மனதை பாதிக்கும் மனோகாரகன் - பகுதி 2

மனதை பாதிக்கும் மனோகாரகன் - பகுதி 2

மனதின் ஓட்டத்தை அடக்குவது எப்படி?

இந்த கலியுக காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் (stress) ஏற்படுவது மிகவும் இயல்பானது தான். ஆனால் நம் ஜோதிட ரீதியாக பார்க்கும்பொழுது சந்திரன்  சனி, சந்திரன், ராகு, சந்திரன் கேது, சூரியன் சந்திரன் மற்றும் பாவிகளுடன் இருக்கும்பொழுது அந்தந்த பாவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அளவு விகிதாசாரம்  மாறுபடும். >75% இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். சந்திரன் கட்டுப்படுத்த குருவின் பார்வை தேவை. சந்திரனால் மனநோய் தவிர மற்ற நீரால் ஏற்படும் நோய்களும்,  கருமுட்டையால் ஏற்படும் பிரச்னைகளும் உண்டு அவற்றை பற்றி பின்பு பார்ப்போம். மனித உடலில் உள்ள கெட்ட கழிவு நீரான மனநோயை கொஞ்சம் கொஞ்சமாக  விரட்டலாம் எவ்வாறு என்று பார்ப்போம். 

எடுத்துக்காட்டாக சந்திரன் பாவிகளுடன் சேர்ந்து பாதகம் ஏற்படுத்தும் ஜாதகம் இது.

ஜோதிட ஆன்மீக ரீதியாக, யோகம் மூலமாக, உள்சார்ந்த மனக்கட்டுப்பாட்டால், உணவால், மனஅழுத்தைதை குறைக்கலாம். 

“முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு” என்பதுபோல் சந்திரனை சந்திரன் என்ற நீரை கொண்டு நீக்கலாம். கோவில் குளங்களில் குளிக்கலாம், நீரினை மற்றும் நீர்க்க உணவுகளை உட்கொள்ளலாம். அரிசி உணவுகளை உட்கொள்ளலாம். பச்சரிசி, பால் தானம் செய்யலாம். சந்திரன் மற்றும் அசுபர் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் நீர் உள்ள அம்பாள் கோவில்களில் பிராத்தனை, நெய்விளக்கு ஏற்றி, பால் அபிஷேகம் செய்து மற்றும் ஜபம் செய்யலாம். 

கடக ராசிக்காரர்கள், சந்திரனால் தாக்கம் உள்ளவரகள், நீர் வற்றி வாதநோய், மன நோய் மற்ற நோய்களுக்கான பாதிப்பு  இருப்பவர்கள் "மருத்துவர் திருத்தேவன்குடி  கற்கடகேஸ்வரரை தரிசிக்கலாம். கற்கடம் என்ற நண்டு சித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர். மருத்துவரின் தந்தையான தன்வந்திரி முனிவர் வந்து வழிபட்ட  தலம். அதனால் மருத்துவ சம்பந்தமான நோயிக்கு இங்கு வருவார்கள். சந்திரன் யோகநிலையில் அமர்ந்த தரிசனம் இந்த கோவிலில் உள்ளது. அம்மனுக்கு சாத்தி தரப்படும்  எண்ணெய் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாக கருதப்படுகிறது. இது கடும் நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமாகும்.

'மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் வேண்டில் இவை

புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை

திருந்து தேவன் குடி தேவர் தேவு எய்திய

அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே!’      

  - தெய்வ திருமுறை

அபிராமி அந்தாதி ஸ்லோகத்தை உச்சரிப்பது, திங்கள்கிழமை சந்திர ஓரையில் பூஜை செய்வது என்று இருந்தால் ஜாதகருக்கு சந்திரனால் ஏற்படும் தோஷம் நிவர்த்தி  அடையும்.   

“திங்கட் பகவின் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க

எங்கட்கொரு தவம்எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்

தங்கட்கும் இந்தத் தவமெய்துமோ? தரங்கக் கடலும்

வெங்கட் பணியணை மேல் துயில் கூரும் விழுப் பொருளே! “   

                                       - (அபிராமி அந்தாதி 35 ,  சந்திரன் துதி பாடல்) 

மனம் சார்ந்த அனைத்தும் மூளையை பாதிக்கும் அதாவது சூரியன் ஜாதகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். அதனால் மனம் மற்றும் மூளை சார்ந்த பாதிப்பு பரிகாரம் என்பது   சூரியன் சந்திரன் என்னும் சிவனையும் சக்தியும் சேர்ந்து இருக்கும் ஸ்தலங்களான திருமணச்சேரி, பட்டீஸ்வர துர்க்கை, கல்யாண வெங்கட்ரமணர் கோவில், ஆவூர் திருவகதீஸ்வரர் கோவில், திருவிடந்தை, தான்தோன்றிமலை, திருவிடைமருதூர், வைத்தீஸ்வரன் கோவில்,  திங்களூர், திருப்பதி, திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர்  திருக்கோவில், சோட்டானிக்கரை பகவதி அம்மன், குணசீலம் மற்றும் கல்யாண கோலம் கொண்ட அனைத்து பழம்பெரும் சைவ வைணவ கோவில்களையும் வணங்கலாம். திருமண பந்தம் வலுபெற கணவன் மனைவி இருவரும் இந்த கோவிலுக்குச் சென்று பிராத்தனை செய்து தம்பதிகளாக நமஸ்கரிக்க வேண்டும்.

சந்திரன் நல்வழி பயணம்

திருமண பாக்கியம், குடும்ப சூழ்நிலை சரியாக அமையவில்லை என்று அதையே நினைத்துக் கொண்டு மனதை இன்னும் ரணமாக்க கூடாது. நமக்கு மன நோய் இருப்பது என்பது முதலில் மருத்துவரை வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும். மனதை மாற்றும் சக்தியாக மருந்தாக மற்றும் மாறுபட்ட கருத்தாக நாம் என்னமாதிரி நல்ல வளர்ச்சி நோக்கி செல்ல வேண்டும் (positive thoughts) என்று கண்டறிந்து அந்த வழியில் செல்லவேண்டும். 

அந்தக் காலத்தில் கூட்டு குடும்பம் என்ற ஒரு போர்வை இருந்தது. தவறு என்று சொல்லவும், நம் கஷ்டங்களை கேட்க பேச ஒரு பெரியவர்கள் கூட்டம் நம்மை சுற்றி இருக்கும். யாருக்காவது பாதிப்பு இருந்தால் அனைவரும் ஒட்டுமொத்தமாக வந்து உதவுவார்கள். வீட்டில் அமைதி என்ற மயானம் இல்லாமல் சிரிப்பும் சந்தோஷம் நிறைந்து இருக்கும். இதனால் மனம் என்ற போர்வையில் அழுக்கு சேராமல் இருந்தது. தற்பொழுது தனிக்குடித்தனம் என்ற பெயரில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மன அழுத்தத்தினால் (stress) என்ற போர்வைக்குள் கஷ்டப்படுகிறார்கள்.

எடுத்துக்காட்டாக என்னிடம் ஒரு ஜாதகர இரு குழந்தையுடன் தன் திருமண வாழ்க்கை சரியாக இல்லை, என்ன செய்யலாம் என்று வந்தார்கள். அவர் திருமணமாகி 6 வருடம் ஆகியும் கணவர் கொஞ்சம் மனப்பித்து (psycho) மாதிரி செயல்படுகிறார் என்று கூறினார். அதனால், அவரை கோர்ட் மூலம் விடுதலை பத்திரத்தை அனுப்பியதாக கூறினார். கணவனை ஜாதகத்தில் பார்த்தால் பயந்த சுபாவம் ஆனால் ஏகப்பட்ட தவறுகள் பயத்தால் செய்கிறார் என்று புரிந்தது. இது இருவர் மனம் சார்ந்த பிரச்னை. 

பெண்ணுக்கும் ஏகப்பட்ட குழப்ப நிலை, தன் தாய்வீட்டிலும் சொல்ல முடியவில்லை. சந்திரனுடன் சனி ராகு அனைத்தும் அவருக்கு சாதகமற்ற நிலையில் இருந்தது, தசை  புத்தியும் சரியாக இல்லை. இது இவரின் கர்மா அதை ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. அவருக்கு எந்தவித சந்தோஷமும் இல்லை. நான் அவருக்கு கொடுத்த சிகிச்சை  என்னவென்றால் - மனதை ஒரே கோணத்தில் செலுத்தாமல் வேறு கோணத்தில் செலுத்த சொன்னேன். அவள் ஜாதகப்படி அவளுக்கும் சந்திரன் பாவியாக உள்ளார். அவள்  ஜாதகப்படி படிப்பில் அறிவாளி அந்த பெண்ணை உயர் படிப்பில் கவனத்தை திருப்பினேன். இன்று அவள் வேலைக்கு சென்று படிப்பையும் படித்துக்கொண்டு, குழந்தைகள்,   தாய், தந்தையம் கவனித்துக்கொண்டு தற்பொழுது படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறாள். சிறிதுகாலம் கழித்து இவள் அதிக வருமானத்துடன் மகிழ்ச்சியாக இருப்பாள்  என்பது நியதி. இவளுக்கு மருந்து அவளே என்று உணர்ந்தாள். இவளுக்கு பரிகாரத்தைவிட இவளுக்கு கோழைதன்மை மாற்றும் மன தைரியத்தை கொடுக்கும் கிரகம்  தேவை. சூரியன் செவ்வாய் ஆதிக்கம் கொண்டவர்களின் நட்பு தேவை, அவள் மனதை தேவையற்றை யோசிக்கவிடாமல் நல்ல வழியில் இறுக்கமான அட்டவணையில்  அவளுக்கும் தெரியாமல் மாற்றிவிட்டேன்.  

மனமே ஓய்வெடு (Relax)

மனதை ஒருமுகப்படுத்தி தியான நிலையில் செல்வது யோகா. அதற்கு யோகிகளும் ஞானிகளும் பலமுறைகளை யோகம் மூலம் தீர்வு காண்கின்றனர். மனதை எவனால் கட்டுபடுத்த முடியுமோ அவனை எந்த அசுபரும் பாவியும் தாக்க முடியாது இது சித்தர்கள் கூறும் பிரபஞ்ச ரகசியம். யோகக் கலையானது இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அந்த 8 படிகளையும் நாம் சரியாக செய்தால் உடல், மனம், ஆத்மா மூன்றும் தூய்மையாகிவிடும் மற்றும் அழகாக மாறிவிடுவர். மனிதனின் உடம்பு 72 ஆயிரம் நாடிகள் அனைத்தும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்கினை, துரியம் ஆகிய 7 சக்கரங்களில் இணைக்கப்பட்டு இருப்பதாக சித்தர்கள் கூற்று. இதற்கென்று வெவ்வேறு முறையில் வகுப்புகள் நடத்துகின்றனர். அதனால் தான் பழமையான கோவில்களில் பல மணிநேரம் யோகநிலையில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். தியானத்தின் மூலம் நாம் எந்தவித மனதைரியமும் நமக்கு வந்துவிடும். ஆனால், இதற்கும் அளவுகோல் உண்டு. 

எல்லா மன நோயாளிக்கும் தீர்வு என்பது கடினம் தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவ முறையிலும், கடவுளின் அனுக்கிரத்திலும் மாற்ற முடியம் என்பது என்  கருத்து. இதற்கு உதாரணம் சிவபெருமானே மனம் என்ற சந்திரனை தலைக்கு மேல் வைத்து தவம்புரியும் தியான கோலம்.

- ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி

Email: vaideeshwra2013@gmail.com

Whatsapp:  8939115647

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com