
திருத்தணி கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலில் சூரிய பூஜையில் பங்கேற்ற பக்தர்கள்.
கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலில் புதன்கிழமை நடந்த முதல் நாள் சூரிய பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
திருத்தணி முருகன் கோயிலின் துணைக் கோயிலான ஸ்ரீ கோட்ட ஆறுமுக சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 13, 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் சூரிய பூஜை நடக்கிறது. அந்த வகையில், புதன்கிழமை முதல் நாள் சூரிய பூஜை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலை, 6.15 மணிக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள், மூலவர் முருகப்பெருமானின் திருப்பாதம் மீது விழுந்தது. அப்போது, மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர். இரண்டாம் நாளான வியாழக்கிழமை காலை சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனி மீதும், வெள்ளிக்கிழமை காலை மூலவரின் சிரசின் மீதும் சூரிய ஒளிக்கதிர்கள் விழும்.
இதற்கான ஏற்பாடுகளை முருகன் கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.