சுடச்சுட

  

  கல்லானாலும் கணவன் எனப் போற்றும் பாசக்கார பெண்மணியா நீங்க! காரடையான் நோன்பில் காமாக்ஷியை வணங்குங்க!

  By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |   Published on : 14th March 2019 06:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kamakshi6


  நாளை (15/3/2019) வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள் பிரம்ம முகூர்த்த காலத்தில் அனைத்து சுமங்கலி பெண்களாலும் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் காரடையான் நோன்பு. சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

  பெண்கள் கடைப்பிடிக்கும் விரதங்களிலேயே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது காரடையான் நோன்பு. இதைக் காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் கூறுவர். இந்த சுமங்கலி நோன்பு தென் இந்தியர்கள் மட்டுமல்ல வட இந்தியர்களாலும் சுகிரனின் பலம் நிறைந்த வைகாசி மாதத்தில் பௌர்ணமி திதியன்று சுக்கிர வாரத்தில் "வட சாவித்திரி விரதம்" என்ற பெயரில் அனுஷ்டிக்கப்படுகிறது

  மாசிக்கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான், தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். இதனை முன்னிட்டு இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. காஞ்சி காமாக்ஷி, மாங்காடு காமாக்ஷி, தருமபுரி கல்யாண காமாக்ஷி, சென்னை மந்தவெளி லக்ஷ்மி காமாக்ஷி, திருமயிலை வெள்ளீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் காமாக்ஷி ஆகிய அனைத்து காமாக்ஷி ஆலயங்களிலும் நாளை காரடையான் நோன்பு மிகச்சிறப்பாக கொண்டாடப்படும்.

  காரடையான் நோன்பின் தத்துவம்

  கணவனோடு எப்பொழுதும் சுமங்கலியாக வாழவேண்டும் என்பதுதான். இந்தநோன்பு சுமங்கலிகளுக்குத் தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக ஏற்பட்டது. மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். 

  பூஜை செய்யும் முறை

  காமாக்ஷி தேவியை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள் கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும். பிறகு கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி பிரார்த்தனை செய்து ஒரு கயிற்றை அம்பாளின் படத்திற்கு சாத்திவிட்டு மற்றதைத் தான் அணிய வேண்டும். பிறகு அம்பாளுக்கு நைவேத்யம் செய்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும். 

  பூஜையை முடிக்கும் வரை பெண்கள் எதையும் உண்ணாமல் இருக்க வேண்டும். முடியாதவர்கள் சிறிதளவு பழம் ஏதேனும் சாப்பிடலாம். ஆனால் மோர், தயிர், பால் என்று எதையும் உட்கொள்ளக் கூடாது. ஏனைய பிற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக்கொள்வது வழக்கமாயிருக்க இந்தக் காரடையான் நோன்பிற்கு மட்டும் சரட்டில் மஞ்சள் சேர்த்துக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள்.

  சங்கல்ப ஸ்லோகம்:

  மம தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்யர்த்தம் 

  மம பர்த்துச்ச  அன்யோன்யப்ரீதி

  அபிவ்ருத்தியர்த்தம் அவியோகார்த்தம் 

  ஸ்ரீ காமாக்ஷி பூஜாம் கரிஷ்யே

  என கூறி சங்கல்பம் செய்துக்கொள்ளவேண்டும். பிறகு கீழே கூறியுள்ள மந்திரத்தை கூறி ஸ்ரீ காமாக்ஷியை பிரார்தனை செய்யவும்:

  ஏகாம்பர நாத தயிதாம் காமாக்ஷீம் 

  புவனேஸ்வரீம் த்யாயாமி ஹ்ருதயே 

  தேவீம் வாஞ்சிதார்த்த ப்ரதாயிநீம்

  காமாக்ஷீம் ஆவாஹயாமி.

  மஞ்சள் சரடு கொண்டு பூஜை செய்து அதைக் கழுத்தில் கட்டிக் கொள்வது வழக்கம். காரடையும், வெண்ணெய்யும் கையில் வைத்துக் கொண்டு கீழ்க் கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

  தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம்

  தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய

  ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா

  'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன்

  ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்'

  பெண்கள் தீர்க சுமங்கலியாக இருக்கும் ஜாதக அமைப்பு

  1. கணவன் மனைவி இருவர் ஜாதகத்திலும் லக்னம் பலம் பெற்று மனைவியைக் குறிக்கும் சுக்கிரனும் கணவனைக் குறிக்கும் மங்களன் எனும் செவ்வாயும் நல்ல நிலையில் ஆட்சி உச்சம் மூல திரிகோண பலம் மற்றும் திக் பலம் பெற்று இருக்க வேண்டும்.

  2. பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் ஏழாமிடத்தோடு தொடர்பு கொண்டிருக்கக் கூடாது. 

  3. ஆண், பெண் இருவர் ஜாதகத்திலும் செவ்வாய் அசுபர்களுடன் சேர்ந்து லக்னம், குடும்பம், சுகம், களத்திரம், ஆயுள் மற்றும் மாங்கல்யம், அயன சயன சுகம் ஆகிய வீடுகளில் தொடர்பு பெறக்கூடாது.

  4. எட்டு மற்றும் பன்னிரண்டாம் வீடுகளில் ராகு தொடர்பு கொள்ளக்கூடாது.

  5. பலமிழந்த நீச சந்திரன் 6/8 வீடுகளில் தொடர்பு பெறாமல் இருக்க வேண்டும்.

  6. அசுப கிரகங்கள் உச்சம் பெற்று எட்டாமிடத்தில் நிற்கக் கூடாது.

  7. செவ்வாயும் ராகுவும் அல்லது செவ்வாயும் சனியும் சேர்க்கை பெற்று 7/8ம் வீடுகளில் நிற்கக் கூடாது.

  இவற்றோடு ரஜ்ஜு பொருத்தம் இருக்க வேண்டும். இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்த பொருத்தம் குறிக்கிறது. திருமணப் பந்தத்திற்கு இந்த பொருத்தம் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

  ரஜ்ஜு பொருத்தம்

  பொதுவாக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குத் திருமண வயதில் இருக்கும் தம் மகள் அல்லது மகனின் சந்தோஷம்தான் முக்கியமாகக் கருதுகின்றனர். மேலும், திருமணம் என்றாலே வாழையடி வாழையாக தங்கள் பரம்பரை செழிக்கவும் தங்கள் பிள்ளைகள் பிள்ளைப் பேறுடனும் மற்றும் எந்த குறையும் இன்றி நீண்ட காலம் வாழவும் ஆசைப்படுகின்றனர். அத்தகைய திருமணம் நன்கு அமையத் திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர். செவ்வாய் தோஷம், பாவ சாம்யம் தசா புத்தி சந்திப்பு போன்றவைகள் நன்கு அமைந்திருந்தாலும், அடுத்து பத்து பொருத்தங்கள் பார்த்துவிட்டு அதில் ரஜ்ஜுப் பொருத்தம் இல்லை என்றால் அதனை ரஜ்ஜு தட்டுகிறது என்று ஒதுக்கி விடுகின்றார்கள். 

  நாங்களெல்லாம் மனசுக்கு பிடித்தவரை கல்யாணம் பண்ணிக்கொண்டோம். எங்களுக்கெல்லாம் எந்த ரஜ்ஜுவும் பார்க்கவில்லை. எங்களுக்கெல்லாம் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உள்ளதா சிலர் கேட்பது காதில் விழுகிறது. அவர்கள் எல்லோருக்கும் இன்று காரடையான் நோன்பு இருப்பதுதான் சிறந்த வழி.

  சத்யவான் சாவித்திரி கதை

  மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்திலிருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான். அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டுக் காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள். 

  அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள். சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார். அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள். இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். 

  சாவித்திரி சமயோசிதமாக, என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள். சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரைத் திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார். 

  மாங்கல்ய பலம் அருளும் திருத்தலங்கள்

  பஞ்ச மங்களத்தலம்" என்று சிறப்பித்துப் போற்றப்படுவது திருமங்கலக்குடி திருத்தலம். ஊரின் பெயர் மங்கலக்குடி, அம்பாள் பெயர் மங்களாம்பிகை, இக்கோவில் விமானம் மங்கள விமானம், இத்தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர், இத்தல தீர்த்தம் மங்கள தீர்த்தம் ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது. கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத்தடை நீங்கும், மாங்கல்ய பலம் நீடிக்கும், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம்.

  மாங்கல்ய பலம் வேண்டுபவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திரநக்ஷத்திர நாளிலோ அல்லது தங்களது ஜென்ம நக்ஷத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தம ஸ்தலம் திருச்சி மாவட்டம் இடையாற்று மங்கலம் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயிலுக்கு செல்ல திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் செல்லலாம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது. திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று, பின் இங்குவந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.

  தீர்க சுமங்கலியாக வாழ சுக்கிரனின் அனுக்கிரகம் முக்கியமாகும். எனவே பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் கணவனுடன் சேர்ந்து சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்க நாச்சியாரை வழிபடுவது மாங்கல்ய தோஷங்களைப் போக்கி தீர்க சுமங்கலி யோகத்தைத் தரும். சென்னையில் இருப்பவர்கள் திருமயிலை வெள்ளீஸ்வரர் கோயில் மற்றும் மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில் ஆகிய சுக்கிர ஸ்தலங்களில் சென்றும் வழிபடுவது மாங்கல்ய பலம் பெற சிறந்த ஸ்தலங்களாகும்.

  தீர்க சுமங்கலி யோகம் பெற விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகும். இங்கு அம்மையும் அப்பனும் வயோதிகர்களாய் அருள் பாலிப்பது சிறப்பு.

  திருச்சி லால்குடியில் உள்ள சப்த ரிஷீஸ்வரர் கோயிலில் அருள்பாளிக்கும் ஸ்ரீமதி அம்பாளும் தீர்க்க சுமங்கலி யோகத்தை வழங்குவதில் நிகரற்றவர் ஆவார். அவர் பெயரிலையே ஸ்ரீமதி என இருப்பதும் சிற்பத்தில் சுமங்கலி பெண்கள் அணியக்கூடிய கொலுசு அணிந்திருப்பதும் இத்தல சிறப்பாகும்.

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

  Mobile 9498098786

  WhatsApp 9841595510

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai