அரசியலிலும் அரசாங்கத்திலும் டம்மி பீஸாகவே இருக்கீங்களா? அப்ப அதிகார நந்தியை தரிசனம் செய்யுங்க!

நாளை புதன் கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர்
அரசியலிலும் அரசாங்கத்திலும் டம்மி பீஸாகவே இருக்கீங்களா? அப்ப அதிகார நந்தியை தரிசனம் செய்யுங்க!

நாளை புதன்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். நாளை காலை 6.00 மணிக்கு புறப்பாடாகி நான்கு மாட வீதிகளிலும் திருவீதி உலா வந்து 10.30 மணியளவில் திருக்கோயிலை வந்தடைவார் எனக் கோயில் செய்திகள் தெரிவிக்கிறது.  

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.

அதிகாரமும் பதவியும்

இன்று பலரும் பதவி மீது தனக்கு எந்த ஆசையும் இல்லை என உதட்டளவில் கூறினாலும் தனக்கு விரும்பிய பதவி கிடைக்க எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் தான் இருக்கிறார்கள். இன்றைய உலகில் தலைமை பதவியை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் ஒரு சிலர் ஒரு சமூக அமைப்பின் தலைவராக வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இன்னும் சிலர் ஒரு ஊரின் தலைவராக வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இன்னும் சிலர் ஒரு பிராந்தியத்தின் தலைவராக வர வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஒருவர் ஒரு தலைமைப் பதவியை அடைவதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்துச் சொத்துக்களையும், உறவுகளையும் இழக்கவும் தயாராகிறார். சமீப காலத்தில் பதவிக்காக நாடு முழுவது பாரபட்சமின்றி எவ்வளவு பேரங்கள் நடந்தது என்பதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.

நந்தி தேவர் வரலாறு

பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிர்ந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கப்பேழை ஒன்றைக் கண்டார். அதில் தங்க விக்ரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது.

அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான் ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்றுகொண்ட நந்தி, தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரிரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாது சங்கமம் எனும் நான்கு விதமாகக் குணத்தை வெளிப்படுத்துகிறது.

சிவன் இவர் மீது தீவிர பற்றுக்கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தைச் சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்றுத் தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

ஜோதிடமும் அதிகார பதவியும்

கிரகங்களில் அதிகாரத்தையும் கம்பீரத்தையும் குறிக்கும் கிரகம் என்றால் அது செவ்வாய்தான். சூரியனும் அதிகாரத்தைக் குறிக்கும் கிரகம்தான் என்றாலும் சூரியன் அரவணைத்துச் செல்லும் அதிகாரமும் ஆன்மீகத்தோடு சேர்ந்த கம்பீரமும் கொண்டது என்பதால் இரண்டிற்கும் கால தேச வர்த்தமானம் மாறுபடும். வீரமும் துணிச்சலும் கட்டுக்கடங்காத தன்மையும் கொண்ட கிரகம் செவ்வாயாகும்.

சூரியனும் செவ்வாயும் ஆண்மையைக் குறிக்கும் கிரகங்கள் என்றாலும் ஒரு பெண்ணுக்கு தந்தையைக் குறிக்கும்போது அரவணைத்துச் செல்லும் சூரியனும் கணவனையும் இளைய சகோதரனையும் குறிக்கும்போது செவ்வாயும் காரகமாகின்றன.

பராக்கிரமம்மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். ஆற்றல், ஆதிக்கம், பராக்கிரமம், வீரதீர  செயல்கள்,  அதிகாரம் செலுத்துதல், ஆளுமைத்திறன், நம்பிக்கை, வளைந்து கொடுக்காத தன்மை, தர்மம், நேர்மை, நியாயம் போன்ற பல தன்மைகள் கொண்ட கிரகம். போலீஸ், ராணுவம், தீயணைப்புத்துறை, உயர் பதவிகள், சகோதர உறவுகள், மண், மனை, வீடு, நிலம், தோட்டம், எஸ்டேட்  போன்றவற்றுக்கான அதிபதி  செவ்வாய் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற அரசாங்க உயர் பதவிக்கு அனுக்கிரகம் செய்வதும் செவ்வாய்தான். 

தோற்றத்தில் கம்பீரம், நடையில் மிடுக்கு,  குரலில்  அதிகாரத்தை ஏற்படுத்தித் தரக்கூடியவர். போட்டி, பந்தயங்களில், சாகச நிகழ்ச்சிகளில் புகழ்பெற செவ்வாயின் பலம் அவசியம் தேவை. செவ்வாய் அதிகாரத்தையும் பதவியும் குறிப்பதால்தான் அவர் காலபுருஷனுக்கு பத்தாமிடமான  மகரத்தில் உச்சம் பெறுகிறார். ஜோதிடத்தில் சூரியன், செவ்வாய் சனி சேர்க்கை இருந்தால் தான் அதிகாரம் தரும் பதவிகளை அடைய முடியும். 

அங்காரகனுக்கும் அதிகார நந்திக்கும் உள்ள தொடர்பு

சிவனின் காவலனாக விளங்கும் நந்தியம்பெரிமானும் அதிகாரம் பதவி ஆகியவற்றைக் கொடுப்பதில் செவ்வாயைப் போன்றே விளங்குகின்றார். அதிகாரம் பதவி மட்டுமின்றி திருமண யோகத்திற்கும் நந்தியம்பெருமான் முக்கியத்துவம் பெறுகிறார். இன்னும் சொல்லப்போனால் செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கு நந்தி வழிபாடே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்தில் நந்தி வழிபாடு செய்வது செவ்வாயின் காரகங்களான திருமணயோகம், கடன் நிவர்த்தி, ஆற்றல், வெற்றி, உயர் பதவி ஆகியவை ஏற்படும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அரசு வேலை கிடைக்க அதிகார நந்தி தரிசனம்

ஜோதிடத்தைப் பொருத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்ம காரகன் எனக் கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்தியோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். இத்தகைய அமைப்பை ஜாதகத்தில் கொண்டவர்கள் சனைச்சர பகவான் தன் தந்தைக்கு பாத பூஜை செய்யும் ரத சப்தமி நாளில் வணங்கினால் அரசாங்க வேலை விரைவில் கிடைக்கும் என்பது நிதர்சனம்.

அரசியலில் அதிகார பதவியைத் தரும் அதிகார நந்தி

ஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர். தற்போது அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில் பலரும் அரசியலில் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் அரசியலில் கொடிகட்டிப் பறக்க விரும்புபவர்கள், பதவியில் ஸ்திரத்தன்மை வேண்டுபவர்கள் திருமயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்தி சேவையை நாளை தரிசிப்பது சிறந்தது.

அரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.

ராஜ கிரகங்களான சூரியன் சந்திரன் மற்றும்  அரசாங்க அதிகார பதவிகளைத் தரும் செவ்வாய் ஆட்சி உச்ச பலம் பெற்று நிற்க வேண்டும். மேலும்  6/8/12 மற்றும் பாதகாதிபதி தொடர்புகள் பெறாமல் இருக்கவேண்டும். 

அனைத்து பதவிகளையும் தீர்மானிக்கும் சனிஸ்வரபகவான் ஆட்சி உச்சம் பெற்று சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.

சந்திரனும் குருவும் பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களைப் பெற்று விளங்க வேண்டும்.

  • தர்ம கர்மாதிபதி யோகம் மற்றும் பஞ்ச மகா புருஷ யோகம்
  • செவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.
  • 1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.
  • மூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்துக் காணப்பட வேண்டும்.
  • 6-ம் இடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்துக் காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்.
  • 6/8/12ம் அதிபதிகள் இந்த மூன்று வீடுகளுக்குள் மாறியோ பரிவர்தனை பெற்றோ அமர்ந்து விபரீத ராஜ யோகம் பெற்று நிற்பது.
  • லக்னம், ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய மூன்றும் சர்வாஷ்டக வர்க்கத்தில் 30 க்கு மேல் அதிக பரல் பெற்று நிற்க வேண்டும்.

இந்த அமைப்பு இருந்தும் இன்னும் அரசியலில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்ற வருத்தமா? அல்லது அதிகார பதவி இருந்தும் ஓரம்கட்டப்பட்டிருக்கிறீர்களா? கவலையை விடுங்க! உங்களுக்காகவே அதிகார நந்தி சேவையில் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் வலம் வர இருக்கிறார்கள். அவர்களை நாளை தரிசிப்பது உங்கள் குறையைத் தீர்த்து வைக்கும் என்பது நிதர்சனம். அட! ஒருதரம் நம்பிக்கையோடு அதிகார நந்தியை தரிசித்துத்தான் பாருங்களேன்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com