மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் திருத்தல மகிமை

மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவ திருக்கோயிலாக, வரலாற்றுச் சிறப்புடன் திகழ்வது ஏரிகாத்த ராமர் கோயிலாகும்.


மதுராந்தகம் நகரின் முக்கிய வைணவ திருக்கோயிலாக, வரலாற்றுச் சிறப்புடன் திகழ்வது ஏரிகாத்த ராமர் கோயிலாகும். தமிழக இந்து சமய அறநிலையத் துறை இக்கோயிலை நிர்வகித்து வருகிறது. ஆனி மாத பிரம்மோற்சவத்தின் 8-ஆம் நாளான புதன்கிழமை, பெரிய தேரோட்டம் நடைபெற உள்ளது.
நகரின் சிறப்பு அம்சங்கள்: காஞ்சிபுரம் மாவட்டத்தின் முதல்நிலை நகராட்சி மதுராந்தகம். வகுளரண்யம்,  ஸ்ரீரமாரங்கம், வைகுண்ட வர்த்தனம், ஏரிகாத்த ராமனூர் உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் மதுராந்தகத்துக்கு உண்டு. சோழர் கால வரலாற்றில் உத்தம சோழன் என்கிற மதுராந்தகச் சோழ மன்னரால் வேத விற்பன்னர்களுக்கு மானியம் வழங்கப்பட்ட இடமாகவும், சுகர், விபாகண்டர் போன்ற முனிவர்கள் தவம் புரிந்த புனித இடமாகவும் இப்பகுதி விளங்கியது. 
கோயிலின் மகிமைகள்: இலங்கையில் ராவண சம்ஹாரத்துக்குப் பின்னர் ராமபிரான், சீதா தேவியுடன் அயோத்திக்கு செல்லும் வழியில் மதுராந்தகத்தில் இறங்கியதாக புராணங்கள் மூலம் தெரிய வருகிறது. விபாகண்ட மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று சீதாதேவி சமேதராக ராமபிரான் கல்யாணக் கோலத்தில் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருவதாக ஐதீகம். 
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் (1795-98) அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கர்னல் பிளேஸ் துரை பொறுப்பில் இருந்தார். அப்போது சில ஆண்டுகளாக மதுராந்தகம் பகுதியில் பெய்து வந்த பலத்த மழையால் வெள்ளநீர் அதிகமாகி எந்த நேரத்திலும் மதுராந்தகம் ஏரி உடையும் என்ற நிலை இருந்து வந்தது. இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.
அதற்கு இந்தக் கோயிலில் உள்ள தெய்வம் சக்தி படைத்ததாக இருந்தால்  ஏரியை உடையாமல் காக்கட்டும். உடனே அங்குள்ள ஜனகவல்லித் தாயார் சந்நிதியை சீரமைத்து கோயிலின் மற்ற பகுதிகளை புனரமைத்துத் தருகிறேன் என அவர் பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தார். எந்த நேரமும் ஏரிக்கரை உடைய நேரிடும் என்ற பதற்றமான நிலை. 
அந்த நேரத்தில் ஒரு நாள் இரவு நேரத்தில் ஏரியின் நிலையைப் பார்வையிட ஆட்சியர் பிளேஸ்துரை வந்தார். அப்போது ராமபிரான், தம்பி லட்சுமணனுடன் அலைமோதும் வெள்ளநீரால் ஏரிக்கரை உடையாமல் வில் அம்பு ஏந்தி காத்து நின்றதைக் கண்டார். ராமபிரான் இந்த ஏரி உடையாமல் ஊரைக்காத்ததால் இக்கோயிலுக்கு ஆட்சியர் நேரில் வந்து ஏற்கெனவே வாக்களித்தபடி ஜனகவல்லித் தாயார் சந்நிதியை புதுப்பித்துக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது.  ஏரிக்கரை உடையாமல் காத்ததால், ஏரி காத்த ராமர் என்ற சிறப்புப் பெயருடன் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.   
மதுராந்தகமும் ராமாநுஜரும்
வைணவ ஆச்சாரியரான ராமாநுஜருக்கு இந்த தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில்தான் அவரது குரு பெரிய நம்பிகள் மூலமாக மந்திர உபதேசம் செய்யப்பட்டது. இந்த மந்திர உபதேசத்தில் திவ்யம் என்ற மந்திரம் உபதேசிக்கப்பட்டதால் திவ்யம் விளைந்த திருப்பதி என்றும் மதுராந்தகம் அழைக்கப்படுகிறது.
ஆண்டுதோறும் ஆவணி மாத, சுக்ல பஞ்சமி தினத்தன்று ராமாநுஜர் மந்திர உபதேசம் பெற்ற திருவிழா மதுராந்தகத்தில் கொண்டாடப்படுகிறது. அச்சமயம் உற்சவ மூர்த்திகளாக பெரிய நம்பியும், ராமாநுஜரும் ஏரியின் படித்துறைக்கு எழுந்தருள்வர். அங்கு அவர்களுக்கு சிறப்புத் திருமஞ்சனத்தை கோயில் அர்ச்சகர்கள் நடத்துவர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ராமானுஜர் வெள்ளுடை தரித்து கிருஹஸ்தராய் காட்சியளித்தது மதுராந்தகத்தில்தான் என்று கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com