திருமலையில் தெப்போற்சவம்: சீதா சமேத ஸ்ரீராமர் வலம்

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தின் முதல் நாள் மாலை சீதா சதே ஸ்ரீராமர் தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார்.
திருமலையில் தெப்போற்சவம்: சீதா சமேத ஸ்ரீராமர் வலம்

திருமலையில் வருடாந்திர தெப்போற்சவத்தின் முதல் நாள் மாலை சீதா சதே ஸ்ரீராமர் தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார்.
 திருமலையில் உள்ள திருக்குளத்தில் நீராழி மண்டபம் ஏற்படுத்தி அதில் கடந்த 1498-ஆம் ஆண்டு முதல் தெப்போற்சவம் நடத்தப்பட்டு வருவதாக வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தின்போது தெப்போற்சவத்தை தேவஸ்தானம் தவறாமல் நடத்தி வருகிறது. அதன்படி திருமலையில் சனிக்கிழமை இவ்விழா தொடங்கியது.
 திருக்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டடுக்கு தெப்பத்தில், இரவு 7 மணிக்கு சீதா சமேத ஸ்ரீராமர் 5 முறை வலம் வந்தார். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர். தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் முழுவதும் மின்விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. திருக்குளப் படிகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அமர்ந்து தெப்பத்தில் வலம் வந்த உற்சவமூர்த்திகளை வணங்கினர்.
 தெப்போற்சவத்தையொட்டி, ஏழுமலையான் கோயிலில் வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
 66,566 பேர் தரிசனம்
 திருப்பதி, மார்ச் 16: ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 66,566 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,762 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
 சனிக்கிழமை காலை நிலவரப்படி 12 காத்திருப்பு அறைகளில் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களின் தரிசனத்திற்கு 8 மணிநேரம் வரை தேவைப்பட்டது. நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பினர்.
 திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் 10,456 பக்தர்களும், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயிலில் 4,879 பக்தர்களும், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 19,678 பக்தர்களும், அப்பளாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் 2,690 பக்தர்களும், கபில தீர்த்தம் அருவிக்கரையில் உள்ள கபிலேஸ்வரர் கோயிலில் 4,123 பக்தர்களும் வெள்ளிக்கிழமை தரிசனம் செய்ததாக தேவஸ்தான மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ரவி தெரிவித்தார்.
 ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.75 கோடி
 ஏழுமலையான் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.3.75 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலில் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்தக் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி பக்தர்கள் வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.75 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ரூ.12 லட்சம் நன்கொடை
 ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பலவித வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.6 லட்சம், ஸ்ரீபாலாஜி ஆரோக்கிய வரப்பிரசாதினி அறக்கட்டளைக்கு ரூ.4 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் என ரூ.12 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com