இட்டார். அவரின் கட்டளையை ஏற்ற அகத்தியர், தெற்கு பகுதியை நோக்கி பிரயாணப்பட்டார். தெற்கில் உள்ள பொதிகை மலையை நோக்கிச் செல்லும் போது இங்குப் பலகாலம் தங்கினார் தவசிரேஷ்டர் அகத்தியர். இவ்விடத்தில் சுயம்புவாக தோன்றிய சிவலிங்கத்தை வழிபாடு செய்து வந்தார். 

அகத்தியருக்கு ஒரு வரம் இருந்தது, அவர் எங்கெங்கு சென்று சிவனை வழிபடுகிறாரோ, அங்கெல்லாம் சிவன், பார்வதியின் திருமணக்கோலத்தை அளிப்பதாக சிவன் அருள் புரிந்ததால் இவருக்கு அந்த காட்சி கிடைக்கும். இங்கும் சிவனை வழிபாடு செய்ததன் விளைவாக சிவன் பார்வதி திருமண காட்சியை அகத்தியர் காண முடிந்தது. சனீஸ்வர பகவான் அனைவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு பாதிப்பை அளிப்பதால், இவருக்கு அனைவரின் தோஷமும் சனீஸ்வர பகவானை அடையலாயிற்று. எனவே, இந்த ஸ்தலத்தில், சிவனார், பார்வதி தேவியை சனீஸ்வர பகவான் வழிபட்டு தோஷ நிவர்த்தி அடைந்தார். 

பரமேஷ்வரனே, சனி பகவானை இங்கு வரச்சொல்லி வணங்கச் சொன்னதால், அவரும் இங்கு ஒரு குளத்தை உருவாக்கி சிவ பெருமானை மனம் உருகி வழிபட்டார். குளத்தின் பெயர், சனி தீர்த்தம் ஆகும். அதன் விளைவால், அவரின் சாபங்கள் நீங்கியது. இங்கு இவ்வாறு தோஷ நிவர்த்தி அடைந்த சனிபகவானுக்கு , மங்கள சனீஸ்வரர் என்ற நாமம் பெற்று அருள்பாலிக்கிறார். எனவே, இங்குள்ள சனீஸ்வரரை சனியின் பாதிப்புள்ளவர்கள், வணங்குவதால், அவர்களின் தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவதால், இவ்விடம், வட திருநள்ளாறு என்றே அழைக்கப்படுகிறது. 

இங்குள்ள சிவன் கிழக்கு நோக்கி காட்சிதருகிறார். மேலும் ஆனந்தவல்லி தாயார் தெற்கு நோக்கி காட்சி தந்து, பக்தர்களின், குறைகளைக் கலைந்து நல்வாழ்வு வாழ அருள் பாலிக்கிறார். சனி பகவான் சிவனை நேரில் பார்ப்பது வணங்குவது போன்று, மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இந்த ஸ்தலமானது, ராகு, கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த தலத்தின் ஸ்தல விருக்க்ஷ மாக, மா மரம் விளங்குகிறது. 

இந்த கோவிலை, சனியின் பாதிப்புள்ளவர்கள், செல்வதால், நன்மைகள் நிச்சயம் நடந்தேறும். சனியின் பாதிப்புகள் என்னவெல்லாம் என்றால், அவர் கர்மாவின் கர்த்தா, மந்தத்திற்கும் தாமதத்திற்குமான அதிபதி, ஒருவர் காதலினால் அவமானப்படவும், சொன்ன சொல் காப்பாற்றப்படாமல் போகவும், சனியே காரண மாகிறார். கசப்புத்தன்மைக்கு சனியே காரணமாவதால், ஒருவரின் மீது இருக்கும் பிரியம் விட்டுப் போக சனியே காரணமாகிறார். காதலை மறந்து, பிடிக்காதது போல நடிக்கவும் இவரே காரணம் ஆகிறார். 

சனி பகவானுக்கு, 3, 7, 10-ம் பார்வைகள் உண்டு. அவர் ஒருவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதியாகி, 11-ம் இடத்தில் அமர்ந்த போது / ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்பு கொள்ளும்  போது , பலருக்கு காதலை ஏற்படுத்தி விடுகிறார். அதிலும் பலர் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர். இவர்களிடையே வயது வித்தியாசமும் உண்டு. சரியானபடி, நாம் பரிகாரங்கள் செய்து கர்ம வினைகளை கழிக்க வில்லை எனில், நமது குடும்பத்தில் பிறக்கும் புதிய குழந்தைகளின் ஜாதகம், அதனை எடுத்துச் சொல்லிவிடும். அதாவது, குழந்தைகள் பிறக்கும் போதே 7 1/2 சனியிலும், அட்டமத்திலும் பிறப்பு எடுக்கும். இவ்வாறு பிறக்கும் ,  இவர்களின் பெற்றோர்கள், தங்களது அட்டம சனியின் பிரச்னைகளை சரியாக கழிக்காதவர்களே ஆவர். அட்டம சனி சரியாக கழியாதபோது, அட்டம ராகுவாக ஒரு குழந்தை பிறக்கும் போதே தனது ஜாதகத்தில் எடுத்து வரும். 

கர்ம வினைகள், சரியாக கழிவது என்றால் என்ன என்பதனை, திருவருட்ப்ரகாச வள்ளலார் கூறுவார்...

கங்கையில், காவிரியில் நூறு முறை மூழ்கி 

கணக்கற்ற திருக்கோவில் கால் தேய சுற்றி 

வெங்கொடிய  பல நோன்பு ஏற்று உடலை வருத்தி 

வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து 

பங்கமிலா வேதியர் கை பணம் அள்ளி தந்து 

பசுவதனை பூஜித்து அதன் கழிவை பாலாய் உண்டு 

தங்கள் உயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும் 

தயவில்லாதார் சத்தியமாய் முத்தியடையாரே ...

இயற்கையை, சமுதாயத்தை எப்போதும் ஏமாற்ற முடியாது ; சமூக கண்ணோட்டம் இல்லாத பரிகாரங்கள் பயன் தராது. சரியான முறைகளில் பாவங்களைக் கழிக்காமல், மீண்டும் ஒருமுறை, முன்னிலும் வலிமையாக அவைகளை நாமும், நமது வாரிசுகளும், அனுபவிப்பதற்கு , நாமே காரணமானவர்கள் ஆகிறோம் .நவகிரகங்களையும், ஜோதிடர்களையும் சலித்துக்கொள்வதில் பலன்கள் இல்லை, மேலும் சீர்கெட்டுவிடும். கல் மலை போன்று இருக்கின்ற தீயப் பலன்களை நமது நற்செயல்களால் மட்டுமே , பனி மலையாகக் கரைக்கலாம். 

எனவே இந்த நவக்கிரக பரிகாரத்தலங்களை சென்று வழிபடுவதால் மட்டும் நமது தோஷங்கள் விலகிப் போகாது, அங்குச் சென்று வந்ததும் மறுபடி நமது தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல் அதனையே செய்யத் துணிந்தால், நிச்சயம் பாதிப்புகள் அதிகமாகும். 

இனி அடுத்து வரும் தொடர்களில் மற்ற பரிகார கோயில்களைப் பற்றியும் வெளிவரும். 

சாயியைப் பணிவோம் எல்லா நலமும் பெறுவோம். 

- ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

தொடர்புக்கு: 98407 17857
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com