பஞ்சபூதத்தில் அடக்கிய இந்த பிரபஞ்சமும் நம் சாஸ்திர வழிமுறைகளும் - பகுதி 2

நம் நாட்டின் கலைகளில் சித்த மருத்துவம் பஞ்சபூத சக்திகளில் விகிதாச்சாரம் மாறுபட்டால்..
பஞ்சபூதத்தில் அடக்கிய இந்த பிரபஞ்சமும் நம் சாஸ்திர வழிமுறைகளும் - பகுதி 2

பஞ்சபூத தத்துவத்தில்  உடலில் அக மற்றும் புற  இயக்கம்

நம் நாட்டின் கலைகளில் சித்த மருத்துவம் பஞ்சபூத சக்திகளில் விகிதாச்சாரம் மாறுபட்டால் தான் மனிதனுக்கு நோய் வருகிறது என்றும், அவற்றைச் சரி செய்தால் நோய் தீரும் என்பதையும் நாடி மற்றும் பஞ்சலோக முறைப்படி மருத்துவம் கொடுக்கப்பட்டது. சித்த மருத்துவக் கோட்பாட்டியலின் உணவு மற்றும் உடலியல் கொள்கையில் பஞ்ச பூதங்கள் பங்கு உள்ளன. எடுத்துக்காட்டாக மண் சம்மந்தப்பட்ட நாம் உண்ணும் உணவில் சர்க்கரை, புரோட்டீன், விட்டமின், மினரல் போன்ற பொருட்கள் உள்ளது.

"பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐந்துளும்

ஏதம் படஞ்செய்து இருந்து புறநிலை

ஓதும் மலம்குணம் ஆகும்ஆ தாரமொடு

ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே" -   

- திருமூலர்.

இந்த 96 பொறிகளை அறிந்து தெளிந்துகொள்வதே சித்த மருத்துவத்தின் அடிப்படையாகிறது. இவை ஒவ்வொன்றின் இயல்பு, குணம், தொழிற்பாடு போன்றவற்றை உணர்ந்து கொண்டுவிட்டால், சித்த மருத்துவத்தின் மகிமைகளைப் புரிந்து கொள்ளமுடியும். அதனை வெற்றிகரமாய் பயன்படுத்திடவும் முடியும். உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் கொண்டு மருத்துவம் அமைக்கப்பட்டுள்ளது அவை வருமாறு.

மண்: எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர்.

நீர்: உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து.

நெருப்பு : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம்.

காற்று: போதல், வருதல், நோய்ப்படுதல், தொடுதல்.

ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை.

பஞ்சபூதத்தில் அடங்கிய பஞ்சலோக அறிவியல்

உலகில் வாழும் அணைத்து ஜீவராசிக்கும் நீர், உணவு, காற்று முக்கியமானவை. அதைச் சீராகக் கொடுத்துக்கொண்டு இருக்கும். பஞ்சலோகமான குருவானவர் ஆகாய தத்துவம் கொண்டவர் அவர் தங்கத்தின் அதிபதி, சுக்கிரனானவர் நீர் தத்துவத்தைக் கொண்டு வெள்ளியை ஆள்பவர், செவ்வாயானவர் நெருப்பு தத்துவத்தை கொண்டு செம்புக்கு உரியவர், சனியானவர் காற்றின் தத்துவம் கொண்டு இரும்பை ஆள்பவர், கேது ஆனவர் மோட்சம் என்ற நில தத்துவத்தை கொண்டு ஈயத்தைச் செயல்படுத்துபவர்.

அண்டத்திலுள்ளதே பிண்டம் 

பிண்டத்திலுள்ளதே அண்டம் 

அண்டமும் பிண்டமு மொன்றே 

அறிந்து தான் பார்க்கும் போதே  

-   என்று சித்தர் கூற்று.

பொதுவாக உடலைப் பிண்டம் என்போம். பூமி உள்படப் பிரபஞ்சத்தை அண்டம் என்போம். உலகத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்பது ஒரு சூட்சம விதி என்னவென்றால் - பிண்டம்  என்பது உடம்பைக் குறிக்கும். பிரபஞ்ச சக்தியானது பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள மனித உடலானது உலகில் உள்ள தாவரப் பொருட்கள் மற்றும் பஞ்சலோகத்தால் அடங்கி உள்ளது.  இந்த தத்துவங்களின் அடிப்படையில்தான் மனித உயிர் அனைத்து சக்திகளையும் ஆட்டுவிக்கிறது. உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையைச் செய்கின்றன என்பதே சித்தர்கள் கூற்று. அதனால் தான் நம் முன்னோர்கள் தங்கள் உடலில் எப்பொழுதும் உலோக தன்மை உடலில் இருக்கும் வண்ணம் ஐம்பொன்னை அணிந்து வந்தனர். இந்த உலோகங்களை அணிவதால் உலோகத்தில் உள்ள தாது சத்துக்கள் நம் உடலுக்கு ஈர்ப்புத் தன்மை கொண்டு இயக்கும் என்பது அறிவியல் ரீதியான உண்மை. இந்த ஐம்பொன் ஆபரணங்களுக்கு அதிக காந்த ஈர்ப்பு சக்தி, ஞானசக்தி,  அறிவு ஆற்றல், ஆன்மிக சக்தி, புத்துணர்ச்சி, உடல்ரீதியான ஊக்குவிப்பானாக உள்ளது இவ்வுலோகங்கள்.  அதுவே நம் காலங்களில் பேஷன் என்ற பெயரில் பிளாஸ்டிக் மற்றும் கவரிங் அணிவது பேஷன் என்கின்றனர். மற்றும் நம் முன்னோர்கள் சமைப்பதற்கு மண் பாண்டங்கள், வெங்கலம், வெள்ளீயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களைத் தான் அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர். அதையே சீராகப் பெண் வீட்டாரிடம் தரப்பட்டது. பெண்ணிற்கு சீதனமாகச் செம்பு மற்றும் வெள்ளி பாத்திரங்கள் மற்றும் தங்க வெள்ளி நகைகள், ஈய சொம்பு என்று கொடுத்தனர். வேதியல் கோட்பாட்டுக்கு இணங்க இவற்றுள் உலோகத்தின் தன்மையும் உள்ளது.   

பிறப்பு முதல் இறப்பு வரை நம்மை ஆட்டிப்படைக்கும்

பஞ்சபூத கடவுளை வணங்கும் முறை 

     மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ 

     டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து. 

பஞ்ச பூதங்கள் தன்மை கொண்ட பஞ்ச கர்த்தாக்களையும் (ஐந்து மூர்த்திகள்: பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன்) மற்றும் பஞ்ச சக்திகளையும் (பராசக்தி, ஆதிசக்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, க்ரியா சக்தி) மந்திரங்களோடு ஜபித்தால் அனைத்து சக்தியும் கிட்டும். பகவான் ஸ்ரீசத்ய சாயி பாபா கூறுகிறார். “இந்தப் பேரண்டம் முழுவதும் பஞ்ச பூதங்களால் ஆனது. ஒலி, தொடுதல், வடிவம், சுவை, மணம் ஆகியவை, அவற்றின் தன்மைகள். இவை அனைத்தும் “சத்-சித்- ஆனந்தத்திலிருந்து வெளி வந்தவை”. மனிதனுக்கும் பஞ்ச பூதங்கள், அதன் ஐந்து குணங்கள், ஐந்து புலன்கள், ஐந்து மனித மேம்பாடுகள் ஆகியவற்றுக்கு இடையே இயல்பாகவே இசைவான தொடர்பு உள்ளது.” 

பஞ்சமி பஞ்ச தீப வழிபாடு

அமாவாசை முடிந்த 5ம் நாள் மற்றும் பெளவுர்ணமி முடிந்த 5-ம் நாள் வருவது மகா சக்தியான  பஞ்சமி திதி. பஞ்சமி திதி அன்று ஐந்து எண்ணெய் கலந்து குத்துவிளக்கின் ஐந்து முகத்தினையும் ஏற்றி  சக்தி உருவானவளை வழிபட வேண்டும். ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ.. என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி இனிப்பு அல்லது பழம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

வாஸ்து பஞ்சபூதத்தை வணங்குதல்

வாஸ்து என்பது பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகியவற்றின்  கூட்டமைப்பு. பஞ்ச பூதங்கள் அனைத்திற்கும் தனித்தனியாகச் சிறப்பியல்புகள், திசைகள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் உள்ளன. எட்டுத் திசைகளிலும் சரியாக அமையப்பெற்ற வீட்டில் அஷ்டலக்ஷ்மி குடியேறுவாள், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும், சுப செலவு உருவாகும், திருமணம் நடைபெறும், குழந்தைகள் சுபிட்சம் அனைத்தும் அந்த வீட்டில் வாசம் கொள்ளும். இந்துக்களின் வேதங்களின் ஒன்றான அதர்வண வேதம், பிருஹத் சம்ஹிதை ஜோதிடம், மானசாரம், மயமதம், மற்றும்  விஸ்வகர்மாவின் விஸ்வகர்மீயம் முதலிய பழம் பெரும் நூல்களில் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றிய முக்கிய விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. விஸ்வகர்மாவினால் உருவாக்கப்பட்டது இந்த வாஸ்து சாஸ்திரம் என்றும் கூறுகின்றனர். சூரியனைப் பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, நீரின் ஓட்டம், ஆகியவற்றின் சூட்சம பஞ்சபூத அடிப்படையில்தான் வீட்டுமனை, கட்டிடம் போன்றவற்றை அமைப்பதற்கு நம் முன்னோர்கள் சாஸ்திரங்களை வழிவகுத்தனர். இவையே மனையடி மற்றும்  வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. 

நாம்  வீடு கட்டும்பொழுது  வாஸ்து புருஷன் என்னும் பஞ்சபூத கடவுளுக்குத் தனி மரியாதையும் அவருக்கு உரியப் பூஜைகள் செய்யவேண்டும். பிரம்மனால் உருவாக்கப்பட்ட  வாஸ்து பூதம்  குறிப்பிட்ட எட்டு மாதங்களில் 1½ மணி நேரம் நித்திரையிலிருந்து விழித்திருப்பார். அதில் 18  நிமிடம் மட்டும் விழித்து தன் பணிகளான பல் துலக்குவது, ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல்  என்று பல காரியங்களைச் செய்வதாக ஐதீகம். தோ4ஷம் உள்ள அனைத்து ஜாதகருக்கு அந்த நேரத்தில் எந்தவித நற்காரியமும் செய்யலாம். வாஸ்து தெய்வத்தின் தலை, உடல், கால் போன்றவற்றின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப மற்றும் பஞ்சபூத தத்துவத்திற்கு ஏற்ப மனையில் அமையும் வீடு சீரும் சிறப்புமாக விளங்கும்.

சிவனால் உருவாக்கப்பட்ட பஞ்சபூதங்களுடன் எட்டுத் திசையும் பறைசாற்றும் இந்த வாஸ்து வடிவமைப்பு. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 திசைகள் தவிர, வடக்கும்–கிழக்கும் இணையும் வடகிழக்கு (ஈசான்யம்), கிழக்கும்–தெற்கும் இணையும் தென்கிழக்கு (அக்னி), தெற்கும்–மேற்கும் இணையும் தென் மேற்கு (நிருதி), மேற்கும் – வடக்கும் இணையும் வடமேற்கு (வாயு) ஆகிய திசைகளும் உள்ளன. கிழக்கில் இந்திரன், வடக்கில் குபேரன், தெற்கில் எமன், மேற்கில் வருணன் ஆகியோரின் பார்வை இருப்பதாகக் கூறப்படுகிறது. பஞ்ச பூதங்களையும்  அதன் திசையில் வைத்துச் சரியாக வீட்டைக் கட்டினால் வாழ்க்கை நலமாக  இருக்கும்.

பஞ்சாமிர்தம்

செவ்வாய் தோஷத்திற்கு, உடலில் நோயின் தாக்கத்தைக் குறிக்கும் முக்கிய கிரகம் செவ்வாய். அவரை சாந்தமடைய செய்ய முருகர், சிவன் மற்றும் செவ்வாய் பகவானுக்கு 5  வகை பழம் கொண்டு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து வழிபடலாம். 

பஞ்சபூதத் தலங்கள்

என்றவுடன் அனைவருக்கும் தெரியும் அவை தென்னிந்தியாவில் இறைவனான சிவபெருமான் அருள்புரியும் பஞ்சபூத சக்திகள் ஒவ்வொன்றினையும் கொண்டு கோவில்களை உருவாக்கி வழிபாடு செய்யப்படுகிறது. அவை 

ஆகாயம் (ஆகாசம்) – நடராஜர் , சிதம்பரம்

நிலம் (பிரித்வி) – ஏகாம்பரேசுவரர், காஞ்சிபுரம்

நீர்(அப்பு),  – ஜம்புலிங்கேஸ்வரர், திருவானைக்காவல் 

நெருப்பு (தேயு) – அண்ணாமலையார், திருவண்ணாமலை 

காற்று (வாயு) – காளத்தியப்பர், திருகாளகத்தி – பஞ்சபூத தலங்களுக்குச் செல்லும்போது, பழமையான சிதம்பரத்தில் தொடங்கி காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல், காஞ்சிபுரம் சென்று யாத்திரையை நிறைவு செய்வது மரபு.

பஞ்சமுக கணபதி

பஞ்சபூத தத்துவம் கொண்ட அறம், பொருள், இன்பம் அருள்செய்து முடிவில் வீடு என்கிற  மோட்சத்திற்கு வழிகாட்டுவார் நம் கேதுவின் அம்சமான விநாயகர்.

பஞ்சமுக ஆஞ்சநேயர்

அஞ்சனை பெற்ற மைந்தன்    அனுமனை வணங்கினால் அச்சம் அணுவளவும் அண்டாது என்பதை இராமாயணத்தில் அஞ்சுககன் பற்றிய  பாடல்

அஞ்சிலே ஒன்று - வாயு - அவர்மைந்தன் அனுமன்
அஞ்சிலே ஒன்று - மண் – அதில் உதித்த சீதையைத் தேடி
அஞ்சிலே ஒன்று – கடல் – அதனைத்தாண்டி
அஞ்சிலே ஒன்று – ஆகாயம் – அதன் வழியாய்ச் சென்று
அஞ்சிலே ஒன்று – தீ இலங்கையை எரித்தான்

- ஜோதிட சிரோன்மணி பார்வதிதேவி

Email: vaideeshwra2013@gmail.com

Whatsapp:  8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com