பங்குனி உத்திரம்: சிவன், பெருமாள் கோயில்களில் திருக்கல்யாணம்

ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருக்கண்டேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு
பங்குனி உத்திரம்: சிவன், பெருமாள் கோயில்களில் திருக்கல்யாணம்


ராணிப்பேட்டையை அடுத்த தெங்கால் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருக்கண்டேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது.
நீவா நதி எனும் பொன்னை ஆறும், பாலாறும் சங்கமிக்கும் படுகையில் தொன்மை வாய்ந்த திரிபுரசுந்தரி உடனுறை திருக்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இது சிவபெருமான், ராஜரிஷி மற்றும் சப்த ரிஷிகளுக்கு கல்யாணக் கோலத்துடன் தரிசனம் தந்த புராண - புராதனப் பெருமைகள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் பராந்தக சோழ மன்னரால் திருப்பணிகள் செய்து, புனரமைத்த பெருமைக்கு உரியது.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, கல்யாண உற்சவம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. 
இந்த விழாவையொட்டி, மாலை 3 மணியளவில் சிறப்பு அபிஷேக, அலங்காரமும், சீர்வரிசை ஊர்வலமும் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து இரவு 7.30 மணியளவில் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மணப்பந்தலில் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் மற்றும் சிவனுக்குப் பிரியமான பூதகண வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கைகளுடன் திரிபுரசுந்தரி உடனுறை திருக்கண்டேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், வளையல் அருட்பிரசாதமும், திருமண விருந்தும் அளிக்கப்பட்டது.
இதையடுத்து இரவு கல்யாணக் கோல சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் தெங்கால்  மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பெண்கள், பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.
ஆற்காடு, திமிரி கோயில்களில்...
ஆற்காடு, திமிரி பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆற்காடு தோப்புகானா பகுதியில் உள்ள அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரர் கோயிலில் கடந்த 10ஆம் தேதி  பிரம்மோற்சவம் தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் உற்சவர் வீதி உலா நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு, அலங்கரிக்கப்பட்ட உற்சவர்களான அன்னபூரணிஅம்மனுக்கும், கங்காதர ஈஸ்வருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் திருப்பணிக் குழுவினர், உபயதாரர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆற்காடு பாலாற்றங்கரையில் உள்ள பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த 10ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்கியது. இக்கோயில் மூலவருக்கு வியாழக்கிழமை சிறப்பு திருமஞ்சனமும் இரவு உற்சவருக்கு திருக்கல்யாணமும் நடைபெற்றன. திமிரி தனுமத்தியம்மன் சமேத சோமநாத ஈஸ்வரர் கோயிலில் கடந்த 12ஆம்தேதி  பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 18ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் மூலவர் சோமநாத ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடத்தப்பட்டன. இரவில், அலங்கரிக்கப்பட்ட உற்சவர்களான தனுமத்தியம்மனுக்கும், சோமநாத ஈஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூடுவாஞ்சேரி கோயிலில்...
கூடுவாஞ்சேரி சீனிவாசபுரத்தில் உள்ள சீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 
இக்கோயிலில் மூலவர்களான சீனிவாசப் பெருமாள், பத்மாவதி தாயார் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை வியாழக்கிழமை நடத்தப்பட்டன. உற்சவ மூர்த்திகளான பத்மாவதித் தாயார், ஆண்டாள் நாச்சியார், வெங்கடேசப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தையொட்டி பட்டு வஸ்திரம், இனிப்பு, காரம், பழ வகைகள், திருக்கல்யாணத்திற்கான அனைத்து பொருள்களுடன் யாக குண்ட பூஜை நடைபெற்றது. அத்துடன் தொடங்கிய சிறப்பு பூஜையில் மந்திரங்கள், மங்கல இசை முழங்க பெருமாளுக்கும் ஸ்ரீதேவி, பூதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. 
திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளின் கல்யாணக் கோலத்தை தரிசித்தனர். திருக்கல்யாண உற்வசவத்தையொட்டி பக்தர்களுக்கு சுவாமிபிரசாதம் வழங்கப்பட்டதோடு, கல்யாண விருந்தும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீனிவாச கைங்கர்ய சபா குழுவினர்  மற்றும் சேவார்த்திகள் செய்திருந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com