
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேர்த் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் மார்ச் 5-ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் மாசிப் பெரு விழா தொடங்கியது. மார்ச் 6-ம் தேதி மயானக் கொள்ளை விழா, 9-ம் தேதி தீ மிதி திருவிழா ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, 7-ம் நாள் திருவிழாவான திருத்தேர் வடம் பிடித்தல் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள், தற்காலிக பேருந்து நிலையங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.