சுடச்சுட

  
  astro

   

  1. இந்த தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஒரு சில ஜோதிடர்கள் தான் அனுபவமிக்கவராக இருப்பார்களோ என எண்ண வேண்டியதில்லை. ஜோதிடத்தில் விதிகள் அனைத்தும் பராசரர் தொடங்கி சமீப காலத்தில் வாழ்ந்த கல்யாண வர்மர் போன்ற அனைவரும்  பயன்படுத்திய ஜோதிட விதிகளும் ஒன்றே. அதனை பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து பல ஜாதகங்களை பல்வேறு கோணங்களில் கண்டு பலன் உரைத்தல் மட்டும் தான் சிறக்கிறது. இந்த விஷயத்தில் நிச்சயம் ஜோதிடர்களைக் குறைகூறுவதை விடப் பலன் காணச் செல்வோரின் குறைகள் தான் அதிகம்.

  2. எப்படி என்றால், ஒரு சிலர் தமக்கு உடனடியாக பலன் சொல்ல வேண்டும் என நச்சரிப்பதோடு, அவர்கள் ஜனன கால குறிப்புகளான ஒரு ஜாதகரின் பிறப்பு தகவல்களை சரியாக அளிப்பதில்லை. உதாரணமாக பிறந்த தேதி, பிறந்த நேரம் போன்றவற்றைத் துல்லியமாக அளிப்பது இல்லை. ஏன் சிலர் ஒருபடி மேலே போய் ஏதாவது ஒரு நிகழ்வைச் சொல்லி அன்று தான் பிறந்ததாகக் கூறுவர். இதற்கெல்லாம் பாரம்பரிய முறை ஜோதிடத்தில் சரியான துல்லியமான பலன்களை கூறுவது மிகக் கடினம். மேலும் முக்கியமான ஒன்று ஒரு ஜாதகர் பிறந்த ஊர் இது மட்டுமே தான் சூரியனின் ஒளிக்கதிர் அந்த ஜாதகர் பிறந்த போது கொண்ட சூழலைத் தெளிவாக எடுத்துரைக்கும். 

  3. வெகு அதிகமாக ஜோதிடர்களுக்கு சவாலாக இருப்பது பின்னிரவில் பிறந்த குழந்தைகளின் தகவல் பெற்று பலன் உரைப்பதே. உதாரணமாக ஒரு குழந்தை எதோ ஒரு மாதத்தில், 9ஆம் தேதி பின்னிரவு பிறந்ததெனக் கூறுவார்கள் அதனை 10 ஆம் தேதி எனக் குறிப்பிடுவார்கள். அதாவது ஆங்கில தேதிகள் இரவு மணி 12-க்கு பிறகு மறு நாளின் தொடக்கம் எனக் கொள்ள வேண்டும். 

  ஆனால் ஜோதிட ரீதியாக காண வேண்டிய, சூரிய உதயத்திற்கு பிறகு வரும் நாளே மறுநாள் எனக் கருத வேண்டும். இதைச் சரி செய்ய ஜோதிடர்கள் வெகு பிரயத்தனபட வேண்டி வரும். இதற்கு இரு நாட்களின் நட்சத்திரம் கண்டு அதன் பலன்கள் அந்த ஜாதகருக்கு ஒத்து வரும்பட்சத்தில் மேற்கொண்டு பலன் காண வேண்டி வரும். இது கால விரயமாவதோடு இதனைக் காண ஜோதிடர்கள் படும் சிரமம் பலன் காண வருபவர்கள் அறிய இயலாது தான். கால தாமதமானால் மட்டும், வருபவர்கள் படும் கோபத்தால் எந்த ஒரு பயனும் இல்லை. 

  4. வாழ்வில் ஒரு ஜாதகன் ஒரு சில பிரச்னைகளை சந்திக்கிறான் எனக் கொள்ளுங்கள். அவன் அதிலிருந்து மீளவும், வெற்றி காணவும் சிந்தனை செய்கிறான். ஆயினும் அவனால் ஒரு தீர்வு காண இயல முடியவில்லை. அப்படியே சிந்தனை செய்தாலும் சுற்றிச் சுற்றி அவன் துவங்கிய இடத்துக்கே வந்து சிரமப்படுவான். அப்போது தான் ஒரு ஜோதிடரை அவன் நாடுகிறான். அவரின் சிந்தனைகளை இப்போது தனதாக்கி ஒரு தீர்வு காண எழுகிறான் / முயல்கிறான். 

  ஒரு நோயாளி எப்படி மருத்துவரின் சொல் கேட்டு அவர் கூறும் உணவு, மருந்து, மாத்திரைகளை அப்படியே உண்டு நோயிலிருந்து விடுபடுகிறானோ அதுபோலவே இங்கும் ஒரு ஜோதிடர் தரும் பரிந்துரைகளை அலசி ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நடந்து பிரச்னையிலிருந்து மீள்கிறான். ஜோதிடரின் பரிந்துரைகளால், அவன் பிரச்னைகளை மட்டும் அலசி ஆராய்ந்து தெளிகிறான்.  

  5. நாம் அத்தனைப்பேரும், ஜோதிடர்களும் சேர்த்து தான் அனைவரும் இந்த பிரபஞ்ச சக்திக்குள் தான் வாழ்கிறோம். அதனால், ஜோதிடம் சொல்பவர்களுக்கும் இந்த கர்ம வினைகளின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அவர்களுக்கும் மற்றவர்களைப்போல் பிணி, மூப்பு, போன்ற பல பிரச்னைகளின் தாக்குதல் நிச்சயம் உண்டு. இங்கு மறுபடியும் ஒரு மருத்துவரை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம், ஒரு மருத்துவர், மற்றவர்களின் நோயைத் தீர்ப்பார் என்றாலும் அவருக்கே நோய் தாக்கப்படும் போது நிச்சயம் அவராகவோ அல்லது மற்றொரு மருத்துவரின் உதவியை நாடியோ அவரின் நோயைக் களைய முயல்வார். எப்படி ஒரு தீவிர நோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் ஒரு மருத்துவரை அந்த நோயே தாக்கப்படுமோ அதுபோலவே தன்னிடம் ஜாதகம் தமக்கு சாதகமாக உள்ளதா எனக் காண வரும் அத்துணை பேருக்கும் ஜோதிடர்கள் கூறும் பரிகாரம் பிரச்னையை தீர்த்துவைக்கும் என்றாலும் அந்த ஜாதகனின் கர்ம பலன்கள், அதனை எடுத்துச் சொல்லும் ஜோதிடரையும் தாக்கியே தீரும். 

  6. உதாரணத்திற்கு, திருமணப் பொருத்தம் காணும்படி வரும் பலருள் வெறுமனே நட்சத்திரப் பொருத்தம் மட்டும் கண்டு உரைக்கும்படி கூறுவதை நான் பார்க்கிறேன். அப்படி வெறுமனே நட்சத்திரப் பொருத்தம் மட்டும் கண்டு திருமணம் செய்த பலர் திருமணம் ஆன சில மாதங்களிலேயே விவாகரத்து பேச்சுக்குள் நுழைவதைக் காணுகிறோம். ஏன் எனில் அவர்களின் அவசரத்தால் இது நடந்தேறுகிறது என்றால் அது உண்மையே. ஆண் பெண் இருவருக்குள் உள்ள தோஷ சாம்யம் எனும் பாவசாம்யம் காணாததாலும் இன்னும் பல முக்கிய அம்சங்களை ஆய்வு செய்யாமையே காரணம் என்று திருமண பொருத்தம் பார்க்க வரும் போது முதலிலேயே சொன்னால் மிகச் சிலரைத் தவிர, வேறு எவரும் கேட்பதில்லை. ஏன் எனில் இந்த ஜோதிட பொருத்தம் தவிர, பெண்ணின் அழகு, ஆணின் அந்தஸ்து போன்ற சிலவகை அவர்கள் ஆதாயபடுகிற சூழல் நிலவுவதால் திருமண பொருத்தத்தை மேலெழுந்த வாரியாக காண முயல்கின்றனர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள் நம் முன்னோர்கள். 

  7. ஜோதிடர்களுக்கும், சில விதிமுறைகளை விதித்துள்ளார்கள். ஆனால் அது தற்போது பின்பற்றுவதில்லையே என நீங்கள் கூறுவது கேட்கிறது. அதாவது, சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரையில் தான் ஜோதிட பலன் உரைப்பது என்றும், ஜோதிடரின் ஜென்ம நட்சத்திர நாளில், அவரின் ஜாதகத்தில் சந்திரன் அஷ்டமத்தில் இருக்கும் நாளில், அஷ்டமி, நவமி நாளில் போன்ற நாட்களில் பலன் உரைப்பது பலிக்காமலும் போக வாய்ப்புண்டு. ஏன் எனில் அவரின் மனோபாவம் துல்லிய கணிப்புக்கு வழிவகுக்காது. சிலர் இன்னமும் அதனை மேற்கொள்கிறார்கள் அவர்களின் வாக்கு பலிதமாவது திண்ணம். வேகமான உலக வாழ்க்கை மற்றும் அவசர எண்ணங்கள் இவைகளால் இன்பம் வரும் போதும் பதைக்கிறார்கள் துன்பம் வரும் போதும் பதைக்கிறார்கள். பலபேருக்கு வழிகாட்டியாக வாழும் ஜோதிடர்கள் சில சமயம் அவர்களின் சில பிரச்னைகளுக்கு வழி தெரியாமல் திணறுவதும் உண்டு. 

  மிகப் பெரும் அறிஞர்கள், கலைத்துறை சார்ந்த நடிகர் நடிகைகள், துறவிகள், அரசியல் வாதிகள் எனப் பல பேருடன் சேர்ந்து நின்று படம் எடுத்துக்கொண்டு அவர்களின் வெற்றிக்கு தமது பரிந்துரைகள்தான் காரணம் எனச் சொல்லும் சில ஜோதிடர்களும், அவர்களின் கர்ம வினை விட்டு வைக்காது என்றால் எத்தனைப் பேருக்கு இது புரியும். வரும் காலத்தைப் பற்றி துல்லியமாக எடுத்துரைக்கும் திறமை அந்த பிரம்மாவுக்கு மட்டுமே உண்டு என முதல் பக்கத்தில் போட்டு பலன்களை கூறுவோரும் உண்டு. 

  8. கர்ம வினை மனித சிந்தனையை மறக்கத் தூண்டும். கர்ம வினையால் தூண்டப்பட்டு வலுக்கட்டாயமாக தன் வசம் இழந்து, ஜோதிடரை சரண் அடைகிறான் என்று ஜோதிடம் கூறுகிறது. கர்ம வினை அனுபவத்துக்கு வராமல் அழியாது. துயரத்தைத் தாங்கும் மனவலிமையை வளர்ப்பது ஒன்றே தான் அதற்கு சரியான பரிகாரம் ஆகும். கர்ம வினையின் தரத்தை நிர்ணயம் செய்வது யாதெனில், லக்கின ராசி, சந்திரன் நின்ற ராசி, இவ்விரு ராசிகளின் அதிபர்களாக இருக்கும் ராசி, லக்கினம், சந்திரன் இவர்களின் நவாம்சக ராசியாக இந்த ஆறு ராசிகளின் கூட்டுப் பலனில் தான் என்று ஜோதிடம் உரைக்கிறது. இந்த ஆறு நீதிபதிகளின் தீர்ப்பையே ஒரு ஜாதகரின் கர்ம வினைகளின் தரம் பற்றிக் கூறப்படும். 

  9. இப்போது நீங்கள் ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன், அதாவது, 

  1. வாழ்க்கையுடன் இணைந்தது ஜோதிடம் என்றும், 

  2. அதனை உருக்குலையாமல் பேணிகாப்பது ஜோதிடர்கள் மட்டுமல்லாது பலன் நாடுபவர்களையும் சேரும் என்றும், 

  3. அப்படிப்பட்ட இந்த ஜோதிடத்தை அடுத்த பரம்பரைக்கும் அதாவது எதிர்கால சந்ததிக்கும் எடுத்துச்செல்வது நம் கடமை என்றும், 

  4. ஜோதிடர்களை அவர்களின் திறமை இழப்பால் அதாவது பலன் காணுவோரின் அவசர எதிர்பார்ப்புக்காக அதன் தரத்தைத் தாழ்த்தி விடக்கூடாது என்றும்,

  5. ஆய்வு செய்யாமல் அல்லது ஆராய்ச்சி செய்யாமல் பலன்களை எதிர்பார்ப்பது / பெற நினைப்பது என்றும், நமக்கு சரியான வாழ்க்கைப் பாதையை விளக்கும் கூகுள் மேப் தான் ஜோதிடம் என்பதையும் அதனை எடுத்து இயம்பும் ஜோதிடர் நல்வழிகாட்டி வளம் பல பெற்று சீரடி சாய் பதம் பணிந்து வளமுடன் வாழலாம் வாருங்கள். 

  ஜோதிட ரத்னா தையூர். சி. வே. லோகநாதன்

  சந்தேகம் இருப்பின், தொடர்புக்கு: 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai