சுடச்சுட

  

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் தொன்மை வாய்ந்த உற்சவர் சிலையை சீரமைத்து கும்பாபிஷேகம்

  By DIN  |   Published on : 15th March 2019 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kanji

  சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு சோமாஸ்கந்தர், ஏலவார் குழலியம்மைக்கு கும்பாபிஷேகம் நடத்திய சிவாச்சாரியர்கள்.

   காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள பழைய உற்சவர் சிலையை சீரமைத்து வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 
  இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. இச்சிலையில் சிதிலம் ஏற்பட்டதால், அறநிலையத் துறை சார்பில் புதிய சிலை செய்யப்பட்டது. புதிய சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக பொதுமக்களும், சிவபக்தர்களும் புகார் அளித்தனர். அதன்பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி, புதிதாகச் செய்யப்பட்ட சிலையில் தங்கம் இல்லை என தெரிவித்தது. இது தொடர்பாக, 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
  இந்நிலையில், ஆண்டுதோறும் நடத்தப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவை நிகழாண்டு பழைய உற்சவர் சிலையைக் கொண்டு நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறநிலையத் துறையிடம் பக்தர்கள் கோரிக்கை விடுத்ததோடு, போராட்டங்களையும் நடத்தினர்.
  இதனிடையே, பழைய உற்சவர் சிலையைக் கொண்டு திருவிழா, அடுத்து வரும் உற்சவங்களை நடத்திக் கொள்ளலாம். ராஜவீதிகளில் அச்சிலையை வீதியுலாவுக்குப் பயன்படுத்தலாம். மேலும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் மேற்பார்வையில் திருவிழாவை விரைந்து நடத்த வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 
  இதையடுத்து, ஏகாம்பரநாதர் கோயிலில் இருந்த பழைய உற்சவர் சிலையைக் கொண்டு பங்குனி உத்திரத் திருவிழா திங்கள்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. எனினும், பழைய உற்சவர் சிலையைச் சீரமைக்கும் பணியை இந்து அறநிலையத் துறையினர் கடந்த இரண்டு நாள்களாக தாமதித்து வந்தனர். இதனால், பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு, மீண்டும் கோயில் செயல் அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  இதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவை அடுத்து, புதன்கிழமை காலை 10 மணியளவில் பழைய சோமாஸ்கந்தர் சிலையை சரிசெய்யும் பணிகள் (ஜெடிபந்தனம்) தொடங்கின. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அன்று இரவு இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டார். ஏடிஎஸ்பி, 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட 30 போலீஸார் திருவிழா முடியும் வரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்று அவர் தெரிவித்தார். 
  இதையடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள் முன்னிலையில் தொன்மையான உற்சவர் சிலைக்கு பாலாலயம்  செய்து, சீரமைக்கும் பணிகள் நடத்தப்பட்டன. வியாழக்கிழமை காலை வரை சுமார் 10 மணி நேரத்துக்கு இப்பணிகள் நடைபெற்றது. அப்போது, சோமாஸ்கந்தர் சிலையில் உள்ள பழுதடைந்த உலோகப் பகுதிகளை நீக்கி விட்டு, ஐம்பொன் உலோகங்களைப் பயன்படுத்தி  உற்சவர் சிலை சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து, ஏகாம்பரநாதர், முருகர், ஏலவார் குழலி அம்பாள் அடங்கிய சோமாஸ்கந்தர் சிலை மற்றும் ஏலவார் குழலியம்மை தனிச் சிலை ஆகியவற்றுக்கு ஆகம விதிப்படி, சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். 
  இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் தனபால் செய்தியாளர்களிடம் கூறியது: தொன்மை வாய்ந்த ஏகாம்பரநாதர் கோயிலின் சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை பழுதடைந்திருந்தது. உயர்நீதிமன்றம், அறநிலையத்துறை ஆணையர் உத்தரவுகளின்படி, சோமாஸ்கந்தர் சிலை தற்போது முறைப்படி ஆஸ்தான ஸ்தபதிகளைக் கொண்டு,  சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாள்களாக இப்பணி நடைபெற்றது. தொடர்ந்து, அச்சிலைக்கு ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, சுவாமி புறப்பாடுகளுக்கு தயார்நிலையில் உள்ளது.
  இனிவரும் காலங்களில் அனைத்து சுவாமி புறப்பாடுகளுக்கும் சோமாஸ்கந்தர் சிலையைப் பயன்படுத்தலாம். அவ்வகையில், உற்சவர் சிலை உறுதித்தன்மையுடன் உள்ளது. இப்பணி நிறைவடைய உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என்றார் அவர்.    

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai