பழனி  சண்முக நதிக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு

பழனி  சண்முக நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பழனி  சண்முக நதிக்கு ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு


பழனி  சண்முக நதிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சாதுக்கள், ஆன்மிக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

பழனியின் முக்கிய நீராதரமாகவும், புண்ணிய நதியாகவும் கருதப்படுவது சண்முகநதி. இந்த நதியில் குளித்த பின்னரே முருகப்பெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இந்த நதியை அவ்வப்போது சமூக ஆர்வலர்கள் சுத்தப்படுத்தி வருகின்றனர்.

கடந்த முறை மேகாலயா முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் வந்தபோது சண்முகநதியை சுத்தம் செய்வது குறித்து ஆன்மிக ஆர்வலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன் பயனாக வெள்ளிக்கிழமை சண்முக நதிக்கரையில் ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 3 நாள்களாக தூய்மை செய்யப்பட்ட சண்முகநதியின் ஒரு பகுதியின் கரையோரம் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

காசி, ஹரித்துவார் உள்ளிட்ட வட மாநிலங்களில் நதிகளுக்கு நடைபெறும் பூஜைகள் போல இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹரித்துவாரை சேர்ந்த கருடானந்தா சுவாமிகள் பூஜையின் சிறப்பு பற்றி உரை நிகழ்த்தினார்.  

நதிகளை தாயாக பாவித்து நாம் பூஜை செய்தால் நதிகளும் நம்மை குழந்தையாக பாவித்து வற்றாமல் ஓடி இயற்கையை காத்து நன்மை செய்யும் என்றார்.

தொடர்ந்து சண்முகநதியில் பால், மஞ்சள், பன்னீர், தயிர் உள்ளிட்ட பொருள்கள் ஊற்றப்பட்டு பூஜைகள் தொடங்கின. போகர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள், மெய்த்தவம் அடிகள், ஸ்ரீலஸ்ரீ ஈஸ்வரப்பட்டா குட்டி சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான ஆதீனங்கள் பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து சண்முகநதிக்கு பல்வேறு முகங்களை உடைய விளக்குகளை கொண்டு தீபாராதனையும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. அப்போது சிவ வாத்தியம் இசைக்கப்பட்டு சண்முகநதி மாதாவுக்கு ஜே' என முழக்கம் எழுப்பப்பட்டது. பூஜை நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 

இந்த வழிபாட்டை வரும் நாள்களில் மாதம் ஒருமுறை நடத்தவும், ஆடி 18 அன்று பூஜையை விமர்சையாக செய்வது எனவும் ஆன்மிக பக்தர்கள் முடிவு செய்தனர். 

நிகழ்ச்சியில் பழனி மாரியம்மன் கோயில் காணியாளர் நரேந்திரன், காணியாளர் வழக்குரைஞர் ராஜா கந்தசாமி,  சுப்புராஜ், தங்கராஜ், சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com