சுடச்சுட

  

  தாயிற்கும் சேயிற்கும் உள்ள தொப்புள்கொடி பந்தத்தை உணர்த்தும் கபாலீஸ்வரர் கொடியேற்றம்!

  By DIN  |   Published on : 11th March 2019 05:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kodiyetram_5

   

  சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். அதிலும் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆரம்பித்துவிட்டால் மயிலாப்பூர் வாசிகளின் மகிழ்ச்சியைக் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் திருமயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று திங்கள்கிழமை (11/3/2019) காலை அறுபத்து மூவர் உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் எனப்படும் த்வஜாரோஹன நிகழ்ச்சி நடைபெற்றது. 

  ஒவ்வொரு மனிதனுக்கும் கொடியிலிருந்தே வாழ்க்கை ஆரம்பிக்கிறது. கோயிலில் திருவிழாவின் போது கொடியேற்றம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். ஆலயத்திலிருந்து நிறைந்த திருவருட்பயனை அடையவேண்டுமானால் அங்கு கொடிக்கம்பம் நாட்டி கொடியேற்றம் முதல் தீர்த்தம் வரை பகலும் இரவும் விழாக்கள் நடத்தி அந்த நாட்களில் சைவ மக்கள் விரதமிருந்து வழிபாடு செய்து ஸ்தம்ப பூசையைத் தரிசித்து இஷ்டசித்திகளைப் பெற முயல வேண்டும் என்கிறது சைவ சமய நூல்கள்.

  கொடிமரமும் - மனிதனும்

  கொடிமரம் மனித உடலில் முதுகெலும்பின் செயல்பாட்டினை விளக்கும். கொடிமரம் மனிதனுடைய முதுகு தண்டிற்கு ஒப்பானதாக விளங்குகிறது. கொடிமரத்தில் இருக்கும் ஒவ்வொரு அடுக்கும் அல்லது தட்டும் மனிதனின் முதுகிலுள்ள இணைப்பைக் குறிப்பிடுகின்றன. கொடிமரத்திலுள்ள உச்சி பகுதியில் அமைந்திருக்கின்ற மூன்று நிலைகள் மனிதனின் மூவித மூளைகளைப் பற்றி விளக்குகின்றன. அவை பெருமூளை, மத்திய மூளை, கீழ் மூளை ஆகியவை.

  திருவிழாக் காலங்களில் கொடிமரத்தின் கயிறு உச்சி ஏறித் தொடுவதைப் போல அமைந்திருக்குமானது உடலிலுள்ள நரம்பு கற்றைகள் அனைத்தும் முதுகு தண்டு வழியாகச் செல்வது போல் உள் மற்றும் வெளி உணர்வுகளின் செயல்பாட்டின் தொடர்புகளை மூளைக்கு அனுப்பி வைக்கும் செயலை கொடிமரத்தில் காண்பிக்கப்படுகின்றன. நரம்பு கற்றைகள் அனைத்தும் உடலில் பல பாகங்களுக்கு இணைக்கப்பட்டு நரம்பு வழியாக தகவல் தொடர்பினை பெறப்பட்டு இதன் வாயிலாக உள் மற்றும் புற சூழ்நிலைக்கு ஏற்றவாறு மூளைக்கு தகவல் அனுப்புவதும் பெறுவதுமாக அமைகின்றது.

  ஆகமம் கூறும் கொடியேற்றம்

  ஆலயங்களில் கொடியேற்றுவது என்பது ஆகம விதிப்படி நடைபெறுவதாகும். திருவிழாவில் முதல்நாள் கொடியேற்றுவதன் நோக்கமாவது திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதமடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள்பாலிக்கப்போகிறார் என்பதே. இறைவனை அடைந்தவர் அழிவற்ற ஆனந்த வெள்ளத்தில் நிலைத்திருப்பர் என நினைந்து கொடிமரத்தை சூக்கும லிங்கமாக எண்ணி வணங்க வேண்டும். இறைவனின் மூல மந்திரத்தை உச்சரித்த வண்ணம் கொடிமரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.

  துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின்  முதல் நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடி மரத்தைக் காக்கும் பொருட்டு பித்தளை, செம்பு போன்ற உலோகங்களால் கவசமணிவிப்பர். இதனால் வெயில், மழை போன்ற இயற்கை மாற்றங்களிலிருந்து கொடி மரம் காக்கப்படுகிறது.

  கொடிமரமும் ஜோதிடமும்

  கொடிமரத்திற்கும் ஜோதிடத்திற்கும் உள்ள தொடர்பு குழந்தைக்கும் தாயிற்கும் உள்ள தொடர்பு போன்றதாகும். கொடிமரம் சிவபெருமான்; சூரியனுக்கும் அதிதேவதை சிவன் என்பது இங்கே கவனிக்கவேண்டிய விஷயமாகும். கொடிக்கயிறு திருவருட் சக்தி; கொடித்துணி ஆன்மா; தர்ப்பைக் கயிறு பாசம் எனப்படும். கொடியேற்றும் நிகழ்ச்சியானது மும்மல வயப்படும் ஆன்மா, அருவருட்சக்தியினாலே பாசம் அற்று, சிவஞான வடிவமாகிய பதியின் திருவடியை அடைதல் என்னும் தத்துவத்தை உணர்த்துவதாகும். கொடி மரத்தின் பீடம் பத்ரபீடம் எனப்படும். இங்கே இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு மனத்தைப் பலியிட வேண்டும் என்பதற்காக ஆன்மாவைப் பாசக்கயிறு சுற்றியுள்ளதை நினைவூட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றியிருக்கும். 

  மேலே கூறிய விளக்கங்களின்படி கொடிமரத்திற்கு எந்த கிரகத்தின் காரக துவம் பெற்றிருக்கிறது என ஆராய்ந்தால் ஆத்ம காரகன் சூரியனுக்கும் புத்திர காரகன் குருவிற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் தாயிற்கும் குழந்தைக்கும் உள்ள தொப்புள்கொடி தொடர்பையும் விளக்குவதாக அமைந்துள்ளது. நிகழ்ச்சியை கவனித்தால் ஆன்மாவானது பந்தபாசங்களிலிருந்து விடுபட்டு சிவயோக நிலையை அடைவதையே குறிப்பதாக அமைந்துள்ளது. கொடிமரம் சூரியனின் அம்சமாகவும் அதில் ஏற்றப்படும் கொடி குருவின் அம்சமாகும். கொடியில் இருக்கும் கயிறு (தர்ப்பை கயிறு) கேதுவின் அம்சமாகும். அதனை உணர்த்தும் வண்ணமாகவே சூரியன் ஆட்சி வீடு, உச்ச வீடு மற்றும் சூரியனின் நட்சத்திரங்கள் உள்ள வீடுகளில் எல்லாம் கேதுவின் நட்சத்திரங்களான அசுவினி, மகம் மற்றும் மூலம் அமைந்துள்ளது. 

  நாடி ஜோதிடத்தின் படி குரு பகவானை புத்திர காரகனாகவும் குருவின் வீடான தனுர் ராசியில் மூல நக்‌ஷத்திரமே ஆன்மா உருவாகும் மூலாதாரமாகவும் கூறப்படுகிறது. அங்கிருந்து ஒன்பதாம் இடமாக சிம்மம் வருவதால் சூரியனை பித்ரு காரகன் எனப் போற்றப்படுகிறது. மேலும் ஒரு தாய்க்கும் அவளது குழந்தைக்கும் உள்ள முதல் தொடர்பு தொப்புள் கொடியாகும். அதேபோல ஒரு கோயில் கற்ப கிரகத்திற்கும் கோயிலுக்கும் உள்ள தொடர்பு கொடிமரத்தின் மூலமாகவே இணைக்கப்படுகிறது. 

  கொடிமரத்தை மனிதனின் முதுகெலும்புடன் ஒப்பிடப்பட்டுள்ளது. முதுகெலும்பின் காரகன்  சூரியன் என்று மருத்துவ ஜோதிடம் கூறுகிறது. கால புருஷ ராசிப்படி சிம்ம ராசி முதுகெலும்பை குறிக்குமிடமாகும். சிம்ம ராசி சூரியனின் வீடு தானே!  மேலும் விருக்ஷ சாஸ்திரம் உயர்ந்த கம்பீரமான மரங்களுக்கதிபதி சூரியன் என்கிறது. கோயில் கொடிமரங்கள் உயரமான ஒரே மரத்தில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

  கபாலீஸ்வரர் கொடியேற்றத்தின்போது கோசாரத்தில் சூரிய பகவான் வயிற்றைக் குறிக்கும் கும்ப ராசியில் குருவின் பூரட்டாதி நட்சத்திர சாரத்தில் நின்று சிம்மத்தை பார்க்க  குரு பகவான் விருச்சிகத்தில் நிற்க குருவிற்கு வீடு கொடுத்த செவ்வாய் தனது எட்டாம் பார்வையால் குருவிற்கு ஒரு ரத்த பந்தத்தை ஏற்படுத்த அதே நேரத்தில் கொடிக்கயிற்றைக் குறிக்கும் கேது பகவான் சூரியனின் உத்திராட நட்சத்திர சாரத்தில் நின்று தனது திரிகோண பார்வையால் சந்திரனையும் செவ்வாயையும் பார்த்து தாயிற்கும் சேயிற்கும் தொப்புள் கொடி பந்தத்தை ஏற்படுத்த அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கொடியேற்றும் நிகழ்ச்சியைக் காண இயலவில்லை என்றாலும் கொடியேற்றத்தின் அன்று கோயிலுக்குச் சென்று கொடிமரத்தின் அருகே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து இறைவனை வணங்குவது நம்மை ஆன்மீகத்தில் உயர்நிலைக்குக் கொண்டு சேர்க்கும் என்பது நிதர்சனம்.

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

  Mobile 9498098786

  WhatsApp 9841595510

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai