இன்னும் ஒரே நாள்! அத்தி வரதரைக் காண வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!!

அத்தி வரதர்னா சும்மாதானா! பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்தது இந்து அறநிலையத்துறை!!
இன்னும் ஒரே நாள்! அத்தி வரதரைக் காண வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு!!


40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சிதரும் அத்தி வரதரைக் காண வரும் பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. 

தமிழகத்தின் தனிப்பெரும் சிறப்பு கொண்ட ஆன்மிகத் தலமான காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அத்தி வரதரைத் தரிசிப்பதற்கான  வாய்ப்பு ஆன்மிக அன்பர்களுக்கு இந்தாண்டு கிடைத்துள்ளது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ அத்தி வரதர் சிலை கடந்த 28-ம் தேதி அதிகாலை அனந்த சரஸ் திருக்குளத்திலிருந்து பக்தர்களின் கோஷங்கள் முழங்க ஆரவாரத்துடன் வெளியே எடுக்கப்பட்டது. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் பெருவிழா ஜூலை 1-ம் தேதியிலிருந்து ஆகஸ்ட்  17-ம் தேதி வரை மொத்த 48 நாள்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. 

இந்நிலையில், அத்திவரதரை காண வரும் பக்தர்களுக்கு சில ஆடை கட்டுப்பாடு விதித்துள்ளது. சேவார்த்திகள் திருக்கோயிலுக்கு வரும்போது ஆண்கள் பாரம்பரிய  உடைகளான வேட்டி, சட்டை/குர்தா, பைஜாமா அணிந்து வர வேண்டும். பெண்கள் சேலை, தாவணி/சுடிதார் (துப்பட்டாவுடன்) வர வேண்டும். திருக்கோயில் மரபுகளைக்  காக்குமாறு பக்தர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது. 

சேவார்த்திகள் திருக்கோயிலுக்குள் எந்தவிதமான உடைமைகளையோ, மின்னணு சாதனங்களையோ கொண்டுவரக்கூடாது. 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளை உரிய  ஆவணங்களுடன் கட்டணம் ஏதுவுமின்றி உடன் அழைத்துவரலாம். மேலும், அத்தி வரதரைச் சந்திக்க வரும் பக்தர்கள் ஆதார் அட்டை கையில் வைத்திருக்க வேண்டும். 

ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் ஒருமுறை, தவறினால் இருமுறைதான் இந்த பெருமாளைத் தரிசிக்க முடியும். இதற்கு முன் கடந்த 1979-ல் அத்தி வரதரைத்  தரிசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றது. 

மிகவும் தொன்மையான இந்த அத்தி வரதர் உற்சவத்தில், திருவிழா வழிபாட்டுடன் சேர்த்து மொத்தம் 48 நாள்களுக்கு அத்தி வரதரைக் கண்குளிரத் தரிசனம் செய்யலாம். ஒன்றல்ல இரண்டல்ல 48 நாட்கள்... எனவே, பக்தர்கள் இந்த நல்லவாய்ப்பை தவறவிடவேண்டாம். தவறவிட்டால் இன்னும் 40 ஆண்டுகள் காத்திருக்க நேரிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com