திருமலையில் தெப்போற்சவம்: ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் வலம்

ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார்.
திருமலையில் தெப்போற்சவம்: ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் வலம்

ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் தெப்பத்தில் 5 முறை வலம் வந்தார்.
 திருமலையில் உள்ள இக்கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வருடாந்திர தெப்போற்சவம் சனிக்கிழமை முதல் நடந்து வருகிறது. அதன் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு, திருக்குளத்தில் அமைக்கப்பட்ட இரண்டடுக்கு தெப்பத்தில் ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணர் 5 முறை வலம் வந்தார்.
 தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் முழுவதும் மின்விளக்கு மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. குளத்தின் படிகளில் ஏராளமான பக்தர்கள் அமர்ந்து தெப்பத்தில் வலம் வந்த உற்சவர்களுக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். தெப்பத்தில் நாகஸ்வரம் இசைக்கப்பட்டதோடு, வேதபாராயணம் செய்யப்பட்டு, பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. தெப்போற்சவத்தை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில் வசந்தோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
 ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.12 கோடி
 திருப்பதி, மார்ச் 17: ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.3.12 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
 ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி, சனிக்கிழமை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்துக்கு ரூ.3.12 கோடி கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ரூ.8 லட்சம் நன்கொடை: ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடை அளித்து வருகின்றனர். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை அளித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.5 லட்சம், உயிர்காக்கும் மருத்துவ அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், கல்விதான அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம் என ரூ.8 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.
 விகாரி ஆண்டுக்கான பஞ்சாங்கம் வெளியீடு
 திருப்பதி, மார்ச் 17: திருப்பதி தேவஸ்தானம், விகாரி ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை வெளியிட்டுள்ளது.
 ஆண்டுதோறும் புதிய தெலுங்கு மற்றும் தமிழ் ஆண்டுக்கான பஞ்சாங்கங்களை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி விகாரி என்ற தெலுங்குப் புத்தாண்டு பிறக்க உள்ளது. அதற்கான பஞ்சாங்கத்தை தேவஸ்தானம் சனிக்கிழமை மாலை வருடாந்திர தெப்போற்சவத்தின்போது வெளியிட்டது. இந்தப் பஞ்சாங்கம் தேவஸ்தானத்தின் ஆஸ்தான சித்தாந்தி வெங்கடகிருஷ்ண பூர்ணபிரசாத்தால் வடிவமைக்கப்பட்டு, ஆகம பண்டிதரான வேதாந்தம் விஷ்ணு பட்டாச்சார்யலுவால் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. ரூ.55 விலை கொண்ட இந்தப் பஞ்சாங்கம், நாடு முழுவதும் உள்ள தேவஸ்தான விசாரணை மையங்களில் கிடைக்கும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com