சுடச்சுட

  
  durga

   

  மாசியும், பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு ஆகும். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக்காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்கிறார்கள். 

  கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் இனிப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். மாசிக் கயிறு பாசி படியும் என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் கயிறானது, பாசி படிகின்ற அளவுக்குப் பழையதானாலும் கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் ஒன்று கூடுவர்.

  இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். இந்த ஆண்டு காரடையான் நோன்பு வெள்ளிக்கிழமையான இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

  பதிவிரதையான சாவித்திரியின் கணவன் சத்தியவானின் உயிரை எமன் பறித்துச் சென்றான். சாவித்திரி அவனைத் தடுத்து, வாதாடி தன் கணவனின் உயிரை மீட்டு வந்தாள். இதற்காக இவள் நோற்ற நோன்பு தான் சாவித்திரி நோன்பு ஆகும்.

  இந்த நாளில் சுமங்கலிகள், தங்கள் கழுத்தில் மங்கல நாண் எனப்படும் தாலியானது நிலைக்கவும், தங்களின் கணவன் நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் என்பதற்காகவும் சாவித்திரி அம்மனை வேண்டி விரதம் மேற்கொள்வார்கள். இந்த நோன்பின் போது..

  "உருகாத வெண்ணெய்யும், ஓரடையும்

  வைத்து நோன்பு நோற்றேன்

  ஒரு நாளும் என் கணவன் என்னைப்

  பிரியாமல் இருக்க வேண்டும்" 

  என்று சொல்லிச் செய்த கார அடையையும், வெல்ல அடையையும் வெண்ணெய்யோடு சேர்த்துப் படைக்க வேண்டும். பின்பு மஞ்சள் பூசிய நோன்புக் கயிற்றைப் பெண்கள் கட்டிக் கொள்ள வேண்டும். இந்த விரதம் இருக்கும் திருமணமான பெண்களுக்குத் தீர்க்க சுமங்கலி வரமும், திருமணமாகாத பெண்களுக்குக் கூடிய விரைவிலேயே திருமண பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  விரத பலன்கள்

  இவ்விரத முறையை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பின்பற்றுவதால் கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து பாசமும் நேசமும் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று கூடுவர். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும். கன்னிப் பெண்களுக்கு நிறைவான திருமண வாழ்வு கிடைக்கும். எல்லாவித செல்வங்களுடன் நிறைவான வாழ்க்கை பெண்களுக்குக் கிடைக்கும்.

  காரடையான் நோன்பு மேற்கொண்ட சாவித்திரி வீரம், பக்தி, விவேகம், பொறுமை, நம்பிக்கை ஆகியவற்றுடன் எமதர்மரிடம் போராடி தனது கணவனின் உயிரினைத் திரும்பப் பெற்றாள். அதேபோல் நாமும் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் இவ்விரத வழிபாட்டினை மேற்கொள்வோம். 

  விரதம் இருப்பவர்கள் இன்று மாலை அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று அம்மனைத் தரிசித்து பூரண அருள் பெறுவோமாக. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai