சுடச்சுட

  

  திருமயிலை கபாலித் தேரோட்டம்: சகடதோஷம் போக்கி சந்தோஷம் தரும் அற்புத திருவிழா!

  By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்  |   Published on : 16th March 2019 04:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ther2

   

  சென்னையில் மயிலாப்பூர் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில் தான். அதிலும் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா ஆரம்பித்துவிட்டால் மயிலாப்பூர் வாசிகளின் மகிழ்ச்சியைக் கேட்கவே வேண்டாம். அந்த வகையில் திருமயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் ஏழாம் நாள் உற்சவமான  திருத்தேரில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். நாளை காலை 6.00 மணிக்கு புறப்பாடாகி நான்கு மாட வீதிகளிலும் திருவீதி உலா வந்து 10.30 மணியளவில் திருக்கோயிலை வந்தடைவார் எனக் கோயில் செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் தமிழகத்தில் பல கோயில்களில் திருத்தேர் பவனி வருவது குறிப்பிடத்தக்கது.

  தேரோட்டம்

  தேரோட்டம் என்பது பல மதங்களிலும் பல தெய்வங்களின் சிலைகளையோ சிலையையோ சின்னங்களையோ இதற்காக உருவாக்கப்பட்ட தேரில் வைத்துப் பலர் சேர்ந்து ஊர்வலமாக இழுத்து வரும் ஒரு விழாவாகும்.இந்தியாவிலும், இலங்கையிலும் இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது. கோயில்களைப் பொறுத்து 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்த திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்.

  தத்துவம்

  கொடியேற்றம் முதல் தீர்த்த திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்து சைவ நூல்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. இத்திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன என்பது இந்நூல்களின் கருத்து. இதன்படி தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காக சிவன் அசுரர்களின் மூன்று நகரங்களை அழித்தான் என்னும் தொன்மக் கதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

  தேரின் சில்லிலிருந்து இறைவன் எழுந்தருளும் பீடம் வரையான பகுதி மூன்று பிரிவாகவோ ஐந்து பிரிவாகவோ வகுக்கப்பட்டு சிற்பங்கள் அமைக்கப்பட்டிருக்கும். இறைவன் காட்சிதரும் பகுதிக்கு மேலுள்ள சிகரம் தமிழகத்தில் ஆண்டு தோறும் வண்ணத்துணிகளால் அலங்கரிக்கப்பட்டு ராஜ கோபுர விமானத்தின் மறுவடிவம் போல அழகுறக்காட்சி தரும்.  

  வேதத்தில் தேர்

  கடோபநிஷதத்தில் மனிதனின் உடலைத் தேராகவும் உயிரைத் தேர்த் தலைவனாகவும் புலன்களைக் குதிரைகளாகவும் புத்தியைத் தேர்ப்பாகனாகவும் புலன் சார் விஷயங்களைத் தேரோடும் வீதியாகும் உவமித்திருக்கும் முற்றுருவகம் ஒன்றைக் காணலாம். இதுபோலவே கிரேக்க உரோம நாகரிகங்களிலும் தேர் சிறப்பிடம் பெறுவதை அவர்களின் இலக்கியங்களினூடே காண முடிகின்றது.

  வேதத்தில் சிவபெருமானுக்குரிய ருத்ரம் எனப்படும் ஸ்ரீ ருத்திரத்தில்..

  ரதிப்யோ ரதேப்யச்ச வோநமோ நமோ ரதேப்ய: ரதபதிப்யச்ச வோநமோ நமோ:

  அதாவது, "தேர்களாகவும் (ரதேப்ய:) தேர்வலவர்களாகவும் (ரதபதிப்யச்ச) உள்ள ஸ்ரீ பரமேஷ்வரனாகிய பகவானுக்கு முன்னும் பின்னும் நமஸ்காரம்," என்கிறது. இது சிவபெருமானுக்கும் தேருக்கும் உள்ள தொடர்பை விளக்குவதாக அமைந்துள்ளது.

  கபாலித்தேர்

  பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை காலை நடந்தது. கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் காலை 4.30 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளுவர். சர்வ அலங்காரத்தில் இருக்கும் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும். தொடர்ந்து காலை 6.00 மணியளவில் தேர் வடம் பிடித்தல் நடைபெறும். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து இழுப்பதைக் காணக் கண்கொள்ளாக் காட்சியாகும். மங்கள வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்கத் தேர் புறப்படும்போது கூடியிருக்கும் பக்தர்கள் 'தென்னாடுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி', 'நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க' என்றும் "கபாலி" "கபாலி" என்றும் பக்தி பரவசத்துடன் கோஷமிடுவர். தொடர்ந்து மாட வீதிகளில் திருத்தேரில் எழுந்தருளி கபாலீஸ்வரர் அருள்பாலித்தருளுவார். நாளை விடுமுறை நாள் என்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் திருமயிலை கபாலீஸ்வரர் வடம் பிடிப்பதில் ஆர்வத்துடன் கலந்துகொள்வர்.

  ஜோதிடத்தில் தேரோட்டம்

  ஜோதிடத்தில் சொகுசான வாகனங்களுக்கு காரகன் சுக்கிரன் ஆவார். தேரில் அலங்காரமும் சேர்ந்து இருப்பதால் சுக்கிரன் பொருத்தமானதாகும். சுக்கிரன் என்றாலே அழகு என்பதால்தான் "திருவாரூர் தேரழகு" என்கிறார்கள் போலும்.

  சாதாரணமாக ராஜாகளும், ஆட்சி செய்பவர்களும் செல்லும் தேர் என்றால் சுக்கிரனோடு நிறுத்திவிடலாம். ஆனால் தெய்வ திருத்தேர் என்றால் மேலும் சில கிரகங்கள் காரகமாகின்றனர்.

  உயரமான கோபுரம், கொடிமரம், திருத்தேர் போன்றவற்றின் காரகன் சூரியன் ஆகும். மேலும் நவக்கிரகங்களில் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதங்களின் சப்த ஸ்வரங்கள் குதிரையாகவும் ஏழுநாட்களைக் குறிப்பதாகவும் 12 மாதங்களை குறிக்கும் 12 ராசிகள் சக்கரமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூரியனின் நாளில் சூரியனின் அதிதேவதையான சிவபெருமான் தேரில் பவனி வருவது பொருத்தம் தானே!

  ஜோதிடத்தில் பன்னிரண்டாம் வீடு அயன சயன போக மோக்‌ஷ ஸ்தானம் எனக் கூறப்படுகிறது. காலபுருஷ தத்துவபடி மீன ராசி கால புருஷ ராசிக்கு பன்னிரண்டாம் வீடாக அமைந்துள்ளது. அந்த இடத்தில் குரு பார்வை பெற்ற சூரிய பகவான் கோசாரத்தில் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

  கால புருஷனுக்கு நான்காம் இடமாகிய கடகம் மாத்ரு ஸ்தானம் மற்றும் சுகம், வீடு வாகனம் ஆகியவற்றைப் பற்றிக் கூறும் பாவமாக அமைந்துள்ளது. கடக ராசி மாத்ரு காரகனான சந்திரனின் ஆட்சி வீடுடாகும். நாம் கருவில் இருக்கும்போதே நம்மை நமது அன்னை சுமந்துகொண்டே எல்லா இடங்களுக்கும் சென்றதால் நமது அன்னையே நமது முதல் வாகனம் ஆகும். 

  மேலும் சிறு தூர பயணத்தைக் குறிப்பது காலபுருஷனுக்கு மூன்றாம் வீடான மிதுனம் என்றும் காரக கிரகம் சந்திரன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றது. மேலும் பயணத்தின் காரகர் சந்திரன் ஆவார். தேர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து செல்வதால் சந்திரனும் காரகம் பெற்றுவிடுகிறார்.

  மேலும் தேருக்கு தெய்வீகத் தன்மையை தருபவர் குருவாகும். கோயில் கருவரை போன்ற தன்மை இறைவன் உறையும் இடத்தில் இருப்பதால் தேரின் மைய பகுதிக்கு குரு காரகன் ஆவார்.

  கால புருஷ தத்துவபடி பேருந்து போன்ற பெரிய வாகனங்களுக்கான காரக வீடு மிதுனம் என்றும் காரக கிரகம் சுக்கிரன் என்றும் பாரம்பரிய ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.

  ஊர் கூடித் தேர் இழுப்பது தேர் திருவிழா. பொது ஜெனம் என்றாலே சனைச்சரர் தான் காரகர். கபாலீஸ்வரரும் நவகிரகங்களில் சனைச்சரரையே குறிப்பிடுகிறார். மேலும் தேர் மெதுவாக ஓடும் தன்மை கொண்டதால் சனியின் காரகம் பெறுகிறது.

  மேலும் சந்திரன் கர்மகாரகர் சனைச்சர பகவானின் பூச நட்சத்திரத்தில் பயணம் செய்யும் போது அமைந்த தேரோட்டம் அனைவருக்கும் துன்பங்கள் நீக்கி ஏற்றம் தரும்விதமாக அமைந்துள்ளது. பொதுவாக சனிக்கிழமையன்று ஏதாவது ஒரு வேலையைத் தொடங்குவதென்றால் அந்தவேலை வளரும் என்று பலரும் தொடங்க யோசிப்பார்கள். மேலும் சனைச்சரன் என்றாலே தடையைத் தருபவர் என்றும் அவரை நிந்திப்பார்கள். வண்டியில் செல்லும்போது சனியின் காரம் பெற்ற ப்ரேக் வேலை செய்யவில்லை என்றால் என்னவாகும் என்பதையும், பத்து மாதத்தில் பிறக்க வேண்டிய குழந்தை மூன்று மாத்தில் பிறந்தால் என்னவாகும் என்பதையும் சிந்தித்தால் தடை மற்றும் தாமதம் கூட வாழ்க்கைக்கு அவசியம்தான் என்பதை உணர முடியும்.

  அதேநேரம் சனியின் ஆதிக்கத்தில் ஒரு நற்காரியத்தை தொடங்கினால் தர்ம கர்மாதிபதியான சனி அதைப் பலமடங்கு வளரச் செய்து புகழ்பெறச் செய்வார் என்பதுதான் உண்மை. பூச நட்சத்திர அதிபதி சனி. பூச நட்சத்திரத்தின் அதிதேவதை குரு. இவர்கள் இருவரும் இனைந்த தை பூச தினத்தில் வள்ளலார் ஆரம்பித்த அன்னதானம் இன்றும் கொடிகட்டிப் பறக்கிறது என்பது கண்கூடு. உலக சிருஷ்டியின் சிருஷ்டிகர்த்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர்கொள்ள இப்பூச நன்னாளிலே திருத்தேர் பவனி வரும் சிவசக்தி பேரருளை வழிபடுவோம்.

  சகட யோகம்

  ஒருவருடைய ஜனன ஜாதகத்தில், குருவுக்கு 6, 8, 12-ம் இடங்களில் சந்திரன் நின்றால் அது சகட யோகமாகும். சரி, இந்த "சகட யோகம்" என்பது என்ன செய்யும்?

  இந்த யோகம் இருக்கிற ஜாதகர் உண்மையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த யோகமுள்ளவர்கள் வாழ்க்கையில் ஒரே நிலையில் இருக்க மாட்டார்கள். ஒரு நாள் பார்த்தால் நல்ல 5 ஸ்டார் உணவகத்தில் சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பார்கள். திடீரென்று கையேந்தி பவனில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அதாவது வாழ்க்கையில் நல்ல சந்தோஷத்தையும், அதே நேரத்தில் கடுமையான துக்கங்களையும் ஒன்றாக அனுபவிப்பார்கள். கடுமையாகப் போராடும் குணமுடையவர்கள்.

  ஒரு மாட்டு வண்டியிலுள்ள சக்கரத்தில் மேலே உள்ள ஒரு புள்ளி கண்டிப்பாகக் கீழே வந்தே ஆக வேண்டும், அதே போலக் கீழே வந்த புள்ளி மீண்டும் மேலே போயே தீர வேண்டும். இது சுழற்சி. இதையே யாரவது மாற்ற முடியுமா? 

  அது போலத் தான் இவர்களுடைய வாழ்க்கையும் இருக்கும். பெரும்பாலும் இவர்களை வீழ்ந்து விட்டார்கள், இவர்கள் அவ்வளவு தான் என்று நினைக்கும் போது இவர்கள் விஸ்வரூபம் எடுத்து நிற்பார்கள். அதே போல் சடார் என்று கீழேயும் வீழ்ந்து விடுவார்கள்.

  தேரோட்டம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

  தேர் அசைந்து சென்று ஓரிடத்தில் நிலைத்தன்மை பெற்றுவிடுவது போல திருக்கோயில்களின் தேரோட்டம் சகட தோஷத்தை போக்கி ஏற்ற இரக்கங்களை நீக்கி நிலையான வாழ்வைத் தந்துவிடும். தற்போது விருச்சிகத்தில் நிற்கும் குருவிற்கு 9ல் சந்திரன் குரு பார்வை பெற்ற நாளில் கபாலீஸ்வரர் தேரோட்டம் பார்ப்பவர் அனைவரும் நிலையான வாழ்வைப் பெற்றுவிடுவர்.

  தேருக்கு அழிக்கும் தன்மை கொண்ட சனி காரகம் பெற்றிருப்பதால் இந்த பூச நக்ஷத்திர நாளில் நம்மிடம் இருக்கும் கன்மம், மலம், மாயை எனும் மும்மலங்களும் அழியும். சனி ஆயுள் காரகர் என்பதால் மரணத்தை அழித்து நீண்ட ஆயுளை தந்துவிடுவார்.

  - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

  Mobile 9498098786

  WhatsApp 9841595510

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai