பழனியில் பங்குனி உத்திர திருத்தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டத்தில்  லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு வடம்
பழனியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டம். (உள்படம்) தேரில் சர்வ அலங்காரத்தில் வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமி.
பழனியில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டம். (உள்படம்) தேரில் சர்வ அலங்காரத்தில் வள்ளி, தேவசேனா சமேதராக முத்துக்குமாரசாமி.


பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை நடைபெற்ற திருத்தேரோட்டத்தில்  லட்சக்கணக்கான  பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர். 
பழனி திருஆவினன்குடி கோயிலில் கடந்த மார்ச் 15-ஆம் தேதி  கொடியேற்றத்துடன் பங்குனி உத்திரத் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறும் விழாவில், வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி தந்த சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சன்னதி வீதி, கிரி வீதிகளில் உலா வந்தார்.
கடந்த புதன்கிழமை இரவு திருக்கல்யாணம் மற்றும் வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை முக்கிய விழாவான திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு பழனி சண்முக நதியில் தீர்த்தவாரி உற்சவமும், தீர்த்தம் வழங்குதலும் நடைபெற்றது. காலை 9 மணிக்கு சுவாமி தந்தப் பல்லக்கில் எழுந்தருளி திருஆவினன்குடி வந்து சேர்ந்தார். தொடர்ந்து, பகல் 11 மணிக்கு மேல் சிறப்பு  பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி தேரில் ஏற்றம் செய்யப்பட்டார்.  மாலை 4.30 மணியளவில் திருத்தேரில் தம்பதி சமேத சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது. 
அதன்பின்னர்,   பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு கிரி வீதிகளில் ஆடி அசைந்து உலா வந்தது. தேரை, பழனி கோயில் யானை கஸ்தூரி பின்னேயிருந்து தள்ளியது. 
 இரவு 9 மணிக்கு தந்தப் பல்லக்கில் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பால், இளநீர், கரும்பு காவடி எடுத்தும், கொடுமுடி தீர்த்தம் தரித்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக வந்திருந்தனர். சேவல்கள் நேர்ச்சை செலுத்தப்பட்டன.
இதில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி, பழனி அடிவாரம் திருஆவின்குடி கோயிலிலும், மலைக் கோயிலிலும் சிறப்பு மலர் அலங்காரம், பூப்பந்தல் போடப்பட்டிருந்தது.   
வெள்ளிக்கிழமை வையாபுரி கண்மாயில் வாணவேடிக்கை, தங்கக் குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு ஆகியன நடைபெறுகின்றன. ஞாயிற்றுக்கிழமை திருஆவினன்குடி கோயிலில் கொடியிறக்கப்பட்டு பங்குனி உத்திர திருவிழா நிறைவு பெறுகிறது.
தேரோட்ட நிகழ்ச்சியில், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொறுப்பு) செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபாலு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com