சுடச்சுட

  

  திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்ச் 20-ல் பங்குனி உத்திரத் திருவிழா

  By DIN  |   Published on : 13th March 2019 11:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  murugar1

   

  திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் மார்ச் 20-ம் தேதி  பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகிறது. 

  அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழும் திருப்பரங்குன்றத்தில் ஆண்டுதோறும் பங்குனிப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  இதையொட்டி உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் சர்வ அலங்காரமும், மகா தீப தூப ஆராதனைகளும் நடைபெற்றன. இதன் பிறகு உற்சவர் சன்னதியிலிருந்து மேளதாளங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். 

  அங்கு தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்துக்கு தர்ப்பை புல், மா இலை, பூ மாலை, சந்தனம், குங்குமம் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. முன்னதாக கம்பத்திற்கு பால், பன்னீர், இளநீர், புனித நீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து காலை 10.50 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. 

  பூஜைகளை கோயில் ஸ்தானிக பட்டர்கள் சுவாமிநாதன், சிவானந்தம், ராஜா, ரமேஷ், சொக்கு சுப்பிரமணியன், செல்லப்பா, சண்முகசுந்தரம் ஆகியோர் செய்தனர்.

  விழாவையொட்டி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி தினமும் காலையில் தங்க பல்லக்கிலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலாவந்து அருள்பாலிப்பார். 

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 20-ம் தேதி பங்குனி உத்திரமும், 21-ம் தேதி சூரசம்ஹார லீலையும், 22-ம் தேதி பட்டாபிஷேகமும், 23-ம் தேதி சுப்பிரமணியசுவாமி தெய்வானை திருக்கல்யாண வைபவமும், 24-ம் தேதி தேரோட்ட மும் நடைபெறும். 

  விழா ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர்(பொறுப்பு)மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai