திருமணத்துக்குப் பொருத்தம் பார்ப்பது அவசியமா? அவசியமில்லையா?

திருமணம் என்பது மனித சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் பந்தம். அதுமட்டுமல்ல,
திருமணத்துக்குப் பொருத்தம் பார்ப்பது அவசியமா? அவசியமில்லையா?

திருமணம் என்பது மனித சமுதாயத்தால் ஏற்படுத்தப்பட்ட வாழ்வியல் பந்தம். அதுமட்டுமல்ல, வாழ்வியல் முறையை ஒரு வரையறைக்கு உட்பட்டு வாழும் சீரிய  ஒழுங்குமுறையும்கூட. இரு மனங்களின் சங்கமம், வாழ்வின் தொடக்கத்திலிருந்து, அதாவது பந்தம் ஏற்பட்ட நாளிலிருந்து, வாழ்நாள் இறுதிவரை நீடிக்கும் பந்தம், அடுத்த  தலைமுறைக்கான பிணைப்புச் சங்கிலி எனச் சொல்லிக் கொண்டே போகலாம். 

திருமணம் என்பது இரு மனங்கள் இணைவது மட்டுமல்லாமல், இரு வேறு குடும்பங்கள், சில சமயங்களில் இரு வேறு கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம் கொண்ட  குடும்பங்கள் இணையும் விழாவாகும். நாட்டுக்கு நாடு கலாசாரம் வேறுபட்டாலும், அன்பின் அடிப்படையில் இரு மனங்கள் இணைந்து, வாழ்விலும் தாழ்விலும் ஒன்று  சேர்ந்து இறுதிவரை வாழ்வது தான் திருமணம்.

மனிதனிடம் அன்பு, கருணை, பாசம் போன்ற நற்பண்புகளை வளர்க்கும் குடும்பம் என்ற பந்தத்தை உருவாக்கும் பண்பட்ட ஒரு நிகழ்வுதான் திருமணம். இரு மனங்களின்  கனவை நிறைவேற்றும் பொறுப்பைப் பெற்றோரும், குடும்பத்தின் பெரியவர்களும் மனமுவந்து மகிழ்ச்சியுடனும் ஈடுபாட்டுடனும் செய்கின்றனர். 

ஏனெனில், இது அவர்களது தலையாயக் கடமையும் கூட. மேலும், இறைவனின் ஆசியுடன் இது நடப்பதால், இது ஆயிரங்காலத்துப் பயிர் எனப் பெரியோர்களால்  போற்றப்படுகிறது. 

இல்லறம் என்ற நல்லறத்தை, இறைவன் மற்றும் பெரியோர் ஆசியுடன் தொடங்கும் தொடக்கப்புள்ளியாக, அற்புதமான தருணத்துடன் தொடங்குவதே திருமணம். ஒரு  மண்ணில் நடப்பட்டு வளர்ந்த ஓர் இளம் மரத்தை வேருடன் மற்றொரு இடத்தில் நடுவதுபோல, இயற்கையுடன் இணைந்து ஒரு செயலாகத் திருமணம் விளங்குகிறது. அப்படி ஒரு புதிய சூழலில், அவர்களின் வாழ்வை இனிமையாகத் தொடங்கவும், இறைவனின் ஆசியைப் பெறவும், நல்லதிர்வுகளைத் தரும் வேத மந்திரங்கள் முழங்க,  சாஸ்திரங்கள் கூறும் சடங்குகள் சம்பிரதாயத்துடன், திருமணம் என்பது அன்பும் ஆசியும் நிறைந்த ஒரு விழாவாகவே நம் சமூகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதையே  ஆண்டாள் பாசுரத்தில், ஆண்டாள் தன் மனத்தில் பெருமாளை இருத்தி, 

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத 

முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ் 

மைத்துனன் நம்பிம துசுதன் வந்துஎன்னைக் 

கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்

என்று பாடுவதன் மூலம், திருமணம் என்ற விழாவை, தான் விரும்பிய கனவையும் அழகான பாடலில் நமக்கு உணர்த்துகிறார். 

இனிய மகிழ்வான மணவாழ்க்கை அமையப்பெற்றவர்கள் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். இது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கியல் வாழ்க்கை முறை. இந்த  அங்கீகாரமே, அனைத்து உரிமைகளையும் சமூகத்தில் பெற்றுத்தர ஓர் அடித்தளமாக அமைகிறது. 

ஏழேழு ஜென்மத்துக்கும் தொடரும் பந்தமாக அறியப்பட்ட இந்த உறவு முறை, இந்த ஒரு ஜென்மத்திலேயே வெகு விரைவில் முடிவுக்கு வந்துவிடுகிறது. அது பெற்றோர்  பார்த்து நிச்சயித்து நடத்திய திருமணமாக இருந்தாலும் சரி, காதல் திருமணமாக இருந்தாலும் சரி. 

காலம், காலமாகச் சொல்லப்படும் அர்த்தங்களை ஆராயாமல், வெறும் சடங்குகளாகவும், சம்பிரதாயங்களை நிறைவேற்றும் விழாவாகவும் நடத்தப்பட்டு, பண்பாடு பின்னுக்குத்  தள்ளப்பட்டு இன்று வெற்றுப் பெயர் மட்டும் நிலைத்திருக்கிறது. இத்தகைய சூழல், திருமணம் செய்யும் தம்பதிகளை மட்டுமல்லாது, வருங்காலத் தலைமுறையின்  தரத்தையும் சேர்த்து பாதிக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய உண்மை ஆகும். 

திருமணத்துக்குப் பிறகு வாரிசு இல்லை என்பதில் தொடங்கி, பல இடர்களைச் சந்திக்கவேண்டி உள்ளது. 

திருமணப் பொருத்தத்தின் அவசியம்

திருமணத்துக்கு முன்பே, ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் திருமணப் (ஜாதகம்) பொருத்தம் பார்த்து, திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கையில் ஏற்படப்போகும்  பிரச்னைகளைக் கண்டறிந்து அதைச் சரிசெய்து திருமணம் செய்துகொண்டால், அது ஆயிரம் காலத்துப் பயிராக இருக்கும் என்பது நிச்சயம். 

அந்தவகையில் திருமணப் பொருத்தம் பார்ப்பதன் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்வது மிக மிக அவசியமாகிறது. திருமணம்  என்பது இரு தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை மட்டுமல்ல அவர்களின் தனிப்பட்ட ஒன்றிணைந்த அன்பு அவர்களுக்கு அமையவிருக்கும் குழந்தை பாக்கியம், இருவரின்  ஆயுட்காலம், பிறக்கவிருக்கும் குழந்தையின் ஆயுட்காலம் மற்றும் எதிர்காலம், தம்பதிகளின் பொருளாதார மேம்பாடு என ஏராளமான விஷயங்கள் கணிப்பதற்கு உள்ளன. 

சரியான நாள், நட்சத்திரம் பார்த்து திருமணம் நடத்துவது வரைதான் பெற்றோரின் பங்கு இருக்கிறது. அதன்பிறகு வரும் பிரச்னைகளை தம்பதிகள் எதிர்கொள்ளவேண்டியது இருக்கிறது. அதை அடிப்படையில் பார்த்தால், திருமணப் பொருத்தம் என்பது ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் அவசியமாகிறது.

- ராஜேஸ் கன்னா (அஸ்ட்ரோ லைஃப் சயின்ஸ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com