ஜாதகருக்கு தர்ம கர்மாதிபதி யோகம் எப்போது உண்டாகும்?

முதலில் யோகம் என்பது என்னவென்று கேட்டால் பலரும் அதிர்ஷடம் என்று கூறுவார்கள்.
ஜாதகருக்கு தர்ம கர்மாதிபதி யோகம் எப்போது உண்டாகும்?

முதலில் யோகம் என்பது என்னவென்று கேட்டால் பலரும் அதிர்ஷடம் என்று கூறுவார்கள். உண்மையில் யோகம் என்கிற சொல்லுக்கு ஜோதிட சித்தாந்தப்படி, "சேர்க்கை" என்பதே பொருள். அந்த சேர்க்கையின் மூலம் அதிர்ஷடம் உண்டாகலாம். துரதிஷ்டமும் உண்டாகலாம்.

ஒரு வீட்டின் அதிபதி நல்ல இடத்தில் அமர்ந்து அந்த இடம் அந்தக் கிரகத்துக்கு ஆட்சி, (சொந்த வீடு) உச்சவீடாகி, அஸ்தங்கம் ஏற்படாமல் இருக்க (அஸ்தங்கம் என்றால் சூரிய பகவானுக்கு அருகில் கிரகங்கள் சஞ்சரித்தல்) அந்த குறிப்பிட்ட வீட்டில் சுபக்கிரகம் இருக்க அல்லது சுபக்கிரகத்தால் அந்த இடம் பார்க்கப்பட, இப்படி நல்ல நிலைமைகள் ஒன்று சேருமானால் நற்பலன்களைத் தருகின்ற யோகம் உண்டாகும்.

இவ்வகையில் சுப பலன்கள் தரும் யோகங்கள் என்று அந்தக் கிரகம் அந்த வீட்டில் அமர்ந்திருந்தால் உண்டாவதை முதலில் குறிப்பிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் பார்க்கும் பொழுது ஒன்பதாம் வீட்டுக்கு பாக்கிய யோகம் என்று பெயரிட்டுள்ளார்கள். அதனால் ஒன்பதாம் வீட்டை பாக்கிய ஸ்தானம் அல்லது தர்மத்தின் வீடு என்றும் அழைப்பார்கள்.

இந்த பாக்கிய யோகத்தால் எல்லாவித நற்பாக்கியங்களும் உண்டாகும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார், மதிப்புடையவராவார், செல்வம் சேர்ப்பார், வாழ்க்கையில் உன்னதமான ஸ்தானம் அமையப் பெறுவார், கடவுள் பக்தி, மனிதாபிமானம் அனைத்தும் நிறையப் பெற்றிருப்பார்.

பத்தாம் வீட்டிற்கு கியாதியோகம் என்று பெயரிட்டுள்ளார்கள். கியாதி என்றால் புகழ் என்று பொருள். செல்வம், செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்நிலையை அடைதல், நாடாளும் தகுதியும், நிர்வாகம் செய்யும் ஆற்றலும் ஏற்படும். புனிதப் பணிகளில் ஈடுபடுவார். நல்ல கல்வி அறிவும், திறனும் அடைவார்.

தர்ம ஸ்தானமான ஒன்பதாம் வீடும், பத்தாம் வீடான கர்ம ஸ்தானம் எனும் தொழில் ஸ்தானமும் அனைவரின் ஜாதகத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது. பொதுவாக ஒன்பதாமதிபதியும் பத்தாமதிபதியும் கூடியிருந்தால் தர்ம கர்மாதிபதியோகம் உண்டாகும். இது ஒன்பதாமிடத்திலேயோ அல்லது பத்தாமிடத்திலேயோ ஏற்பட்டால் மிகவும் விசேஷமாகும். மற்ற இடங்களில் ஏற்பட்டாலும் நன்மையே என்றாலும் மறைவு ஸ்தானங்களில் ஏற்பட்டால் பலகீனமாகும் என்பதை உணரவேண்டும்.

தர்மாதிபதி ஒன்பதாம் வீட்டிலும், கர்மாதிபதி பத்தாம் வீட்டிலும் அமர்ந்திருந்தாலும், அவர்கள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது. இதற்கும் ஒருபடி மேலே போய் பார்த்தால் சந்திர ராசிக்கு, ஒன்பது, பத்தாம் அதிபதிகள் இணைவு பெற்றிருந்தாலும் அதையும் இந்த வரிசையில் கொண்டு சேர்த்து ஜாதகம் பார்க்க வேண்டும்.

கடைசியாக ஒன்பதாமதிபதி பத்தாமதிபதியின் சாரத்திலும் (நட்சத்திரத்திலும்) பத்தாமதிபதி ஒன்பதாமதிபதியின் சாரத்திலும் (நட்சத்திரத்திலும்) இருந்தாலும் சார பரிவர்த்தனையின் அடிப்படையில் தர்மகர்மாதிபதி யோகம் உண்டாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com