முருகனைப் பற்றி முத்தான 30 தகவல்கள்..!

சக்திதரர் 2. கந்த சுவாமி 3. தேவசேனாதிபதி 4. சுப்பிரமணியர் 5. கஜவாகனர் 6. சரவணபவர்
முருகனைப் பற்றி முத்தான 30 தகவல்கள்..!

 
1. முருகனின் திருவுருவங்கள்: 1, சக்திதரர் 2. கந்த சுவாமி 3. தேவசேனாதிபதி 4. சுப்பிரமணியர் 5. கஜவாகனர் 6. சரவணபவர் 7. கார்த்திகேயர் 8. குமாரசுவாமி 9. சண்முகர் 10. தாரகாரி 11. சேனாபதி 12.  பிரமசாத்தர் 13. வள்ளி கல்யாண சுந்தரர் 14. பாலசுவாமி 15. கிரவுஞ்ச பேதனர் 16. சிகிவாகனர் எனப்படும். 

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாச்சர்யம்.

3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா  மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

1. சூரபத்மனை வதம் செய்தது - திருச்செந்தூர்

2. தாரகாசுரனை வதம் செய்தது - திருப்பரங்குன்றம்

3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம்  ஏற்பட்டது.

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை  உண்டாகும்.

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு  கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். வெண்ணெய்  மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

9. முருகன் இறைப்பணி செல்வர்கள்: 1. அகத்தியர் 2. அருணகிரி நாதர் 3. ஒளவையார் 4. பாம்பன் சுவாமிகள் 5. அப்பர் அடிகளார் 6. நக்கீரர் 7. முசுகுந்தர் 8. சிகண்டி முனிவர் 9. குணசீலர் 10. முருகம்மையார் 11. திருமுருககிருபானந்த வாரியார் 12. வள்ளிமலைச் சுவாமிகள் ஆகியோர் ஆவார்கள்.
 
10. திருப்பரங்குன்றத்தில் பிரம்ம கூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில்  குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின்  தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று  அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் “கார்த்திகேயன்” என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும்  பெயர் கொண்டான்.

15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சிபுரத்தில் உள்ளது.

16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக  வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன்,  காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான “திருப்புகழ்” நூலினை இயற்றியவர் அருணகிரிநாதர்.

18. “முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்” என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
 
21. முருகனைக் குறித்துக் “குமார சம்பவம்” என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி காளிதாசர்.

22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.

24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்கரபாணி, மாலி முதலியோர்  இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

28. தமிழகத்தில் முருகனுக்குக் குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில்,  மாமல்லபுரம்.

29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com