மகர ராசியினர் வழிபட வேண்டிய திருத்தலம்!

இடைமருதூரின் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர்
மகர ராசியினர் வழிபட வேண்டிய திருத்தலம்!


இடைமருதூரின் தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும்  நடுவிலே மகாலிங்க பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது. 

அந்தி மயங்கிய நேரம் காட்டில் இருள் சூழ ஆரம்பித்தது. வேட்டையாடச் சென்ற வரகுண பாண்டியன் குதிரை மீதேறி வேகமாக அரண்மனை திரும்பி வந்து கொண்டு  இருக்கும் போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு அந்தணன் பாண்டியனின் குதிரையின் காலில் மிதி பட்டு இறந்து விடுகிறான் இச்சம்பவம் அவனறியாமல்  நடந்திருந்தாலும் ஒரு அந்தணனைக் கொன்றதால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது. அந்தனின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது. சிறந்த  சிவபக்தனான வரகுண பாண்டியன் மதுரை சோமசுந்தரரை வணங்கி இதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். 

மதுரை சோமசுந்தரக் கடவுளும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும்படி கூறினார். எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள  திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு சோழ மன்னன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்து வந்திருக்கும் செய்தி  கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன் சோழ மன்னனைப் போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.

அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த  பிரமஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும்  அவனைப் பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியா நீ வந்த வழி செல்லாது  மேற்கு வாயில் வழியாக  வெளியேறிச் செல் என ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந்தார்.

வரகுணபாண்டிய மன்னன் மதுரை சொக்கநாதரை நினைத்து ஆத்மார்த்தமாக மகாலிங்க சுவாமியை வழிபட்டதால் மீனாட்சி சமேதராக சொக்கநாதர் இங்கே காட்சியளித்தார். அதனால், மன்னனும் மனம் மகிழ்ந்து இந்த வடக்கு கோபுர வாயில் அருகில் சொக்கநாதர் கோயிலைக் கட்டினார்.

சொக்கநாதர் ஆலயத்திற்குத் தனிப்பெருமை ஒன்றுண்டு. மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில் இப்பெருமானுக்கு சிறப்பாக அபிஷேகம் செய்து,  மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணம் செய்வதால் மழை பொழியும் எனக் கூறுகின்றனர்.

உத்திராட நட்சத்திரம் இந்த சொக்கநாதரை வழிபட்டு இறைவன் அருள் பெற்றதால் இந்த கோயில் இறைவனை உத்திராட நட்சத்தினர் மற்றும் மகர ராசியினர்  வழிபட்டு அருள் பெறலாம்.

முகப்பு வாயில் மட்டும் மீனாட்சி கல்யாண கோல சுதைகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இறைவன் சொக்கநாதர் கிழக்கு நோக்கியவர் அம்பிகை மீனாட்சி தெற்கு  நோக்கியவர். இறைவனின் கருவறையின் வடமேற்கில் அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்க்கை கிழக்கு நோக்கியவாறு உள்ளார். இவரை ராகு காலத்தில் வழிபட்டு செல்வம் வீரம்  இரண்டையும் பெறலாம். 

- கடம்பூர் விஜயன் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com