சுடச்சுட

  

  காஞ்சிபுரத்தில் 63 நாயன்மார்கள் ஊர்வலம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

  By  காஞ்சிபுரம்,  |   Published on : 17th March 2019 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kan

  ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவில் 63 நாயன்மார்கள் ஊர்வலம் சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
   காஞ்சிபுரத்தில் உள்ள இக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில், பழைய உற்சவர் சிலைக்கு பாலாலயம், சீரமைப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
   அதைத் தொடர்ந்து, சீரமைக்கப்பட்ட பழைய உற்சவர் சிலைக்கு வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, உற்சவருக்கு பல்வேறு அபிஷேகங்களும், அலங்காரங்களும் செய்யப்பட்டு, ரிஷப வாகனத்தில் ஏலவார்குழலியம்மை உடனுறை ஏகாம்பரநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
   வெள்ளிக்கிழமை காலையில் அதிகார நந்தி, கைலாச பீட ராவணன் வாகனங்களில் உற்சவர் வீதியுலா வந்தார்.
   இதைத் தொடர்ந்து, 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் சனிக்கிழமை எழுந்தருளினர்.
   மேலும், சிறப்பு அலங்காரத்துடன் ஏகாம்பரநாதர், ஏலவாலர்குழலி, விநாயகர், முருகப் பெருமானுடன் வள்ளி தெய்வானை ஆகிய உற்சவர்களும் ராஜவீதிகளில் பவனி வந்து காட்சியளித்தனர்.
   இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
   செங்கல்பட்டில்....
   செங்கல்பட்டில் உள்ள காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திர உற்சவத்தையொட்டி சனிக்கிழமை அறுபத்து மூன்று நாயன்மார் திருவிழா நடைபெற்றது.
   விஜயநகரப் பேரரசர்கள் காலத்தில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் 10 நாள் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 10-ஆம் தேதி இரவு விநாயகர் உற்சவம் நடத்தப்பட்டது. 11-ஆம் தேதி காலை கொடியேற்றம், பவழக்கால் சப்பரம் தொடங்கப்பட்டு இரவு பகல் வேளைகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்று வ ருகிறது.
   விழாவின் 6-ஆம் நாளான சனிக்கிழமை, அறுபத்து மூன்று நாயன்மார் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, மூலவர்களான காமாட்சியம்மன் - ஏகாம்பரேஸ்வர் ஆகியோருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கும் அறுபத்து மூவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
   அதன் பின் உற்சவ மூர்த்திகள் மற்றும் அறுபத்து மூவர் வீதிப் புறப்பாடு நான்கு மாடவீதிகள் வழியாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
   விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவசண்முக பொன்மணி, தக்கார் இரா,வெங்கடேசன், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள், சிவத் தொண்டர்கள், நகர பொதுமக்கள் ஆகியோர் செய்துள்ளனர்.
   பொன்னேரியில்...
   பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ராவணேஸ்வர வாகனம் என்ற கைலாய பர்வத வாகனத்தில் ஆனந்தவல்லி தாயாருடன், அகத்தீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் கோபுர தரிசனம் நடைபெற்றது.
   இதையடுத்து பஞ்ச மூர்த்திகளுடன் மாட வீதிகளில் அகத்தீஸ்வரர் திருவீதியுலா வந்தார்.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai