Enable Javscript for better performance
எந்த பரிகாரம் செய்தாலும் கஷ்டம் தீரவில்லையா? ஆடி அமாவாசையில் பித்ரு வழிபாடு செய்யுங்கள்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  முகப்பு ஆன்மிகம் செய்திகள்

  எந்த பரிகாரம் செய்தாலும் கஷ்டம் தீரவில்லையா? ஆடி அமாவாசையில் பித்ரு வழிபாடு செய்யுங்கள்!

  By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |   Published On : 30th July 2019 02:35 PM  |   Last Updated : 30th July 2019 02:36 PM  |  அ+அ அ-  |  

  thai_amavasai_7

   

  நாளை 31/07/2019 புதன் கிழமை தக்ஷிணாயன புண்ணிய காலத்தின் முதல் அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், கன்னியாகுமரி  ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்யவும், கடல் நீராடவும் மக்கள் திரளாகக் கூடுகின்றனர். மேலும் சென்னையை அடுத்த திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், கோவை பேருர் பட்டீஸ்வரர், திருவெண்காடு, திருப்புவனம் போன்ற அனேக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

  ஆடி 1-ம் தேதி முதல் சூரிய பகவான் கடக ராசியிலிருந்து தெற்கு நோக்கி பயணம் செய்யக்கூடிய ஆடி 1 முதல் மார்கழி 30 வரையிலான காலம் தக்ஷிணாயன புண்ணிய காலம் எனப்படும். பித்ரு காரகணான சூரியன் தனது புதல்வனான எமனின் தெற்கு திசை நோக்கி பயணம் செய்யும் காலம் என்பதால் இதனை பித்ரு பக்ஷம் என்றும் கூறுவார்கள். எனவே, இந்த ஆறு மாதத்தில் பித்ருகளின் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டிருக்கிறது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள். அதில் உத்திராயணம் என்பது பகல் பொழுது. தக்ஷிணாயனம் என்பது இரவுப்பொழுது ஆகும். அதில் ஆடி மாதம் என்பது தேவர்களின் மாலைப் பொழுதான கோதூளி லக்னமாகும். எனவே இந்த தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை மாளைய பக்ஷம் போன்றவை பித்ருக்களின் ஆடி பெற ஏற்ற தருணங்களாகும்.

  சந்ததிகளை ஆசீர்வதிக்க வரும் முன்னோர்கள்

  நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான தக்ஷிணாயனத்தின் முதல் மாதமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீர்வதிக்கப் பூலோகத்திற்கு வருவதாகவும் பின் உத்திராயண புண்ணிய காலத்தில் தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மஹாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். பித்ரு தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பித்ரு தோஷங்களில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பதும், பித்ரு கடன் செய்வதனால் அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப்பெறும் என்பதும், பித்ரு கடன் செய்யாது இருந்தால் பித்ரு தேவதைகள் சபித்து விடுவார்கள் என்பதும் காலம் காலமாக இந்துக்களின் நம்பிக்கை. 

  அமாவாசை அன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்துருக்கள் வந்து நின்றுகொண்டு காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரவேண்டும். இதனால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசீர்வதிப்பர். இவ்வாறு செய்யாவிட்டால் பித்ருக்கள் வருத்தப்படும்போது அது பித்ரு தோஷமாக சந்ததியரின் ஜாதகத்தில் அமைகிறது. 

  அமாவாசையின் முக்கியத்துவம்

  இரு வேறு சக்திகளான சூரியன், சந்திரன் ஒன்றாக இணையக்கூடிய நாளே அமாவாசையாகக் கொள்ளப்படுகிறது. எல்லா திதியிலும், ஏதாவது ஒரு கிரகம் திதி தோஷம் (வலுவிழப்பது) அடையும். ஆனால் அமாவாசை தினத்தன்று எந்தக் கிரகமும் திதி சூன்ய தோஷம் பெறுவதில்லை. இதன் காரணமாக அமாவாசை திதியில் சில விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டால் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைய முடியும். மருந்து உண்ணுதல், நோயாளிகள் குளித்தல் உள்ளிட்ட பல விஷயங்களை அமாவாசை திதியன்று துவங்கலாம் என சித்த நூல்கள் கூறுகின்றன. எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அமாவாசையன்று செய்தால் அதற்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். ராகு-கேது பரிகாரம், சர்ப்ப தோஷம், சனி, செவ்வாய் கிரகங்களால் ஏற்படக்கூடிய பிரச்னைகள், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் இந்த மாதிரியானவற்றிற்கு அமாவாசை திதியன்று பரிகாரம் செய்வது நல்லது. 

  ஷன்னவதி தர்ப்பணம்

  ஒவ்வொரு வருடமும் அமாவாசை, புண்ணிய கால தர்ப்பணம், வருஷ சிரார்தம், மஹாளய பக்ஷம் என 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டும் என சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. அதனை ஷன்னவதி தர்ப்பணம் என சிறப்பாக கூறுகிறது. இன்று வேலை மற்றும் தொழில், வாழும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த 96 நாட்களும் தர்ப்பணம் செய்வது அனைவருக்கும் இயலாத காரியமாகும் என்றாலும் ஓய்வு பெற்ற பிறகு செய்யலாம். என்றாலும் முக்கியமான தர்ப்பணங்களையாவது தவறாமல் செய்வது நல்லது, அந்த வகையில் தக்ஷிணாயனத்தில் வரும் ஆடி அமாவாசையும்  முக்கியமான ஒன்றாகும். 

  ஆடி அமாவாசை

  சூரியன் பிதுர்க்காரகன், சந்திரன் மாதூர்க்காரகன். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த இரண்டு கிரகங்கள் சேரும் நாளையே அமாவாசை என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அதிலும் சந்திரனின் வீடான கடகத்தில் சூரியன் சந்திரனுடன் சேர்வது மிகவும் விசேஷமான ஆடி அமாவாசையாகும். சூரியனின் மைந்தன் சனியின் நாளான சனிக் கிழமையில் ஆடி அமாவாசை வருவது கூடுதல் சிறப்பாகும்.

  முன்னோர்களின் ஆசி

  ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழத் துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர். நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.

  வசு ருத்ர ஆதித்யர்கள்

  பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள். தேஜஸ் – வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.

  பித்ரு வழிபாடு

  நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்துப் படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

  இறந்தவர்களுக்கும் எள்ளுக்கும் உள்ள தொடர்பு

  சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவகாரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால், இந்த உடலுக்கு (எலும்போடு சேர்ந்த கட்டுமானம்) சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாகக் கூறுகிறது. எனவே, சனீஸ்வர பகவானின் தானியமான எள்ளை பித்ரு சிரார்த்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள். மேலும் எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்குப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறது நமது வேதம்.

  பித்ரு தோஷம்

  நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே திதியன்று (ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் அக்னி ஸ்வரூபமாகவும் பிராமண ஸ்வரூபமாகவும் பித்ருக்களை வரித்து அக்னிக்கும் பிராமணர்களுக்கும் ஒரே நேரத்தில் போஜனமளித்து பின்  பிண்ட ரூபத்தில்  இருக்கும் பித்ருக்கு எள் கலந்த நீர் அளித்து தர்ப்பணம் செய்வதே சிராத்தமாகும். இதனால், குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

  ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதேதோ காரணங்களால் கொலை அல்லது தற்கொலை மற்றும் விபத்தினால் அகால மரணம் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அப்படி செயற்கையான முறையில் இறந்தவர்ளுக்கு முறையாக கர்ம காரியங்களைச் செய்து அந்த ஆத்மாவை கரை சேர்ப்பது மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்தம் ஆகியன செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் விடும்போது அந்த ஆத்மாக்கள் நற்கதி அடையமுடியாமல் பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்திர தோஷங்களாக வடிவெடுத்து, நாம் பிறக்கும் நேரத்தில் ராகு மற்றும் கேதுவாகத் திரிகோணங்களில் அமர்ந்துவிடுகின்றன.

  அதனால், ஜாதகருக்கும் அவரின் சந்ததியினருக்கும் திருமணம் தடை, குழந்தையின்மை, தெய்வானுக்ரஹம் இல்லாத நிலை, பூர்வீக சொத்துக்களில் பிரச்னை மற்றும் வில்லங்கம், தீராத நோய், அடிக்கடி சண்டை போன்றவை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். எத்தனை கோயில்களுக்குச் சென்று அன்னதானம், ஆடை தானம், பசு தானம், ருத்ராட்ச தானம், தண்ணீர் தானம், விளக்கு தானம், கும்பாபிஷேகம் செய்தாலும் பலன் கிடைக்காது. நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.

  ஜாதகத்தில் பித்ரு தோஷத்தை எப்படி அறிவது?

  1. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடம் என்பது பூர்வபுண்ணியம் ஆகும். அதே ஐந்தாமிடம் தான் அவர்களுடைய சிந்தனைஸ்தானம், புத்திரஸ்தானம், குல தெய்வஸ்தானம், மன உறுதி ஸ்தானம் ஆகும். இங்கே ராகு அல்லது கேது இருக்க ஒரு ஆணோ பெண்ணோ பிறந்துவிட்டால், அந்த ஜாதகருக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும். பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம்.

  2. பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன.

  3. சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரஹண தோஷத்தைத் தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.

  4.ஒரு ஜாதகத்தில் சனைஸ்வரரின் நிலையும் பித்ரு தோஷத்தை தெரிவிக்கும். சனைஸ்வர பகவான் பித்ரு ஸ்தானத்தில் நிற்பது, வக்ரம் பெற்று நிற்பது, குடும்பத்தில் அனைவரின் ஜாதகங்களிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வக்ரம் நீசம் ஆகிய நிலைகளில் நிற்பது பித்ரு தோஷத்தை தெரிவிக்கும்.

  5. லக்னத்தில் மாந்தி நிற்பது, சூரிய சந்திரர்களுடன் மாந்தி சேர்ந்து நிற்பது போன்ற நிலையும் பித்ரு தோஷத்தைத் தெரிவிக்கும். 

  பித்ரு தோஷ பரிகாரங்கள்

  1. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லாணி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட சிரார்தம் செய்வது பித்ரு தோஷத்தைப் போக்கும் என்கிறது சாஸ்திரம்.

  2. இந்தியாவில் உள்ள பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் பித்ரு வழிபாட்டுக்கு உகந்த தலங்களில் ஒன்று. ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி, ராமபிரான் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட திருத்தலம். இந்தத் தலத்தில் உள்ள தீர்த்தங்களில் அக்னி தீர்த்தம், பித்ரு தோஷத்தைப் போக்கும் ஆற்றல் கொண்டது. 

  3. வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் செளந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவதலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்குத் திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார்.  திருப்பூவணத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். காசியை காட்டிலும்  வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.

  4. திலதர்ப்பணபுரி. திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன.

  இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்திலிருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது.

  4. வட இந்தியாவில் கங்கையுடன் யமுனை, சரஸ்வதி நதி இரண்டும் சங்கமிக்கும் தலம் ‘திரிவேணி சங்கமம்’ (அலகாபாத்) எனப்படுகிறது. இங்கு, சரஸ்வதி நதி கண்ணுக்குத் தெரிவதில்லை. அதுபோல், தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என மூன்று நதிகளும் கூடும் இடம், ‘தென் திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை (ஈரோடு மாவட்டம்). இந்த கூடுதுறையில் கோயில் கொண்டிருப்பவர், ஸ்ரீசங்கமகேஸ்வரர். பவானி கூடுதுறை, பாவம் போக்கி புண்ணியம் அளிக்கும் சக்திமிக்க தலமாகத் திகழ்வதால், ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் இங்கு நீராடி, பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வது மிகுந்த விசேஷம் என்பது ஐதீகம்.

  5. தாமிரபரணி மஹாத்மியத்தில், வியாசரால் போற்றப்படும் அகரத்தில் காசி தலத்தைப் போலவே, ஸ்வாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். எனவே இதை, ‘தக்ஷிண காசி’ என்று ஞான நூல்கள் சிறப்பிக்கின்றன. இங்கே வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் தாமிரபரணியை, `தட்சிண கங்கை’என்று போற்றுகின்றனர். பித்ரு சாப விமோசன தீர்த்தமாகத் திகழ்கிறது.

  ஆடி மற்றும் தை மாத அமாவாசைகளிலும், புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை திருநாளிலும் இங்கே வந்து, தாமிரபரணியில் நீராடி, பித்ரு ஸ்ரார்தங்கள் செய்து  ஈரத்துணியுடன் ஸ்ரீ காசிவிஸ்வநாதருக்கு வில்வ மாலையும் ஸ்ரீவிசாலாட்சிக்கு செவ்வரளி மாலையும் சார்த்தி வழிபட வழிபட, ஈசனின் அருளும் கிட்டும்; பித்ருக்களும் ஆசீர்வதிப்பர். கோசாரத்தில் விருச்சிக ராசியில் குருபகவான் பயணம் செய்வதால் தாமிரபரணி புஷ்கர வருஷமாக திகழும் இந்த வருஷத்தில் ஆடி மாதத்தில் அகரம் படித்துறையில் பித்ரு காரியங்கள் செய்ய மிகவும் உன்னதமான ஸ்தலமாகும்.

  5. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்ப்பணம், ஸ்ரார்தம் செய்து 

  "தேவதாப்ய: பித்ருப்ய: மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" என்றும் யேஷாம் ந மாதா ந பிதா ந மித்ர ஜ்ஞாதி பாந்தவ:| தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மாயோத் ஸ்ருஷ்டை: குசோதகை: எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.

  பெண்கள் சிரார்த்தம்/தர்ப்பணம் கொடுக்கலாமா?

  ஒவ்வொரு முறை பித்ரு தோஷம் பற்றிக் கட்டுரை எழுதும்போதும் சிலர் தொலைபேசியில் அழைத்து பெண்கள் இறந்தவர்களுக்கு பித்ரு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யலாமா எனக் கேட்கிறார்கள். நமது தாய், மனைவி, நமது சகோதரிகள் என அனைவருமே திருமணத்திற்குப் பின் வேற்றிடம் சென்று வாழ்வதால் பெண்களுக்கு பித்ரு காரியங்கள் செய்யும் கடமை மற்றும் அதிகாரங்கள் கிடையாது. மேலும் பித்ரு தோஷம் ஆண்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆண் வாரிசு இல்லாத பெற்றோர்களுக்கு பெண்கள் நேரிடையாக பித்ரு காரியங்கள் செய்ய சாஸ்திரங்கள் பரிந்துரைக்கவில்லை. அதே சமயம் பெண் வாரிசுகள் தங்கள் ஆண் குழந்தைகளை  (அதாவது மகள் வழி பேரன்) கொண்டு பித்ரு காரியங்களைச் செய்யலாம். 

  புனிதமான ஆடி அமாவாசையன்று, முன்னோரையும் மறைந்த தாய், தந்தையரையும் நினைத்துத் திதிகொடுப்பது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்டதெய்வ ஆலயங்களில் வழிபாடு, சிறப்புப் பூஜைகள் செய்வது, ஏழைகள், இல்லாதோர், இயலாதோருக்கு அன்ன தானம், வஸ்திர தானம் செய்வது நாம் செய்த பாவங்கள், கர்ம வினைகள், தீவினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தைச் சேர்க்கும் என்பது நம்பிக்கை.

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

  Mobile 9498098786

  WhatsApp 9841595510

  Email: astrosundararajan@gmail.com

  Web: www.astrosundararajan.com


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp