இன்றும் நாளையும் திருமலையில் இலவச முதன்மை தரிசனங்கள்

திருமலையில் செவ்வாய்க்கிழமை மூத்த குடிமக்களுக்கும் புதன்கிழமை கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவச முதன்மை தரிசனங்கள் வழங்கப்பட உள்ளன.
இன்றும் நாளையும் திருமலையில் இலவச முதன்மை தரிசனங்கள்

திருமலையில் செவ்வாய்க்கிழமை மூத்த குடிமக்களுக்கும் புதன்கிழமை கைக்குழந்தைகளின் பெற்றோருக்கும் இலவச முதன்மை தரிசனங்கள் வழங்கப்பட உள்ளன.

திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்களுக்கு மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்கு இலவச தரிசனத்தை வழங்கி வருகிறது. அதன்படி 12ஆம் தேதி மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு தரிசனம் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு ஆயிரம் பேர், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் பேர், மாலை 3 மணிக்கு ஆயிரம் பேர் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேர் இந்த வசதியைப் பெற்று ஏழுமலையானை தரிசிப்பர்.

அதேபோல் 13ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு "சுபதம்' பகுதி வழியாக தரிசனம் வழங்கப்பட உள்ளது.

கோயில்களில் நகைத் திருட்டைத் தடுக்க நவீன தொழில்நுட்பம் அறிமுகம்

திருப்பதி தேவஸ்தானம் நிர்வகிக்கும் கோயில்களில் நகைகள் திருடப்படுவதைத் தடுக்க ஆர்எஃப்ஐடி என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாக திருப்பதி செயல் இணை அதிகாரி லட்சுமிகாந்தம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் உற்சவர்களின் கிரீடங்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்நிலையில், தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ள நகைகளைப் பாதுகாக்க தேவஸ்தானம் ரேடியோ ஃபிரீக்வன்சி ஐடென்டிட்டி டிவைஸ் (ஆர்எஃப்ஐடி) என்ற கருவியை அனைத்து நகைகளிலும் பொருத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் நகைகள் பாதுகாப்பாக இருக்கும். குறிப்பிட்ட இடத்திலிருந்து நகைகள் நகர்த்தப்பட்டு வெளியில் கொண்டு செல்லப்பட்டால் உடனடியாக அதில் உள்ள சென்சார் தகவல் அளித்து விடும். ஆகம ஆலோசகர்களின் அனுமதியுடன் இதை முதன்முதலில் கோவிந்தராஜ சுவாமி கோயிலில் உள்ள நகைகளில் பொருத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் தேவஸ்தானம் நிர்வகிக்கும் அனைத்து கோயில்களிலும் உள்ள நகைகளுக்கு ஆர்எப்ஐடி கருவி பொருத்தப்பட உள்ளது என்றார் அவர்.

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.24 கோடி

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ஞாயிற்றுக்கிழமை ரூ.3.24 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அதன்படி ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.24 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரூ.20 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், கோசம்ரக்ஷண அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

84,982 பேர் தரிசனம்

ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 84,982 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,988 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.

திங்கள்கிழமை காலை நிலவரப்படி 5 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்திற்கு 12 மணிநேரம் வரை ஆனது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.

சோதனைச் சாவடி வசூல் ரூ.2.14 லட்சம்: அலிபிரி சோதனைச் சாவடியை சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 11.59 மணி வரை 80,210 பயணிகள் கடந்துள்ளனர். 9,940 வாகனங்கள் இச்சாவடியைக் கடந்து சென்றுள்ளன. அதன் மூலம் ரூ.2.14 லட்சம் கிடைத்துள்ளது. விதிகளை மீறிய வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.24,020 வசூலானதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com