பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதியன்று
பெண்மையை போற்றும் மகளிர் தினம்: சுக்கிரன் கூறும் ஜோதிட ரகசியங்கள்!

அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதியன்று உலகெங்கும் உலக மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்  பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது. இதேபோல் நதிகள்,  மலைகள் என்று முக்கியமானவை அனைத்துக்கும் பெண்கள் பெயர்கள்தான் வைக்கப்படுகிறது. அந்த அளவுக்கு பெண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இன்றைய உலகில் பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவது மறுக்க முடியாத உண்மையாகும். ஆண்களை எட்டுவது சிரமம் என்ற நிலையிலிருந்து முன்னேறி  ஒவ்வொரு துறையிலும் பெண்கள் ஆண்களுக்கு கடுமையான போட்டியைத் தந்து வருகிறார்கள். பெண்கள் என்றாலே ஆசிரியர் அல்லது செவிலியர் வேலைக்குத் தான் என்ற  கூற்றெல்லாம் தற்போது மாறிவிட்டது. ஆகாய விமானம் ஓட்டுவது, ரயில் இன்ஜின்களை இயக்குவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, கணினித் துறையில்  புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவது என்று பெண்கள் முத்திரை பதிக்காத துறையே இல்லை.  

பெண்களைப் போற்றும் விதத்தில் உலகம் முழுவதும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை அனைத்து பெண்களும்   வண்ண வண்ண ஆடை அலங்காரங்களுடன் மகிழ்ச்சியுடன் வலம் வருவதைக் காணலாம். மேலும் ஒருவருக்கொருவர் வாழ்த்து செய்திகளையும் முகநூல், வாட்ஸஅப்,  டிவிட்டர் என பல வழிகளில் பரிமாரிகொள்கின்றனர். ஆண்களும் தங்கள் பிரியமானவர்களுக்கும், நண்பர்களுக்கும் வாழ்த்துக் கூறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக மகளிர் தினம் தோன்றிய விதம்

ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். சர்வதேச மகளிர் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.  ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை  வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காகப் பெண்களை  வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்விக்கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. 1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள்,  தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது.  ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிகுந்த வருத்தமடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்குச்  செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர், 1857-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி இதற்கான போராட்டத்தில்  ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு  பெண்கள் போராடத் தொடங்கினர். 1910ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள்  கலந்துகொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8-ம் தேதியை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை  நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு பிரச்னையினால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை. 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த  பெண்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினத்தைக் கொண்டாட வேண்டும்  என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921-ம் ஆண்டு முதல் மார்ச் 8-ம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 1975-ம் ஆண்டை சர்வதேச மகளிர்  ஆண்டாக ஐ.நா பிரகடனப்படுத்தியது. 

ஜோதிடமும் மகளிர் தினமும்

உலகத்தில் பெண்களை பிடிக்காதவர்கள் (மகான்கள் மற்றும் பரிசுத்தமான ஆன்மீகவாதிகள் நீங்கலாக) யாராவது இருக்கிறார்களா? கண்டிப்பாக இருக்க மாட்டார்கள். ஆமாம்!  பெண்களை பிடிக்காதவர்களும் இருக்கமாட்டார்கள். அழகில் மயங்காதவர்களும் இருக்கமாட்டார்கள். அப்படி யாராவது இருந்தால் அவர்கள் வாய்ப்பு கிடைக்காதவர்களாகவும்  இன்னும் பிறக்காதவர்களாகவும் தான் இருப்பார்கள். இன்று பல துறவிகள் கூட பெண்களின் கூட்டத்திற்கு இடையில்தான் இருக்கிறார்கள். அந்த அளவிற்குச் சுக்கிர  பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது.

சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்திருக்கும் வரை பெண்களை விரும்புவதும் மகளிர் தினம் கொண்டாடுவதும் காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கும்.  ஏனென்றால் மகளிருக்கும் கொண்டாட்டத்திற்கும் காரகர் நம்ம சுக்கிர பகவான் தாங்க! என்றாலும் பெண்மையைப் பொருத்தவரை சந்திர பகவானுக்கும் பங்கு உண்டுங்க!  அதனால் தான் அவர் சுக்கிரன் வீட்டில் உச்சம் ஆகிறார் என ஜோதிட நூல்கள் கூறுகிறது.

பெண்களுக்காக பெண்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் விழாவான மகளிர் தினத்தின் காரகர் சுக்கிர பகவானே என்கிறது பாரம்பரிய ஜோதிடம், ஆம்! வண்ணங்கள்,  மகிழ்ச்சி, உற்சாகம், விழா, கோலாகலம், குதுகலம், பெண்கள் காதல், காமம் இவை அனைத்திற்குக் காரகர் சுக்கிரனே!  

மேலும் குளிர்ச்சி, வெற்றி, பாராட்டு, ஆறுதல், அன்பு இவை அனைத்திற்கும் காரகர் சுக்கிர பகவானே தான் என்கிறது பாரம்பரிய ஜோதிடம் விழாக்கள், கொண்டாட்டங்கள், எழில், நறுமணம், வாழ்த்துக்கள் இவையனைத்திற்கும் காரகர் சுக்கிரன். காதல், காதலர்கள் இரண்டிற்குமே காரகர் சுக்கிரனேதாங்க! 

யாரெல்லாம் மகளிர் தினத்தை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்?

பெண்களில் இளம் பெண்களை சுக்கிரனோடும் மூத்த பெண்களை சந்திரனோடும் தொடர்புப்படுத்திக் கூறுகிறது பாரம்பரிய ஜோதிடம். எனவே மகளிர் தினத்தை விரும்பி  கொண்டாடுபவர்களின் ஜாதகங்களில் எல்லாம் சுக்கிர பகவானின் ஆதிக்கம் மற்றும் சந்திரன் - சுக்கிரன் சேர்க்கை பெற்றிருக்கும். கீழ்கண்ட அமைப்பினை  கொண்டவர்கள்தான் மகளிர் தின கொண்டாட்டங்களில் ஈடுபடும் அமைப்பைப் பெற்றிருப்பார்கள்.

1. லக்னம் ஜனரஞ்சக ராசிகள் மற்றும் சுக்கிரனின் வீடுகளான ரிஷபம் மற்றும் துலாமாக இருப்பது மற்றும் சந்திரனின் கடகமாக இருப்பது.

2. ஜாதகத்தில் சுக்கிரனும், சந்திரனும் சேர்க்கை, பார்வை, பரிவர்த்தனை என எந்தவிதத்திலேனும் தொடர்பு பெற்று நிற்பது.

3. சந்திரன் பரணி, பூரம், பூராடம் ஆகிய சுக்கிரனின் நக்‌ஷத்திரங்களில் நிற்பது.

4. லக்னத்திலேயே சுக்கிரன் ஆட்சி அல்லது உச்ச பலத்துடன் இருப்பது மற்றும் சந்திர பகவான் சுக்கிரனின் வீட்டில் உச்ச பலத்துடன் நிற்பது.

5. கால புருஷனுக்கு இரண்டு மற்றும் ஏழாம் வீட்டதிபதியான சுக்கிரன் மூன்று மற்றும் ஆறாம் அதிபதியான புதனுடன் பரிவர்த்தனை பெற்று நிற்பது.

6. ஜாதக ஆறாம் வீட்டு அதிபதியும் கால புருஷனுக்கு ஆறாம் வீட்டு அதிபதியும் சுப தொடர்பில் இருப்பது.

7. சுக்கிரன் ஆட்சி உச்சம், திக்பலம் மற்றும் மாளவியா யோகம் போன்ற சுபயோகங்களைப் பெற்று புதனுடன் சேர்க்கை பெற்று நிற்பது.

8. புதன் பஞ்ச மகா புருஷ யோகங்களில் பத்ர யோகம் பெற்று சுக்கிரனுடன் சேர்க்கை பெற்று நிற்பது.

9. சந்திரன், புதன், சுக்கிரன் மூவரும் கன்னியில் இனைந்து நின்று நீச பங்க ராஜயோகம் பெற்று நிற்பது.

10 சுக்கிரனும் சந்திரனும் பல வர்க சக்கரங்களில் வர்கோத்தமம் பெறுவது.

11. சுக்கிரன் 6/8/12 ஆகிய இடங்களில் மறையாமல் இருப்பது.

நமது சுதந்திர இந்தியாவின் ஜாதகத்திலும் லக்னம் சுக்கிரனின் ரிஷப ராசியாகி லக்னாதிபதி சந்திரனின் வீட்டில் சந்திரனோடும் புதனோடும் சேர்ந்து நிற்பது நமது நாட்டில்  பெண்களை போற்றும் அமைப்பைக் குறிப்பிடுகிறது. 

சிவன் தனது உடல் பாகத்தில் பாதியை அளித்து சிவனும்-சக்தியும் இணைந்து அர்த்தநாரீஸ்வரராக விளங்குவதும் காரைக்கால் அம்மையார், ஒளவையார், மற்றும் அன்னை  தெரசா போன்ற பல பெண்கள் சிறப்படைந்ததும் நமது நாட்டில்தான். பல நாடுகளில் பெண்களுக்கு இன்னமும் பிரச்னைகள் இருந்துவந்தாலும், நமது நாட்டில் பெண்களை  தாயாகவும், மகளாகவும், சகோதரியாகவும் இப்படி பல உறவு நிலைகளில் போற்றுவதும் பாரத மாதவை அன்னையாக வழிப்படுவதும் இதற்கு முன்னுதாரணங்களாகத்  திகழ்கின்றன என்றால் மிகையில்லை.

அதே நேரத்தில் இன்றைய சமூகத்தில் பல பெண்களுக்கு பிரச்னையே மற்றொரு பெண், தான் எனும் அவலத்தை அதிகமாகக் காண முடிகிறது. பெண்மையைக் குறிக்கும்  சுக்கிரனின் ஆட்சி வீடுகளான ரிஷபமும் துலாமும் ஒன்றுக்கொன்று சஷ்டாஷ்டகமாக இருப்பதனால்தானோ என்னவோ பல பெண்களின் அழிவிற்கு பெண்களே  காரணமாகிவிடுகின்றனர். அதிலும் தற்காலத்தில் சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த தொலைக்காட்சியில் வரும் தொடர் காட்சிகளால் தங்கள் வாழ்க்கையை தாங்களே  அழித்துக்கொள்வது வருத்தம் அளிப்பதாக உள்ளது. எனவே இந்த மகளிர் தின நாளில் ஒவ்வொரு பெண்ணும் மற்றொரு பெண்ணின் வாழ்வில் எந்தவிதத்திலும்  பிரச்னைகளை ஏற்படுத்த மாட்டோம் என உறுதி பூண வேண்டும். மேலும் ஆண் பெண் அனைவரும் அந்நிய கலாசாரத்திற்கு ஆட்பட்டு எந்த விதத்திலும் பெண்மைக்கு  கலங்கம் ஏற்படா வண்ணம் நடக்க உறுதிகொள்ளவேண்டும். அந்நிய கலாசார ஆதிக்கத்தினால் இன்று தளர்வுற்றிருக்கும் நமது பாரத மாதாவை மீண்டும் தலை நிமிர  செய்வோமாக!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com