Enable Javscript for better performance
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் பற்றி மருத்துவ ஜோதிடம் கூறும் உண்மைகள்!- Dinamani

சுடச்சுட

  

  நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் பற்றி மருத்துவ ஜோதிடம் கூறும் உண்மைகள்!

  By - ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன்   |   Published on : 27th March 2019 03:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sidhar

   

  1. ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய விஞ்ஞானம், அதனுள் மனித சமுதாயத்துக்கான பல விஷயங்களை அதிசயிக்கத்தக்க வகையில் கொண்டுள்ளது. ஜோதிடம் ஒரு அற்புதம், பலன்களைக் காண இது பல முறைகளைக் கொண்டுள்ளது.

  வேத கால ஜோதிட முறை (பாரம்பரிய முறை), நாடி ஜோதிட முறை, வாஸ்து எனும் கட்டிடக்கலை சம்பந்தமான கோட்பாடுகள், பிரசன்ன ஜோதிட முறை, கைரேகை முறை, இன்னும் பல முறைகள்.

  ஒவ்வொன்றும் அதற்கேற்றாற்போல விதிகள் / விதிவிலக்குகளைக் கொண்டு விளங்குகிறது. அனைத்திலும் பாரம்பரிய ஜோதிட முறையே தலையாயதாய் உள்ளது. இதன் வழியில் காணப் பொறுமையும், துல்லியமான பிறப்பு குறிப்புகளும் நல்ல ஜோதிட அனுபவமும், நிச்சயம் தேவை. ஜோதிடத்தின் மொத்த திட்டமே ஒரு கொடுக்கப்பட்ட ஜனனகால ஜாதகக் கட்டத்தைப் பகுப்பாய்வு செய்து பல்வேறு வகையான பலன்களை எடுத்துரைப்பதே ஆகும். 

  தற்போதுள்ள, நவீன விஞ்ஞான யுகத்திலும், சில அறியமுடியாத தகவல்களைப் பலவித பரிணாமங்களைக் கொண்டு பலரும் பின்பற்றக் கூடிய விதத்தில் பரிமளிக்கக் கூடியதாக உள்ள ஒரே விஞ்ஞானம், ஜோதிடம் ஆகும். 

  2. பாரம்பரிய மருத்துவத்துறையில் ஜோதிடம் ஒரு அங்கமாய் இருந்தது. அப்போதெல்லாம் ஒரு ஜோதிடரே ஒரு நல்ல வைத்தியராகவும் இருந்திருந்ததால். ஒருவரின் உடலில் உள்ள வாத, பித்த, கபக் கூறுகளை ஒரு ஜனன கால ஜாதகத்தைக் கொண்டே ஜாதகரின் நோயைக் கண்டறியவும் அதற்கேற்ப மருந்துகளை அறிவதோடு அதனைக் கொண்டு தீராத வியாதிக்கும் சரிப்படுத்தும் தகுதி படைத்தவராக மருத்துவர்களாய் விளங்கினர் என்றால் அது மிகையாகாது. 

  ஆயுர்வேத சிகிச்சை முறையில் ஒரு வைத்தியரானவர் கோள்களின் தன்மைகளை அறிந்திருந்ததோடு, அதற்கான சிகிச்சை முறைகளை ஆளுமைப்படுத்தவும் அறிந்திருந்தனர். தீ, நிலம், காற்று, நீர் மற்றும் ஆகாயம் போன்ற பஞ்சபூத தத்துவங்களைக் கொண்டு விளங்கிய கிரகங்களைப் பற்றியும் தெரிந்திருந்தனர். 

  3. ஒருவரின் நாக்கு பேசுவதற்கே என்றாலும், ஒரு சிலர் பேசுவதை தவிர்த்து பிரச்னையில் தாம் சிக்காமலும், ஒரு சிலர் பல நாக்குகள் உள்ளவர் போன்றும் சிக்கலில் மாட்டிக் கொண்டும் இருப்பர். அதேபோல் சிலரின் நோய் வந்தது போல் வந்து உடனடியாக நீங்கும் தன்மைப் பெற்றிருக்கும். ஆனால் வேறு சிலருக்கோ நோய் தாக்குவதிலிருந்து துவங்கி வாழ்நாள் முழுவதும் தொல்லை தருவதும் உண்டு. 

  இவை அனைத்தையும் மருத்துவ ஜோதிடத்தினால் நன்கு அறிய முடியும் என்றால் அது ஆச்சரியம் தானே. பண்டைக்கால முனிவர்களும், ரிஷிகளும் இவற்றை நன்கு அறிந்து அதனை விளக்கிக் கூறப்பட்டதே ஜோதிடக்கலை எனும் விஞ்ஞானம் ஆகும். எந்த கிரக இணைவு எந்த நோய் தாக்கக்கூடும் என்பதனையும், எந்த தசா புத்தி காலத்தில் எந்தவித நோய் தாக்கக்கூடும் என்பதனையும் அவர்கள் விளக்கமாகக் கூறுவதே மருத்துவ ஜோதிடம். மருத்துவமனைகளில் ஒரு நோய் கண்டறிய பல்வேறு மருத்துவ உபகரணங்களைப் பயன்படுத்தி பின்னர் நோயின் தன்மையை அறிவது போல் சில மேலை நாடுகளில் ஜோதிடம் சார்ந்த ஒரு குழுவை வைத்து ஒரு நோயாளிக்கு (ஜாதகருக்கு) ஏற்படும் / தாக்கும் நோய்களை முதலிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை முறைகளைக் கையாள்கிறார்கள். நம் நாட்டிலும் அதுபோல் வெகு சீக்கிரத்தில் வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. 

  4. மருத்துவ ரீதியான சோதனைகள் பல செய்து மற்றும் நோய் இயல் பரிசோதனைகள் செய்து காலம் கடந்து காணும் நோய் தன்மையை வெறும் கிரக இணைவுகளாலும் தொடர்புகளும் மட்டுமே அறிந்து கூறிய நமது முன்னோர்களான ரிஷிகளும், முனிவர்களும் தெய்வத்திற்கு நிகரானவர்கள் என்றால் அது மிகவும் உகந்ததே, ஒரு ஜனன கால ஜாதகத்தைக் கொண்டே ஆண்மை தன்மை இல்லாததையும், குழந்தை பாக்கியம் மறுக்கப்பட்டிருப்பதையும், மலட்டுத் தன்மையைப் பற்றியும், அறிவதென்பது, உண்மையிலேயே மருத்துவ ஜோதிடத்திற்கு இணை வேறெதுவும் இல்லை என்பதே முடிவாகிறது. 

  5. உதாரணத்திற்கு, ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவருக்கான சாத்தியமான நோய்களை முதலில் பார்ப்போம். ரோகிணியில் பிறந்தவர்களுக்கு, தொண்டை அடைப்பு அல்லது மூல நோய் பாதிப்புக்கு ஆளாவார்கள். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரத்த சோகை நோய் தாக்கும். சுவாதியில் பிறந்தவர்க்கு, கண் நோய் பாதிப்புக்குள்ளாவர். உத்திரட்டாதியில் பிறந்தவர்களுக்கு உடல் சோர்வால் ஏற்படும் நோய்கள் தாக்க வாய்ப்பு. ரேவதியில் பிறந்தவர்களுக்கு, உடலில் கட்டிகளும், கொப்புளங்களும் தாக்க வாய்ப்பு. 

  6. ஜோதிடம் மூலம் நோய்களைக் கண்டறிவதற்குச் செய்யும் ஆய்வுகள்

  1) ஒருவரின் ஜனன கால, கிரகங்களுடன் கூடிய ராசி சக்கரம்.

  2) அவற்றின் மீதான அம்சங்கள் 

  3) கிரகங்கள் ஆக்கிரமிப்பு செய்யும் நட்சத்திரங்கள்.

  4) ஒவ்வொரு ராசியின் ஆய்வுகள்

  5) ராசியின் தத்துவங்கள் 

  6) ஒவ்வொரு கிரகத்தின் இயற்கை தத்துவங்கள், அதாவது 

  வாயு தத்துவம்: தொடு உணர்வு, தோல், கைகள், உடல் இயக்கம் போன்றவைகள். இதனைக் குறிப்பது சனி கிரகமாகும். 

  நில தத்துவம்: நுகரும் தன்மை, தசைகள் மற்றும் நரம்பு மண்டலம். இதனைக் குறிப்பது புதன் கிரகமாகும். 

  ஆகாய தத்துவம்: காது, சப்தம், மின்னல் போன்றவை. இதனைக் குறிப்பது குரு கிரகமாகும்.

  நீர் தத்துவம்: உடலில் உற்பத்தி ஆகும், அனைத்துவித சாறுகள், ரத்தம், சிறுநீர், சளி போன்றவைகள். இதனைக் குறிப்பது சுக்கிரன் கிரகமாகும். 

  7. ஒருவரின் உடல் நோய் பற்றி, பார்த்தவுடனே அறிய ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், 6, 8, 12-ம் இடங்களை ஆய்வு செய்தாலே போதும். அத்துடன் கிரக இணைவுகளால் ஏற்படும் யோகங்களும், இதனைத் தெரிவிக்கும். ஒரு சிறு நோய் தாக்குதலுக்கு ஜாதகர் ஆளாவாரா அல்லது நாள்பட்ட வியாதிகளுக்கு ஆளாவாரா என அறியலாம்.

  8. உடலின் / தேகத்துக்கான அதிபதியாகிய லக்கின அதிபதி, ராசி அதிபதியானவர்கள், ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில், 3, 6, 8, 12 அல்லது நீச்சம் அடைந்திருக்கும் அல்லது அஸ்தங்கம் அடைந்திருக்கும் வீட்டில் இருப்பின் அந்த ஜாதகர் பலவீனமான ஜாதகராக இருக்கவும், நோய் தாக்கத்திற்கு ஆளாகவும் வாய்ப்பு அதிகம் எனலாம். 

  9. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ஆறாம் அதிபதி பாபராகி அவர் 1, 8 அல்லது 10-ஆம் இடத்தில் அமர்ந்திருந்தால் அவருக்கு தடிப்பு அல்லது கொப்புளங்கள் வரும். இவை அனைத்தும் அந்த பாப கிரகத்தின் தசை, புத்தி காலங்களில் நிச்சயம் சம்பவிக்கும். ஏதாவது ஒரு பாப கிரக ராசிகளான மேஷம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம் இவைகளில் ஏதேனும் ஒரு ராசி ஒரு ஜாதகருக்கு, லக்கினமாக வருமாயின், மேலும் இந்த ஜென்ம லக்கினங்களை பாபர்களின் பார்வை இருக்குமாயின் நிச்சயம் அவரின் தலையில் இளவயதுகளிலேயே வழுக்கை விழும். 

  10. தேக சௌக்கிய யோகம் யாருக்கு?

  ஒருவரின் ஜாதகத்தில், லக்கின அதிபதியோ, குருவோ, சுக்கிரனோ கேந்திர இடம் என சொல்லப்படும் 1, 4, 7, 10-ம் இடங்களில் இருப்பின் அந்த ஜாதகர், மனம், உடல் மற்றும் உளவியல் ரீதியாக மிக்க மகிழ்வுடனும், நீண்ட ஆயுளுடனும், நோய் தாக்குதலும் இன்றி வாழ்வார் எனலாம். இவை அனைத்தும் பொதுவே, இவற்றை பாப கிரகங்களின் பார்வை மற்றும் பாதகாதிபதி தொடர்பு ஏற்படின் நிலை மாறுபடும். 

  11. தேக கஷ்ட யோகம் யாருக்கு?

  மனம், உடல் மற்றும் உளவியல் ரீதியாக உள்ள நிலையை ஒன்றையோ அல்லது மூன்றினையோ பாதிக்கும் நிலைக்கு ஒருவரின் ஜாதகத்தில் இருக்குமாயின் அந்த ஜாதகர் மன மகிழ்வை இழப்பதோடு, மகிழ்வு பெறும் வாய்ப்பையும் இழப்பர். 

  12. சர்க்கரை நோய் யாருக்கு?  

  6-ம் அதிபதி சனியாகி, அவர் சுக்கிரனுடன் தொடர்பு கொண்டிருந்தால் சர்க்கரை நோய் வரக் காரணமாகும். ஆனால் அந்த ஜாதகரின் வயோதிக காலத்தில் தான் அந்த நோய் வரும். காரணம் சனி ஆனவர் வயோதிகத்துக்குக் காரகர் ஆவதால் தான். சர்க்கரை நோய் காரக கிரகம் சுக்கிரன் ஆவார். இது போல் பல விதிகள் உள்ளது. 

  13. நோய் தாக்குவதற்கான நேரம் அறிதல்:

  இது ஒரு முக்கிய காரணியாகும். ஒரு நோய் நிகழ்வு பற்றி முன்னதாகவே அறியச்செய்ய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் அவரின் தசை, புத்தி காலங்களைக் கொண்டு பின் வரும் சில தகவல்களைக் கொண்டு அறியலாம். 

  1) ரோகாதிபதியின் தசை, புத்தி அந்தரங்களைக்கொண்டும் 

  2)  பாப கர்தாரி கிரகங்களின் தசை காலங்களில், 

  3)  நீச்சமடைந்த கிரகங்களின் தசா காலங்களில்,

  4) கோசார ரீதியாக லக்கினாதிபதி வலு இழக்கும் போது, 

  5) பாப கிரகங்களுக்கு மத்தியில் லக்கினாதிபதி சிக்கும் போது,

  6) ஜனன கால சந்திரனை கோசார சனி தொடும் போது (ஏழரை சனியின் மத்திம காலத்தில்),

  7) சந்திரனுக்கு எட்டாவது வீட்டிற்கு கோசார சனி வரும் போது,

  8) பாதகாதிபதி ரோகாதிபதியின் தொடர்புகொள்ளும் போது,

  9) மாரக தசையின் போது,

  10) தசா நாதனின் 8-ஆம் அதிபதியின் புத்தியின் போது,

  இவை ஒரு சிலவே. மேலும் இதனை அப்படியே ஏற்காமல் மேலும் பல, சுபர் பார்வை போன்றவற்றைக் கண்டு தீர்மானிக்கலாம். 

  ஜோதிடம் ஒரு கடல், அதில் மூழ்கி முத்தெடுப்பதென்பது எவ்வளவு கடினம் என்பதை அதனை அறிந்தவர் மட்டுமே அறிவர். மேம்போக்காக எதனையும் உடனடியாக சொல்லிவிட இயலாது. அப்படிக் கூறினாலும் அது தவறாகும் போது அதனை உரைத்தவர் அதன் பலனை அனுபவிக்க நேரிடும். 

  எந்த நோயும் தாக்காமல் இருக்க அல்லது தாக்கப்பட்ட நோயின் வீரியம் குறைய சூரிய காயத்ரி மந்திரத்தை ஜபிப்பதும், ஆதித்ய ஹ்ருதய மகா மந்திரத்தை ஜபிக்கவோ  அல்லது அதனை வீட்டில் தினமும் காலையில் ஒலிக்கச் செய்வதாலோ உடல் நலம் காக்கப்படும். 

  - ஜோதிட ரத்னா தையூர். சி.வே. லோகநாதன் 

  தொடர்புக்கு - 98407 17857

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai