பங்குனி உத்திரம்: களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற ஒரு அற்புத வாய்ப்பு!

இன்று பல பெற்றோர்களின் பெருங்கவலை தங்கள் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நடைபெறவில்லை..
பங்குனி உத்திரம்: களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற ஒரு அற்புத வாய்ப்பு!

இன்று பல பெற்றோர்களின் பெருங்கவலை தங்கள் மகனுக்கோ மகளுக்கோ திருமணம் நடைபெறவில்லை என்பதேயாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் என காத்து இருப்பவர்கள் பலர். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப்போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளம் தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.

தள்ளித் தள்ளிப் போட்டுவிட்டு திருமணம் செய்துகொள்ள முன்வரும்போது, அவர்கள் எதிர்பார்ப்பதுபோல் வாழ்க்கை அமைவதில்லை. காலங்கடந்து திருமணம் செய்துகொள்ளும் தம்பதியினர், மீதமுள்ள காலத்தை வளமாக அமைத்துக்கொள்ள அவசரம் காட்டுகிறார்கள். இருவரும் தங்களுடைய வருமானம் முழுவதும் எதிர்கால சேமிப்பாக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அப்போது பெற்றோருக்கும், உறவுகளுக்கும் செய்யும் கடமைகளைக்கூடப் பெரிய பாரமாக நினைத்து விடுகிறார்கள். கணவர் தன் பெற்றோரைப் பராமரிப்பது மனைவிக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். மனைவி தன் பெற்றோரை பராமரிப்பது, கணவருக்கு வெட்டிச் செலவாகத் தெரியும். அதுவே தர்க்கம் உருவாகக் காரணமாகிவிடும்.

காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், திருமணத்திற்கு முன்பு வெகுகாலம் சுதந்திரமாக வாழ்ந்து பழகிவிட்ட காரணத்தால் திடீரென்று ஒருவர் வாழ்க்கைக்குள் வந்து, தன்னை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் தம்பதியினரில் ஒருவர் எடுக்கும் முடிவை மற்றவர் எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. பெரும்பாலும் அவர்கள் தங்கள் பக்க நியாயத்தை முரட்டுத்தனமாக எடுத்துச் சொல்வார்கள்.

திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. குறிப்பிட்ட பருவ வயதை அடைந்தவுடன் ஆண், பெண் இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவது கடமை மட்டும் அல்லாமல் இயற்கை நியதியும்கூட. மண வாழ்க்கை சிலருக்கு எளிதாகக் கூடி வந்துவிடும். சிலருக்கு அதிக முயற்சிக்குப் பிறகு கூடிவரும். ஒரு சிலருக்கு கிரக தோஷ அமைப்பின் காரணமாக தடைகள், இடையூறுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

திருமண விஷயத்தில் ஜாதக கிரக அமைப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. சில கிரக சேர்க்கைகள், திசா புக்திகள் கோச்சார நிலை போன்றவைகளால் திருமணம் தாமதமாகிறது. இவை காரணமாக திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? இது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றிச் சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.

திருமணத் தடை ஏற்படுத்தும் தோஷங்கள்

செவ்வாய் தோஷம்

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம். செவ்வாய்க்கு பல்வேறு காரணங்களால் தோஷ நிவர்த்தி உண்டாகும். அவ்வாறு தோஷ நிவர்த்தி பெற்றாலும்கூட அதேபோல் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகத்தை மட்டுமே சேர்க்க வேண்டும்.

ராகு - கேது தோஷம்

லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷ அமைப்பு உள்ள ஜாதகங்களை அதே சம தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்ப்பதே தோஷ நிவர்த்திக்கு பரிகாரமாகும். உதாரணமாக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு அல்லது கேது உள்ள ஜாதகத்தை சேர்ப்பதே பொருத்தமாகும்.

மாங்கல்ய தோஷம்

இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும், அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இதில் 8&ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தால் தோஷ நிவர்த்தி. 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.

சூரிய தோஷம்

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்று அமைப்புடைய ஜாதகத்துடன் சேர்ப்பதால் தோஷம் நிவர்த்தியாகிறது. சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்கும்போது இருதார யோகமும், வீடு தள்ளி  42 பாகைக்கு மேல் இடைவெளி பெற்று நிற்பது திருமணம் ஆகா நிலையையும் ஏற்படுத்துகிறது. 

களத்திர தோஷம்

திருமணம் தாமதம் ஆவதற்கு காரணமான களத்திரதோஷம் தரக்கூடிய சில கிரகஅமைப்புகள் உள்ளன. இவை உங்கள் ஜாதகத்தில் இருந்தால் திருமணம் நடக்க தாமதம் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும். இந்த அமைப்பால் பல சாதகமான பலன்கள் இருந்தாலும் திருமண சுணக்கம் ஏற்படும். அதேபோல தோஷமுள்ள ஜாதகம் பார்த்து இணைக்க வேண்டும். மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீசம் அடைவது, பாபகர்தாரி யோகம் பெறுவது,கேதுவுடன் சேர்ந்து நிற்பது, கேது சாரம் பெறுவது போன்றவையும் களத்திர தோஷமே ஆகும். ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் அமர்ந்தால் கட்டாயம் களத்திர தோஷத்தை ஏற்படுத்தும்.

புணர்ப்பு தோஷம்

ஓருவருடைய ஜாதகத்தில் மனோ காரகன் சந்திரனும் கர்ம காரகன் சனியும் சேர்க்கை பெற்று நிற்பது, பரிவர்தனை பெறுவது, சார பரிவர்தனை பெறுவது, சம சப்தம பார்வை பெறுவது போன்றவை திருமண வாழ்வில் பிரச்னை ஏற்படுத்தும் தோஷமாகும். இன்றைய சூழ்நிலையில் பெண்களை விட ஆண்களே திருமணத் தடையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நிலை நிலவுகிறது. முக்கியமாக திருமணத்திற்குப் பெண்கள் குறைந்து வருவதால் ஆண்களின் நிலை பரிதாபமாகி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் பல குடும்பங்களில் வம்ச விருத்தி என்பதே இல்லாத நிலை ஏற்படும்.

இதுபோன்ற திருமண தோஷங்களுக்கு பல பரிகாரங்கள் செய்தும் நன்மை ஏற்படவில்லையே என என்று ஏங்குபவர்களுக்காகவே தனது அபய ஹஸ்தத்தை காட்டி அருள் புரிகிறாள் ஸ்ரீ கல்யாண காமாட்சி.

திருமண வரம் தரும் வழிபாட்டு ஸ்தலங்கள்

மாங்கல்ய மகரிஷி. பெயரிலேயே மாங்கல்யம் என்ற மங்கலச் சொல்லை வைத்திருக்கும் இவர் உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளைத் தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு. திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளை அச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது. திருமணத்தில் மாங்கல்ய தாரண சுப முகூர்த்த நேரத்தை அமிர்த நேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

உத்திர நக்ஷத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன. மாங்கல்ய பலம் தரும் பிரஹஸ்பதி எனும் தேவகுரு பிறந்த நக்ஷத்திரம் எனும் சிறப்பை பெற்றது உத்திரம் நக்ஷத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நாளில் தான் லட்சுமிதாயார் பார்க்கவ மகரிஷியின் மகளாக பூமியில் பார்கவி என்னும் பெயரில் அவரித்தரித்தாள். கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் பங்குனி உத்திர நாளில் தான் நடந்தது. இந்த திருமணக் கோவலத்தைத் தான் சித்திரை விசுவன்று பொதிகையில் அகத்தியருக்கு தரிசனமாக்கினர். ராமன் சீதாதேவியையும், லட்சுமணன் ஊர்மிளாவையும், பரதன் மாண்டவியையும், சத்ருக்கணன் சுருதகீர்த்தியையும் கைப்பிடித்த நாளும் இது தான். முருகப்பெருமான் தெய்வானையை மணம் செய்த நாளும் இதுவே. ஹரிஹர புத்திரனான தர்ம சாஸ்தா எனப்படும் ஸ்ரீ ஐய்யப்பனும் பூர்ண புஷ்களாம்பாளை கரம் பிடித்தனர்.

உத்திரம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றும் மாங்கல்ய பலம் வேண்டுபவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, உத்திர நக்ஷத்திர நாளிலோ அல்லது தங்களது ஜென்ம நக்ஷத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய உத்தம ஸ்தலம் திருச்சி மாவட்டம் இடையாற்று மங்கலம் மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இக்கோயிலுக்குச் செல்ல திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்றுமங்கலத்திற்கு ஆட்டோவில் செல்லலாம். திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டிலிருந்து டவுன் பஸ் வசதி உள்ளது.திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குப் பிரார்த்தனை செய்தவுடன் விரைவில் திருமணம் கூடுகிறது. திருமணம் நிச்சயம் ஆனவுடன் குலதெய்வம் கோயிலுக்குச் சென்று, பின் இங்கு வந்து மாங்கல்ய மகரிஷியிடம் பத்திரிக்கை வைத்து எங்களது கல்யாணத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுங்கள் என வேண்டுகின்றனர். கல்யாணம் நடந்தவுடன் தம்பதி சமேதராக வந்து நன்றிக்கடன் செலுத்துகின்றனர்.

1. சுக்கிர ஸ்தலமான ஸ்ரீ ரங்கத்திற்கு அடிக்கடி வெள்ளிக்கிழமைகளில் சென்று தரிசித்து வர மாங்கல்ய தோஷங்கள் விலகும். முக்கியமாக பங்குனி உத்திர அரங்கன் சேர்த்தி நாளில் திருமண பாக்கியம் அமையாமல் இருப்பவர்கள் தகுந்த கணவன் மனைவியுடன் கூடவும், கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ மற்றொருவரோடு முறையற்ற தொடர்புகள் இருந்தால் அதிலிருந்து விலகவும், சண்டை போட்டுப் பிரிந்து வாழும் கணவன் மனைவி கூடவும், வேலை காரணமாக கணவனும் மனைவியும் படுக்கையில் இணைய முடியாமல் தவிப்பவர்கள் கூடவும், வியாபாரத்தில் பிரச்னை தரும் கூட்டாளிகள் இணக்கமாகவும், அனைத்து பகைவர்களும் நட்பு பாராட்ட விரும்புபவர்களும் அன்னை ஆண்டாளை வணங்குவது சிறப்பாகும்.

2. பஞ்ச மங்களத்தலம் என்று சிறப்பித்துப் போற்றப்படுவது திருமங்கலக்குடி திருத்தலம். ஊரின் பெயர் மங்கலக்குடி, அம்பாள் பெயர் மங்களாம்பிகை, இக்கோவில் விமானம் மங்கள விமானம், இத்தல விநாயகரின் பெயர் மங்கள விநாயகர், இத்தல தீர்த்தம் மங்கள தீர்த்தம் ஆகிய ஐந்தும் இத்தலத்தில் அமைந்திருப்பதாலேயே இந்தத் திருப்பெயர் ஏற்பட்டது. கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்து இறைவியை வழிபட, திருமணத் தடை நீங்கும், மாங்கல்ய பலம் நீடிக்கும், ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் கிட்டும் என்பது பக்தர்களின் அனுபவம்.

3. பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் பைரவரை வணங்குவதால் பூர நட்சத்திர அதிதேவதையான பார்வதியின் அருளும் கிடைக்கும். பைரவருக்கும் துர்க்கைக்கும் அஷ்டமி திதி உகந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தலத்து பைரவரை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களிலும் தேய்பிறை அஷ்டமி திதியிலும், பூர நக்ஷத்திர நாளிலும் வணங்கி வரத் திருமணத் தடை, மணவாழ்வில் கணவன் மனைவிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள், திருமணமாகியும் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமின்மை, தாம்பத்திய சுகம் ஆகியவை கிட்டும் எனக் கூறப்படுகின்றது.

4. செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனை வழிப்பட தாலி தோஷங்கள் நீங்கும்.

5. வீட்டில் வெள்ளிக்கிழமைகளில் மஹாலஷ்மி பூஜை செய்வது மற்றும் சுமங்கலி பூஜை செய்வது ஆகியவை மாங்கல்ய பலம் தரும் வழிபாட்டு முறைகளாகும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786
WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com