வேளிமலை குமாரசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்:  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலில்..
வேளிமலை குமாரசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்:  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி கோயிலில் ஸ்ரீமுருகபெருமான்-ஸ்ரீவள்ளியம்மை திருக்கல்யாண வைபவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவில் சுவாமி ஸ்ரீவள்ளியம்மைக்கு காப்புகட்டும்  வைபவம் நடைபெற்றது. திங்கள்கிழமை காலையில் நடைதிறக்கப்பட்டு, நித்திய பூஜை, அலங்கார தீபாரதனை நடைபெற்றது. 

முன்னதாக பல்லக்கில் ஸ்ரீவள்ளியம்மை-முருகன் வேளிமலையிலுள்ள கல்யாண மண்டபத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. நண்பகலில் குறவர் சமுதாயம், பல்வேறு  உபயதாரர்கள் சார்பில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் சுவாமி திருக்கல்யாண வைபவத்திற்காக மலையில் உள்ள திருமண மண்டபத்தில் பூ பல்லக்கில் எழுந்தருளினார். 

திருமணம் செய்வதற்காக வள்ளியம்மையை மலையில் இருந்து  முருகபெருமான் அழைத்து வரும்போது அதை எதிர்க்கும் முகமாக குறவர்கள் போரிடுவது குறவர் படுகளம் ஆகும். இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும்  திருக்கல்யாணத்தின்போது குறவர் சமுதாயத்தின் சார்பில் நடத்தப்படுகிறது.

நிகழாண்டும் குறவர் சமுதாயத்தினர் ஆயுதங்கள் தாங்கி மலையில் இருந்து வரும்போது வழியெல்லாம்  போரிட்டு வரும் நிகழ்வு நடைபெற்றது. இறுதியாக முருகபெருமானிடம் அவர்கள்  சரணாகதி அடைவதுடன் குறவர் படுகளம் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியை காண, குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

பின்னர், சுவாமி-வள்ளியம்மை கோயில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளுதல், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சுவாமிக்கு தாம்பூலம் வைத்து சீர்வரிசை வழங்கிய பின்னர் ரத வீதிகள் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபத்தில் சுவாமி-வள்ளியம்மை அமர ஹோமங்கள் வளர்த்து, வேத மந்திரங்கள், மேள தாளங்கள் முழங்க  பெண்களின் குலவை சப்தத்துடன் ஸ்ரீமுருகபெருமான்-ஸ்ரீவள்ளியம்மை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம், குறவர் சமுதாயம் சார்பில் தேன், தினை மாவு, வேல்முருகன் சேவா சங்கம் சார்பில்  திருமாங்கல்ய பிரசாதம்  ஆகியவை வழங்கப்பட்டன. 

இதில், தேவசம்போர்டு இணைஆணையர் அன்புமணி,  கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர்கள் மோகன குமார், சிவகுமார், நாகர்கோவில் வள்ளலார் பேரவைத் தலைவர் பத்மேந்திரா சுவாமிகள், முன்னாள்  விழாக்குழுத் தலைவர் குமரி ப. ரமேஷ், பேட்ரன் பிரசாத், விழாக்குழு நிர்வாகிகள், வேல்முருகன் சேவா சங்கத் தலைவர்  டாக்டர் சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவிழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட்டன. குமாரகோவில் சந்திப்பில் இருந்து குமாரகோவில் வரை காவி துணியால் வளைவுகளும், காவி கொடிகளும், வண்ண தோரணங்களும் கட்டப்பட்டிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com