Enable Javscript for better performance
திருநங்கையாகப் பிறப்பதற்கு ஜோதிட ரீதியாக சொல்லப்படும் காரணம்!- Dinamani

சுடச்சுட

  

  திருநங்கையாகப் பிறப்பதற்கு ஜோதிட ரீதியாக சொல்லப்படும் காரணம்!

  By - ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்  |   Published on : 24th June 2019 04:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  astrology-

   

  மனித பிறப்பில் ஆண், பெண் என இரண்டு பிறப்பு உண்டு. ஆணும் பெண்ணும் அல்லாத இரண்டும் கலந்த குணாதிசயம், செயல்பாடுகளையுடைய பிறப்பு எனக் கூறப்படுவது திருநங்கை பிறப்பாகும். இவர்களின் செயல்பாடுகள் செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தும் பெண்மையின் சுபாவத்தை, பொதுவாக ஒத்துப் போகும். 

  இத்தகைய பிறப்புகளுக்கு ஜோதிட ரீதியான கிரக அமைப்புகளும் உள்ளன. சூரியனும் சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டால் அந்த ஜாதகன் அலியாகப் பிறப்பான். சனியும் புதனும் இணைந்து இருந்தாலும் அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டாலும் அவன் அலியின் குணாதிசயங்களை ஒத்து இருப்பான். செவ்வாய் சூரியனுடன் சேர்ந்து ரிஷபம், துலாம் போன்ற ராசிகளின் தொடர்பு ஏற்பட்டாலும் அல்லது சந்திரனின் அம்சம் பெற்றாலும் அந்த ஜாதகம் அலியாவான். 

  மேலும், புதனுடைய வீடுகளாகிய, மிதுனம், கன்னி இந்த இரு வீடுகளில் ஒன்று லக்னமாகி; புதன் லக்னத்துக்கு ஆறாம் வீட்டில் இருக்க, அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதி லக்கினத்தில் இருக்க அந்த ஜாதகன் ஆண்மைக்குறைவு உடையவனாக அல்லது அலியாக இருப்பான் இதை அல்லாது ஆன்மீக சான்றோர்களும், ரிஷிகளும் பிறக்கும் வாரிசுகள் அலியாகப் பிறப்பதற்கு ஒரு சில விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். 

  தாம்பத்திய உறவில் ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இணையும் வேளையில் ஆணை விடப் பெண் அதிக வலிமையுடையவளாக இருந்தால் அவளுக்கு பிறக்கும் குழந்தை பெண் குழந்தையாகவும், பெண்ணைவிட ஆண்  வலிமையுடையவனாக இருந்தால் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தையாகவும் ஆண் பெண் இருவருமே சம வலிமையுடையவர்களாக இருந்தால் அந்த சமயத்தில் உருவாகும் கரு, அலி தன்மை உடையதாகப் பிறக்கும் என்று சொல்லி உள்ளனர்.

  சூரியன், செவ்வாய், குரு இந்த மூன்றும் ஆண் கிரஹங்களாகும். சந்திரன், சுக்கிரன் இவை பெண் கிரகங்களாகும். புதன் மற்றும் சனி இவை இரண்டும் அலி கிரகங்கள் என ஜோதிடத்தில் குறிப்பிடப்படும். சூரியன் மிகவும் வெப்பமான கோள், அதன் அருகில் இருக்கும் கிரகம் அதன் சுய தன்மையை இழந்துவிடும். அப்படி இழக்கும் நிலையைத் தான் ஜோதிடத்தில் அஸ்தங்கம் என்கிறோம். அதுவே அலி கிரகங்களான சனி மற்றும் புதனுடன் - சூரியன் சேர்ந்து எந்த வீட்டிலிருந்தாலும் அவர்கள் நியூட்டர் ஜெண்டர் (NEUTER GENDER) எனும், ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத திருநங்கைகளாக, அப்படிப்பட்ட ஜாதகர் இருப்பர். இது ஜோதிட ஆசான் கல்யாண வர்மரின் கூற்று.

  வரன் ஜாதகத்திலும் 5ம் இடத்தில் அலி கிரகம். பெண்ணின் ஜாதகத்திலும் 5க்கு உரிய கிரகம் வலுவிழந்து அலி கிரகத்துடன் சேர்ந்து காணப்ப‌ட்டா‌ல் அவ‌ர்களு‌க்கு குழந்தை பிறக்காது. அப்படி குழந்தை பிறந்தால் அ‌க்குழ‌ந்தை அலித்தன்மை உடையதாக இருக்கும். விந்தணுக்கள் குழந்தை பாக்கியத்தை அளிக்கும். பொதுவாக விந்தணுக்கள் வெள்ளை நிறம். ஆனால் விந்தணுக்கள் நிறம் மாறுபடும். பெரிய ‌நிற மாற்றமல்ல மெல்லிய மாற்றம்தான். நீர்த்த தன்மை உள்ள விந்தணுக்களும் உள்ளன. அவை அரவாணிப் பிள்ளைகளைப் பெற்றுத்தரும்.

  பொருத்தங்கள் பார்க்கும்போது சமூக அந்தஸ்து, ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தாம்பத்திய வாழ்க்கை, குழந்தை பாக்கியம், அன்யோன்யம், பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து திருமணம் நிச்சயிக்க வேண்டும். ச‌ரியான முறை‌யி‌ல் ஜாதக‌ம் பா‌ர்‌த்து ‌திருமண‌ம் செ‌ய்தா‌ல் அ‌லி / அரவா‌ணிக‌ளி‌ன் ‌/ திருநங்கைகளின் பிற‌ப்பை‌த் தவிர்க்க முடியும். இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். இதில் பிறந்த குழந்தைகளின் தவறு ஏதும் இல்லை என்று. அலி கிரகங்களின் வலிமை அதிகரிக்கும்போது தான் ஹோமோசெக்ஸ் அதிகரிக்கும். மாற்று இனத்தாரை திருப்திப்படுத்த முடியாது என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதனால் ஓரினச் சேர்க்கையின் மீது ஆர்வம் போகும்.

  அதுபோன்ற ஜாதகங்களும் நிறைய இருக்கின்றன. ஒருவரைப் பார்த்தால் ஆண்மகனுக்கான அனைத்து அம்சங்களும் இருக்கும். ஆனால் அவர் தாம்பத்தியத்தில் பலவீனமாக இருப்பார். அல்லது அவருக்கு அலி குழந்தை பிறக்கும். அது அவரது ஜாதகத்தின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

  இன்று பல திருமணங்கள் விவாகரத்துக்குப் போக காரணம் ஆண்மையின்மைதான் காரணமாக உள்ளது. இதை வெளியில் சொல்ல முடியாத காரணத்தால் வெவ்வேறு காரணங்களைக் காட்டி பிரிந்து வாழ்கிறார்கள். இதனால் மனரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களும் சரியான இல்லற வாழ்வை மேற்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அதனை மறைத்தும், குடும்ப வம்ச வழிப்படி இளமையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நரம்பு கோளாறு உள்ளவர்களுக்கும், மூலிகை மருந்துகளை அதிகம் சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கும் ஆண்மை கோளாறு வர வாய்ப்புகள் அதிகம். இதைக் கொச்சையாகச் சொன்னால் தாம்பத்தியத்தின் போது சோர்ந்துபோய்விடுதல், விறைப்புத்தன்மை இல்லாதிருத்தல், துரிதஸ்கலிதம் அதாவது விந்து வெகு சீக்கிரத்தில் வெளியேறுதல், சில ஆண்களின் விந்தில் உயிரணு இல்லாதிருத்தல் என பல்வேறு காரணங்கள் உள்ளது. இவையெல்லாம் உடலுறவுக்குத் தடையாகவும், திருப்தியில்லா தாம்பத்திய வாழ்விற்கு அடித்தளமாகவும் இல்லாமல் போவதால் பாதிப்பு வந்துவிடும். இதனை, இன்றைய மருத்துவ ஆராய்ச்சியால் சிறந்த மருந்துகளை தந்து அவர்களின் தன்மையை மதிப்பூட்டும் வழிவகைகளைச் செய்ய முடியும்.

  இதை ஜாதகரீதியாக கண்டுபிடித்துவிடலாம். இதற்குத்தான் பொருத்தம் பார்க்கும்போது, அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆண் ஜாதகத்தில் புதன்-சனி-கேது போன்ற அலி கிரகங்களின் ஆதிக்கம் எப்படி உள்ளதென்பதை கவனிக்க வேண்டும். லக்கின-ராசியின் மூன்றாமிடம், எட்டாமிடம், ஐந்தாமிடம், ஏழாமிடம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அதேபோல் யோனிப்பொருத்தம் பார்க்கும்போது இருவருக்கும் பகை மிருகமாக இல்லாமல் பார்ப்பது அவசியம்.

  ஆண்-பெண் ஜாதகத்தில் காலபுருஷ ராசியான மேஷத்திற்கு எட்டாமிடம் விருச்சிகம், இதில் சனி-ராகு,செவ்வாய்-சனி,போன்ற பாவ கிரகங்கள் பிறப்பு ஜாதகத்தில் இருக்கும்போது, ஆண்-பெண் குறிகளில் நோய் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். நன்றாக பழகும் சில பெண்கள் உடலுறவில் மிக எரிச்சலுற்று வெறுப்பார்கள். இதற்கு காரணம் நோயின் வலி வேதனைதான் பிரச்னையாக இருக்கும். இந்த மாதிரி அந்தரங்க விஷயங்கள் வெளியில் சொல்லி நிவாரணம் தேடக்கூடியவையல்ல என்பதால் திருமணத்திற்குமுன்பு விழிப்புணர்வு தேவை. இதுதான் விதியென்றால் ஒன்றும் செய்யமுடியாதுதான்.

  ஆண் ஒருவரின் விந்தணுக்களின் பலத்தை கேது, செவ்வாய், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களையும் கொண்டு நிர்ணயிக்கின்றனர். பெண்ணின் அண்டத்தில் உள்ள சுரோணிதத்தின் வல்லமையை புதனும் ராகுவும் வெளிப்படுத்தும். பூர்வ புண்ணிய தனாதிபதியான ஐந்துக்கு உரியோன், பாவியுடன் கூடி பலவீனனாய் ஏழில் இருந்தால் அந்த ஜாதகர் மலடு ஆவார்.

  ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் ஆறில் நீச்சம் அடைந்தால் அந்த ஜாதகர் மலடு ஆவார். ஐந்தாம் வீட்டுக்கு உரியவர் நீச்சனாய் 6, 8, 12 வீடுகளில் மறைந்தால் அவர் மனைவி மலட்டுத் தன்மையைப் பெறுவார். அதேபோல், ஐந்தாம் வீட்டில் புதனும் கேதுவும் இருந்தால் அவர் மனைவி மலடி ஆவார். இது எந்த லக்னத்திற்கும் பொருந்தும். ஆனால் இவர்களை குருவோ சுக்கிர பகவானோ பார்த்தாலோ, புதன், கேது நின்ற வீட்டுக்குரியவர் பலம் அடைந்து காணப்பட்டாலோ அவர் மனைவியின் மலட்டுத்தன்மை விலகும். ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயுடன் சுக்கிரன் காணப்பட்டாலோ, சுக்கிரனை செவ்வாய் பார்த்தாலோ விந்தானது விரைவாய் வெளிப்பட்டுவிடும். சுக்கிரன் மீது, சனி, சந்திரன் பார்வை இருந்தால் சற்றே தாமதத்துடன் விந்தணுக்கள் வெளிப்படும். சுக்கிரன் தன் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலோ, செவ்வாயின் நட்சத்திரத்தில் இருந்தாலோ, வெளிப்படும் வீரியத்தின் அளவு மிகவும் அதிகமாய் இருக்கும். 

  மேலும் சுக்கிரன் ஒருவரின் ஜாதகத்தில் ரிஷபம், துலாம், மீனம் ஆகியவற்றில் இடம் பெற்றிருந்தால் அவரின் விந்து வெண்மையானதாயும், தூய்மையானதாயும் இருக்கும். அதே சுக்கிர பகவான் மிதுனம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய வீடுகளில் காணப்பட்டால் விந்து சற்றே நிறம் மங்கிக் காணப்படும். அதே சுக்கிர பகவான் கடகம், சிம்மம், கன்னி, மேஷம், தனுசு ஆகியவற்றில் இருந்தால் வெளிப்படும் வீரியம் துர்நாற்றத்தை உண்டு பண்ணக்கூடியதாயும் இருண்ட நிறம் உடையதாயும் காணப்படும்.

  அலியாக மாறும் ஜாதகர் யார்? உலகத்தில் அலி என்று யாரும் கடவுளின் படைப்பில் கிடையாது. ஆனால், நவக்கிரகங்களுள் புதன் பகவானும், சனி பகவானும் அலிக் கிரகங்களாய் விளங்குகின்றனர். அவற்றுள் புத பகவான் பெண் தன்மை அதிகம் கொண்ட பெண் அலியாகவும், சனி பகவான் ஆண் தன்மை அதிகம் கொண்ட ஆண் அலியாகவும் விளங்குகின்றனர்.
   
  சந்திரனும் சூரியனும் ஒருவருக்கொருவர் பார்த்தாலும் அலியாவார். ஒருவரின் லக்னம் ஒற்றை ராசியாகிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பமாய் இருந்து, செவ்வாய் பகவான் இரட்டை ராசியாகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் இருந்து லக்னத்தைப் பார்த்தால் அந்த ஜாதகர் அலியாவார். மேலும், சந்திரன் இரட்டை ராசிகள் ஆகிய ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவற்றில் இடம்பெற்று, புதன் ஒற்றை ராசியாகிய மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவற்றில் இருக்க, அவர்களை செவ்வாய் பார்த்தால் அலித்தன்மை ஏற்படும்.

  மேலே கூறியவை யாவும் ஜோதிட குறிப்புகளே. இவற்றைக் கண்டு அச்சப்படுவதைவிட அதற்கான முழுமையான தீர்வு காண்பது மட்டுமே சிறந்த வழியாகும். சிறந்த மருத்துவரின் ஆலோசனைப் பெறுவதும், வாழ்வு நெறிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றுவது மட்டும் தான் இவ்வகை பிறப்புகளைத் தவிர்த்து திடமான நோயற்ற நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்து வீட்டையும், நாட்டையும் ஏன் இந்த பிரபஞ்சத்தையும் பேணி காத்திட முடியும். இன்றைய கால கட்டத்தில் பெரிய அளவு படித்து போலீஸ் அதிகாரிகளாக, பல நிர்வாக அதிகாரிகளாகவும் அவர்கள் திகழ்ந்தாலும் அவர்களை பெற்றோர் செய்த ஒரு சில தவறுதலுக்கு இவர்கள் என்ன செய்வார்கள். 

  சாயியைப் பணிக எல்லா நலமும் பெறுக...

  - ஜோதிட ரத்னா தையூர்.சி.வே.லோகநாதன்
  தொடர்புக்கு: 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai