ஆடி அமாவாசை: மாங்கல்ய பலம் பெற பெண்கள் இந்த கதையைப் படிங்க!

ஆடி அமாவாசை: மாங்கல்ய பலம் பெற பெண்கள் இந்த கதையைப் படிங்க!

ஆடி அமாவாசை முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற பட்டணத்தை கத்தலைராஜா என்ற அரசன்..

ஆடி அமாவாசை முன்னொரு காலத்தில் அழகாபுரி என்ற பட்டணத்தை கத்தலைராஜா என்ற அரசன் ஆண்டு வந்தான். இவனுக்குக் குழந்தைகள் இல்லை. பல புண்ணிய தலங்களுக்குச் சென்று விரதம் மேற்கொண்டான். புண்ணிய நதிகளில் நீராடினான். அதன் பலனாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு அழகேசன் எனப் பெயரிட்டனர். 

கத்தலைராஜா ஒருமுறை வேட்டைக்குச் சென்றான். தாகத்தின் மிகுதியால் ஒரு சுனையைத் தேடிச்சென்றான். தண்ணீர் குடித்துவிட்டு நிமிர்ந்து பார்க்கவும் எதிரே ஒரு காளி கோயிலிருந்தது தெரிந்தது. காளி மாதாவைத் தரிசித்தான். அன்னையிடமிருந்து ஒரு வாக்கு வெளிப்பட்டது. மன்னா! நீ ஆசையோடு வளர்க்கும் உன் அருமை மகன் 16ம் வயதில் இறந்துவிடுவான் எனச் சொல்லிவிட்டு அடங்கிவிட்டது. 

மன்னன் தவித்தான். தாயே! இது என்ன கொடுமை? வேண்டுமானால் என் உயிரையும், என் மனைவியின் உயிரையும் இப்போதே எடுத்துக்கொள். அவனுக்கு நீண்ட ஆயுளைக்கொடு, என அழுதுகொண்டும் ஆவேசத்தோடும் சொல்லியபடியே, வாளை எடுத்து தன்னை மாய்க்க ஓங்கினான்.

மன்னா! பொறு. நான் சொல்வதைக் கேள். உன் மகன் இறந்ததும் சடலத்திற்கு உலகிலேயே நல்ல குணங்கள் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து வை. அவளது மாங்கல்ய பலத்தால் உன் மகன் மீண்டும் உயிர் பெற்று எழுவான், என்றாள் காளி.

காலமும் விரைந்து ஓடியது. அழகேசனுக்கு 15 வயதானது. இன்னும் ஒரு ஆண்டில் மகன் உயிர்நீத்துவிடுவான் என்று எண்ணிய அரசன் மனம் வருந்திக் கொண்டிருந்தான். ஒரு சிறிய கிராமத்திற்குச் சென்றான். அங்கே தேவசர்மா என்ற முதியவர் வாழ்ந்தார். 

அவருக்கு ஏழு ஆண்மக்கள். கடைசியாக ஒரு பெண் குழந்தை. குழந்தை பிறந்ததும் அவரது மனைவி ஜன்னி கண்டு இறந்துவிட்டாள். இதனால் அந்த பெண் குழந்தையை எல்லாரும் வெறுத்தார்கள். 

அண்ணன்களுக்கெல்லாம் திருமணம் முடிந்துவிட்டது. கங்கா என்ற பெயர் கொண்ட அந்தப் பெண்ணுக்கு மட்டும் திருமணம் நடக்கவில்லை. அனைத்து அண்ணிகளும் கங்காவை கொடுமைப்படுத்தினர். கங்காவுக்கு சாப்பாடு கொடுப்பதில்லை. தண்ணீரைக் குடித்துக்கொண்டே வாழ்நாள் முழுவதும் கண்ணீர் சிந்தினாள்.

ஒருமுறை வீதியில் பறை அறிவிக்கப்பட்டது. அழகாபுரி மன்னன் மகன் இறந்து விட்டான். அவனது சடலத்திற்கு யாராவது நற்குணமுள்ள பெண் கொடுத்தால் அந்த குடும்பத்திற்கு வேண்டும் அளவு செல்வம் தரப்படும், என கூறப்பட்டது. 

அண்ணிகள் அனைவரும் மகிழ்ந்தனர். தங்கள் கணவன்மாரை வசப்படுத்தி கங்காவை சடலத்திற்கு திருமணம் செய்துவைக்க கட்டாயப்படுத்தினர். அவளுக்கு அலங்காரம் செய்விக்கப்பட்டது. ஆனால் விஷயத்தை சொல்லவில்லை. கங்காவுக்கு ஏதும் புரியவில்லை. நேற்றுவரை கொடுமை செய்த அண்ணிகள் இன்று இவ்வாறு உபசரிப்பதன் காரணம் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினாள். அவளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ள விஷயத்தை அண்ணிகள் சொன்னார்கள். 

மறுநாள் கங்கா அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டாள். ஏழையான தன்னை அரண்மனைக்கு அழைத்து வந்திருப்பதன் காரணத்தைத் தெரிந்துகொள்ளாமல் கலங்கினாள். ஆயினும் தலைகுனிந்த வண்ணம் உள்ளே சென்றாள். மணவறையில் அமரவைக்கப்பட்டாள். 

அவளது அருகில் சடலம் வைக்கப்பட்டது. அக்கால மன்னர் முறைப்படி கண்ணைக்கட்டிதான் திருமணம் செய்ய வேண்டும் என்று அவளிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி கண்ணைக்கட்டிவிட்டனர். திருமணம் நடந்தது. ஒரு பல்லக்கில் கங்காவையும் சடலத்தையும் ஏற்றி காட்டில் கொண்டு விடக்கூறினர். 

பல்லக்கு இறக்கப்பட்டதும் கண் கட்டு அவிழ்க்கப்பட்டது. அருகில் இருந்த சடலத்தைப் பார்த்து கங்கா அதன் அழகில் லயித்துப்போனாள். தனக்கு இப்படிப்பட்ட அழகான கணவன் கிடைத்ததற்காகப் பெருமைப்பட்டாள். அசதியின் காரணமாக அவன் உறங்குகிறான் என நினைத்துக்கொண்டாள். நீண்ட நேரமாகியும் கணவன் எழவில்லை. எனவே கணவனை மெதுவாகத் தொட்டு எழுப்பினாள். அவன் அசையவில்லை. அவனை லேசாக அசைத்துப்பார்த்தாள். எவ்வித உணர்வும் இல்லாததால் அவளுக்கு நிலைமை புரிந்துவிட்டது. தனக்குச் செய்யப்பட்ட மோசடியை அறிந்து கண்ணீர்விட்டாள். 

அப்போது வான் வழியே பார்வதியும், பரமேஸ்வரரும் புஷ்பக விமானத்தில் சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் காதில் கங்காவின் ஓலம் கேட்டது. பார்வதிதேவி சிவனிடம், அந்தப்பெண் எதற்கோ அழுகிறாள். என்னவென்று கேட்டு வருவோம், என்றாள். சிவன் அவளிடம், அந்தப்பெண் அறியாமல் ஒரு சடலத்தை திருமணம் செய்துகொண்டுவிட்டாள். அதை நினைத்தே அழுகிறாள். அவனது விதி முடிந்துவிட்டது. நாம் போகலாம் வா, என்றார்.

கருணைக்கடலான பார்வதிதேவி பிடிவாதம் பிடித்தாள். அந்தப்பெண்ணை அவசியம் பார்க்க வேண்டும் என்றாள். (இதற்காகத்தான் அம்மன் வழிபாடு இப்போதும் பிரபலமாக இருக்கிறது. ஆண் தெய்வங்களை வணங்குவதைவிட அம்மனை வணங்கினால் காரியம் விரைவில் கைகூடிவிடும் என்பது நம்மவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.  கிராமப்புறங்களில் அம்மன் வழிபாடு அதிகரிக்க இதுவே காரணம்.) 

இருவரும் அவளிடம் வந்தனர். பார்வதி தேவியின் காலில் விழுந்து புலம்பினாள் கங்கா. அத்துடன் சிவபெருமானின் கால்களைக் கட்டிக்கொண்டு தன் கணவனுக்கு உயிர் தராவிட்டால் அவ்விடத்தைவிட்டு அகலவிடமாட்டேன் எனச் சூளுரைத்தாள்.

சிவன் அவளிடம், மகளே! கவலைப்படாதே! அழுகையை நிறுத்து. உன் முன் வினைப்பயனால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தையும் உன் வீட்டிலேயே தொலைத்து விட்டாய். இன்று ஆடி அமாவாசை. இந்நாளில் இறைவனை நினைத்து வழிபடுவோருக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும். பெண்கள் சுமங்கலிகளாய் இருக்க அருள்செய்யும் விரதநாள் இது. உன் கணவன் உடனே எழுவான், என்றார்.

அழகேசனும் எழுந்தான். பார்வதிதேவி கங்காவிடம், உனது வரலாற்றைப் படிக்கும் அனைத்து பெண்களுக்கும் மாங்கல்ய பாக்கியம் சித்திக்கும். ஆடி அமாவாசைக்கு முதல்நாள் இக்கதையை ஒருவர் சொல்ல மற்றவர் கேட்க வேண்டும் என அருள்பாலித்தார். ஆகையால், பெண்களே, மாங்கல்ய பலம் பெற, ஆடி அமாவாசைக்கு முதல் நாள் இந்தக் கதையைப் படியுங்கள். பிற பெண்களுக்கும் கூறுங்கள். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com